தென்னையில் சத்து பற்றாக்குறை போக்கும் வழிமுறைகள்

தென்னையில் காணப்படும் சாம்பல்சத்து மற்றும் போரான் சத்து பற்றாக்குறையை போக்கும் வழிமுறை குறித்து விவசாயிகளுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. சேதுபாவாசத்திர வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை:

சாம்பல் சத்து குறைவு

 • தென்னைக்கு மற்ற சத்துக்களைவிட சாம்பல் சத்து தான் மிக அதிகமாக தேவைப்படுகிறது. இந்த சத்து குறைந்தால் தேங்காய் அளவு சிறுத்து, எண்ணிக்கையும் குறைந்துவிடும்.
 • மேல் இலைகள் பசுமையாக இருந்தாலும் அடி இலைகளில் வெளிர்பச்சை நிற புள்ளிகள் தோன்றி மஞ்சள் நிறமடைந்து பின்னர் பழுப்பு நிறமடையும்.
 • இலைகள் கீழ்நோக்கி தொங்க தொடங்கும். முதிர்ச்சியடையும் முன்பே இலைகள் உதிர்ந்து விடும்.
 • இக்குறையை போக்க 5 ஆண்டுக்கு மேல் வயதுடைய தென்னை மரத்துக்கு ஓராண்டுக்கு 50 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் யூரியா 1.300 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ, பொட்டாஷ் மூன்றரை கிலோ உரங்களை கலந்து மரத்தடியிலிருந்து 5 அடி தள்ளி வட்டமாக உரமிட்டு மண் வெட்டியால் உரத்தை மண்ணுடன் கலந்து பிறகு நீர்பாய்ச்ச வேண்டும்.
 • மேற்கண்ட உரத்தினை இரண்டாக பிரித்து ஜூன்- ஜூலை மாதத்திலும், டிசம்பர்- ஜனவரி மாதத்திலும் இரண்டு முறையாக பிரித்து இட வேண்டும்.
 • பொட்டாஷ் உரம் 2 கிலோவுக்கு பதிலாக மூன்றரை கிலோ இடுவதால் தென்னையை தாக்கும் ஈரியோபைட் சிலந்தி கட்டுப்படுத்தப்படுகிறது.

போரான்சத்து பற்றாக்குறை

 • போரான்சத்து பற்றாக்குறை ஏற்பட்டால் இளம் கன்றுகளில் இலை பிரியாமல் இருக்கும்.
 • வளரும் குருத்து இலைகள் வளர்ச்சி குன்றி இலைகள் பிரியாமல் இருக்கும்.
 • பாலையில் இளம்பிஞ்சுகள் காய்ந்து கருப்பாக காணப்படும்.
 • குரும்பைகள்  அதிகமாக கீழே உதிரும். வெற்று தேங்காய்கள் மற்றும் ஒல்லிக்காய்கள் தோன்றும்.
 • தேங்காய்களில் வெடிப்புகளும், நீளமான் எடை குறைந்த தேங்காய்கள் தோன்றும்.
 • இக்குறைகளை போக்க நன்கு வளர்ந்த தென்னை மரத்துக்கு ஆண்டுதோறும் ஒரு மரத்துக்கு ஒரு கிலோ வீதம் தென்னை நுண்ணூட்ட சத்து உரத்தை இட வேண்டும் அல்லது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தயாரிப்பான தென்னை ஊட்டச்சத்து கரைசல் (தென்னை டானிக்) மரம் ஒன்றுக்கு 200 மில்லி வீதம் 6 மாதத்துக்கு ஒரு முறை வேர் மூலம் செலுத்த வேண்டும்

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *