தென்னை சாகுபடி டிப்ஸ்

தென்னை சாகுபடிக்கு முன்னர், மண் மாதிரி எடுத்து சோதனை செய்ய வேண்டும். இது தொடர்பாக நாகர்கோவில் வேளாண்மை இணை இயக்குநர் மு.சையது அகமது மிராஞ்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

 • தென்னை மரத்திலிருந்து ஒரு மீட்டர் தொலைவில் 0-25 செ.மீ. ஆழத்திலும், 25-50 செ.மீ. ஆழத்திலும், 50-100 செ.மீ. ஆழத்திலும் மூன்று மண் மாதிரிகள் எடுக்க வேண்டும்.
 • இவற்றை ஒன்றாகச் சேர்த்து சமப் பகிர்வு முறையில் ஒரு மண் மாதிரியை ஆய்வுக்கு தயார் செய்ய வேண்டும். ஆய்வுக்கு அனுப்பும் முன் இம் மாதிரியானது நிழலில் உலர்த்தப்பட்டு, அனுப்பப்பட வேண்டும். ஒரு ஹெக்டர் பரப்பிற்கு மூன்று முதல் 5 மண் மாதிரிகள் எடுக்கப்பட வேண்டும்.
 • மண் ஆய்வு செய்யாத இடங்களில் ஒரு ஆண்டுக்கான தழைமணி, சாம்பல் சத்துக்கள் பரிந்துரையில் கண்டவாறு கடைப்பிடிக்க வேண்டும்.
 • இதுவரை தென்னையைப் பொருத்தவரை நெட்டை ரகங்களுக்கும், நெட்டை, குட்டை ரகங்களுக்கும் பொதுவான பரிந்துரையே வழங்கப்பட்டது.தற்போது நெட்டை ரகங்களுக்கு தனிப் பரிந்துரையும், நெட்டை, குட்டை ரகங்களுக்கு தனி பரிந்துரையும் கடைப்பிடிக்கப்படுகிறது.
 • இயற்கைச் சூழலைப் பாதிக்காமல் தொடர்ச்சியாக சீரான விளைச்சலைப் பெற இயற்கை உரங்களை இடுவது மிக முக்கியம். தொடர்ந்து ரசாயன உரங்களை உபயோகிப்பதால் மண்ணின் வளம் பாதிக்கப்படுவதோடு உற்பத்திச் செலவும் அதிகரிக்கிறது.
 • விவசாயத்தில் கிடைக்கக் கூடிய கழிவுப் பொருள்களை சரியான முறையில் இயற்கை உரங்களாக மாற்றிப் பயன்படுத்துவது அவசியம்.
 • தென்னைக்கு உயிர் உரமான அசோட்டோபாக்டர் அல்லது பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிர்களை 200 கிராம் என்ற அளவில் 10 கிலோ மக்கிய சாணி எருவுடன் கலந்து இடுவதால் வேர்களில் உற்பத்தி மற்றும் மகசூல் அதிகரிக்கிறது.
 • தென்னந்தோப்பில் ஏக்கருக்கு 12-15 கிலோ சணப்பை விதைப்பு செய்து 45 நாள்களில் மடக்கி உழவு செய்யலாம். தண்ணீர் குறைவு உள்ள தோப்புகளில் தென்னையைச் சுற்றி 2 மீ. ஆரவட்டப் பாத்திக்கு சுமார் 50 கிராம் சணப்பு விதை விதைத்து அவை வளர்ந்து பூக்கும் முன் மடக்கி கொத்தி விடலாம்.
 • ஆண்டுக்கு மூன்று முறை இவ்வாறு செய்தால் போதுமான தழைச்சத்து கிடைக்கும்.
 • தென்னை நார்க்கழிவை மக்க வைத்து, மக்கிய எருவுக்குப் பதிலாக தென்னைக்கு இடலாம். மக்கிய தென்னை நார்க்கழிவு உரம் 50 கிலோ இடுவதன் மூலம் நீர்ப்பிடிப்புத் தன்மை அதிகரிக்கும். காற்றோட்டம் பெருகி வேர்கள் சுவாசிக்க உதவும்.
 • இறுகலான மண் பொலபொலப்பு தன்மை அடையும். மொத்தத்தில் மண்ணின் பௌதீகக் குணங்கள் மேம்படும்.
 • மக்க வைக்கப்பட்ட தென்னை நார்க்கழிவுவில் உள்ள தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்தின் அளவு தொழு உரத்தை விட இரு மடங்கு உயர்கிறது. மேலும் பயிருக்குத் தேவையான நுண்ணுட்டச் சத்துகளின் அளவும் அதிகரிக்கும்.
 • நன்கு பரமாரிக்கப்பட்ட ஒரு ஹெக்டர் தென்னந் தோப்பிலிருந்து கிடைக்கும் காய்ந்த ஓலைகளில் இருந்து நான்கு டன் மண்புழு கம்போஸ்ட் உரத்தை தயாரித்து மரங்களுக்கு இடலாம்.
 • தென்னை இலைகளில் லிக்னின், செல்லுலோஸ் போன்ற ரசாயனப் பொருள்கள் அதிக அளவில் உள்ளதால் ஓலைகள் இயற்கையாக மக்குவதற்கு அதிக நாள்கள் ஆவதோடு தரம் குறைந்த கம்போஸ் உரம்தான் கிடைக்கும்.
 • யுடிரல்லஸ் என்ற ஒரு வகை மண் புழுக்கள் காய்ந்த தென்னை ஓலைகளை வேகமாக மக்கச் செய்வதோடு தரம் வாய்ந்த கம்போஸ்ட் உரத்தை உருவாக்கும் திறன் கொண்டது.
 • தென்னந்தோப்புகளில் ஊடுபயிர்களாக கிழங்கு, பழம், மஞ்சள், இஞ்சி மறறும் தானியப் பயிர்கள், பயறு வகைப் பயிர்கள் மற்றும் காய்கனிப் பயிர்களை பயிரிடலாம்.
 • ஓரளவுக்கு நிழல் விழும் தென்னந்தோப்புகளில் அன்னாசிப் பயிர் நன்றாக பயிராகிறது.வாழைப் பயிர்களும் ஊடுபயிருக்கு ஏற்றது. மேலும் முல்லை வகைகள், செவ்வந்தி, கனகாம்பரம், சம்பங்கி ஹெலிகோனியா, ஆர்கிட், சைனா ஆஸ்டர், மருகு, ஆந்தூரியம் மற்றும் அலங்கார செடிகள் போன்றவற்றையும் ஊடுபயிராக சாகுபடி செய்யலாம் என்றார் அவர்.

நன்றி:தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *