தென்னையும் சொட்டுநீர் பாசனமும்

தென்னை சாகுபடியில், நீர் பாசன நிர்வாகத்தை முறையாக பின்பற்றினால், அதிக  காய்களை அறுவடை செய்ய  முடியும் என வேளாண்துறை தெரிவித்துள்ளது.

உடுமலை வட்டாரத்தில், 14  ஆயிரம் எக்டர் பரப்பில், தென் னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சாகுபடியில் நீர் பாசனம், உர மேலாண்மை செய்வது குறித்து வேளாண்துறை விவசாயிகளுக்கு அறிவுரைகளை தெரிவித்துள்ளது.

 • தென்னையில் கொண்டைப்பகுதியிலுள்ள மட்டைகள், தென்னங்குலைகள், திரட்சியாக இருக்கவும், ரசாயன மாற்றங்கள், வெப்ப சமநிலை, ஒளிச்சேர்க்கை  நடக்கவும், நீர் பாசனம் இன்றியமையாதது ஆகும்.
 • சாகுபடியில், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால், மரத்தின் வளர்ச்சி குன்றி விளைச்சல் பாதிக்கும்.
 • மட்டைகள் வளைந்து தொங்குதல், அடிமட்டைகள் ஒடிந்து
 • விழுதல், குரும்பைகள், முதிர்ச்சி அடையாத இளங்காய்கள் உதிர்தல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு, பெருமளவு விளைச்சல் இழப்பு ஏற்படும்.காய்கள் சிறுத்து, கொப்பரையின் எடை குறைந்து விடும்.
 • மண்ணின் வகை, சீதோஷ்ணநிலை மற்றும் தென்னை ரகம் வயதினை பொறுத்து, சிக்கன நீர் மேலாண்மை முறைகளை பின்பற்றி விளைச்சலை அதிகரிக்கலாம்.
 • தென்னைக்கு இடைவெளியாக வரிசைக்கு வரிசை மற்றும் மரத்திற்கு மரம் 7.5 மீட்டரும் இருக்கும் நிலையில், மரத்தின் 90 சதவீதம் வேர்கள் 2 மீட்டர் ஆர வட்ட பரப்பிலேயே 12.5 சதுர மீட்டருக்குள் காணப்படுகிறது.
 • ஒரு விதையிலை தாவர இனமான தென்னையில் சல்லிவேர்கள் மட்டும் மரத்தின் அடியிலிருந்து இரண்டு மீ., ஆரத்திலும், 1.5 மீ., ஆரத்திலும் 4 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வேர்கள் சமமட்டத்திலும் பல்வேறு கோணங்களிலும் அமைந்திருக்கும்.
 • தென்னங்கன்று நடவு செய்த முதல் ஆண்டு ஒரு நாள் விட்டு ஒரு நாள் 10 லிட்டர் தண்ணீரும், மூன்று வயது வரை இளம் மரங்களுக்கு வாரம் இரு முறை 40 லிட்டரும், அதன் பின்னர் வாரம் ஒரு முறை 600 லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகிறது.

சொட்டு நீர் பாசனம்

 • சொட்டு நீர் பாசன முறையில், இருக்கும் தண்ணீரை தேவையான அளவு கொடுத்து, அதிக எண்ணிக்கையிலான மரங்களை பராமரிக்கலாம்.
 • இதனால், 30 சதவீதம் தண்ணீரை சேமிக்கலாம்.
 • கரையக்கூடிய உரங்களையும், நுண்ணூட்டத்தையும் முறையில், தேவையான அளவு அளிக்கலாம்.
 • இதனால், உரவிரயம், உரமிடும் செலவையும் குறைக்கலாம்.
 • உரிமட்டைகள், தென்னை நார்க்கழிவு ஆகியவற்றையும் பயன்படுத்தி நீர் நிர்வாகத்தை முறைப்படுத்தலாம்.

மேலும் தகவல்களுக்கு விவசாயிகள் உடுமலை வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகுமாறு வேளாண் உதவி இயக்குனர் மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமலர் 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *