தென்னையில் ஊடுபயிராக இலைவாழை சாகுபடி

தென்னையில் ஊடுபயிராக, இலைவாழை சாகுபடி செய்தால் சிறந்த லாபம் பெறலாம் என தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து உடுமலை தோட்டக் கலைத்துறை உதவி இயக்குனர் இளங்கோவன் கூறியதாவது:

வாழை சாகுபடிக்கு ஆடிப்பட்டம் மிகச்சிறந்ததாகும். தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதால், தற்போது நடவு செய்யும் பயிரின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பொதுவாக தென்னையில் ஏதோ ஊடுபயிர் இருக்க வேண்டும். அது தென்னை வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

இலைவாழை, மஞ்சள், இஞ்சி, ஏலக்காய், ஜாதிக்காய், கருணைக்கிழங்கு, பைனாப்பிள், பாக்கு மற்றும் கறிப்பலா போன்றவை தென்னையின் சிறந்த ஊடுபயிர்களாகும். இலைவாழை பயிரிடும் போது தோப்புகளுக்கு இயற்கையாகவே குளிர்ந்த சூழ்நிலை கிடைக்கிறது.

ரகங்கள்

இலைவாழைக்கு, பூவன், கற்பூரவள்ளி, மொந்தன் வாழை ரகங்கள் சிறந்ததாகும். திசு வாழை அல்லது கிழங்கு மூலம் நடவு பயிரிடலாம். ஒரு ஏக்கர் தோப்பில், 4.5 அடிக்கு, 4.5 அடி இடைவெளியில் இரண்டாயிரத்து, 150 வாழைக்கன்றுகள் வரை நடவு செய்யலாம்.

தார்வாழையை விட, இலைவாழை சாகுபடி எளிதாகும். இவற்றில் மரத்துக்கு முட்டுக்கொடுக்கும் வேலை மற்றும் திருட்டு பயம் இருக்காது. காற்று, மழையால் ஏற்படும் பாதிப்புகளும் குறைவு. வாழை நடவு செய்யும் முன்பே, குழியில் 10 கிலோ தொழுஉரம் வைக்க வேண்டும். நட்டதும் பத்து கிலோ மண்புழு உரம் இடவேண்டும். பின்பு மூன்று மாத இடைவெளியில் தேவையானளவு மண்புழு உரம், யூரியா கொடுக்க வேண்டும்.

எந்த பயிராக இருந்தாலும் சொட்டுநீர் பாசனம் மிக அவசியமாகும். இதனால் தண்ணீர் சிக்கனமாவதுடன், களைகள் ஏற்படுவதும் கட்டுப்படுத்தப்படுகிறது. கரையும் உரப்பாசன முறையை பின்பற்றினால் செடிகளுக்கு தேவையான உரம் கிடைக்கும். இதில் கிழங்கு கூண்வண்டு நுாற்புழு, அசுவிணி மற்றும் இலைப்புள்ளி நோய்தாக்குதல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதனைக்கட்டுப்படுத்த செடிக்கு, 40 கிராம் குருணை மருந்து வைக்க வேண்டும்.

அறுவடை

வாழைகள் நட்டதிலிருந்து, 6 அல்லது, 7ம் மாதத்தில் இருந்து அறுவடை செய்யலாம். ஒருநாள் விட்டு ஒருநாள் அறுவடை செய்ய வேண்டும். தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் வரைக்கும் பலன் கிடைக்கும். ஒரு வாழை இலை உற்பத்தியாக ஏழு முதல், 15 நாட்கள் வரை தேவைப்படும். பூவன் ரகத்தில், 32 முதல், 36 இலைகள் கிடைக்கும்.

வாழை பராமரிப்பு மிக முக்கியமானதாகும். சுற்றிலும் ஏற்படும் பக்க கன்றுகள் அனைத்தையும் வளர்க்காமல், 4 கன்றுகள் வீதம் பராமரித்தால் போதுமானதாகும். ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையை கடைபிடிக்கும் போது, ஏக்கருக்கு இலைவாழையில் ஆண்டுக்கு, 15 லட்சம் வரை லாபம் பெறலாம்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *