தென்னை மரங்களின் நண்பன் என்ற திட்டத்தின் மூலம் வேலையில்லா இளைஞர்கள், இயந்திரம் மூலம் தென்னை மரங்களில் ஏறி வருவாய் ஈட்ட அதற்கான பயிற்சியை அளிக்கிறது வேளாண் அறிவியல் மையம்.
கிருஷ்ணகிரியை அடுத்த எலுமிச்சங்கிரி கிராமத்தில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் மையத்தின் மூலம் இயந்திரத்தின் உதவி கொண்டு எளிதில் தென்னை மரம் ஏறி வருவாய் ஈட்டுவதற்கான பயிற்சியை அளித்து வருகிறது. இதுகுறித்து அந்த மையத்தின் தலைவர் சுந்தரராஜ் தெரிவித்தது:
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 14 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
- வேலையில்லா இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையிலும், தேங்காய்களைப் பறிக்கும் வேலையாள்களின் பற்றாக்குறையைப் போக்கவும், கேரள மாநிலம், கொச்சியில் உள்ள தென்னை வளர்ச்சி வாரியமும், கிருஷ்ணகிரி, எலுமிச்சங்கிரியில் உள்ள அறிவியல் மையமும் இணைந்து தென்னை மரங்களின் நண்பன் என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன.
- 17 வயது முதல் 40 வயது வரையுள்ள, 7-ஆம் வகுப்பு வரையில் கல்வி பயின்ற ஆண், பெண் இருவரும் இந்த பயிற்சியைப் பெறத் தகுதியானவர்கள். அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களைக் கொண்டு, இயந்திரத்தின் மூலம் தென்னை மரம் ஏறுவது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
- மேலும், இயந்திரத்தைக் கையாள்வது, பராமரிப்பது, தொழில் நுட்பங்கள் உள்ளிட்டவை குறித்தும் பயிற்சி வழங்கபடுகிறது.
- இவை மட்டுமல்லாமல், தென்னை மரங்களைத் தாக்கும் நோய்கள், பூச்சித் தாக்குதலின் அறிகுறிகள், மேலாண்மை முறைகள், தென்னை மரத்தின் ரகங்கள், சிறந்த தென்னங் கன்றுகளைத் தேர்வு செய்வது குறித்தும், தென்னை சாகுபடிக்கான தொழில்நுட்பங்கள், நீர் மேலாண்மை, உர மேலாண்மை, மனிதவள மேம்பாட்டுக்கான தலைமை பண்புகள், கால மேலாண்மை போன்றவை குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
- இந்தப் பயிற்சியில் பங்கேற்போருக்கு ஓராண்டுக்கான இலவச காப்பீடு, ரூ.4 ஆயிரம் மதிப்பிலான தென்னை மரம் ஏறும் இயந்திரம், பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
- 6 நாள்கள் பயிற்சி வழங்கப்படும் நிலையில், இருப்பிடம் மற்றும் உணவு இலவசமாக அளிக்கப்படுகிறது.
- சாதாரணமாக ஒரு தொழிலாளி ஒரு நாளைக்கு 30 மரங்கள் மட்டுமே ஏற இயலும். ஆனால், இயந்திரத்தைப் பயன்படுத்தி மரம் ஏறும் பயிற்சி பெற்ற நபர் ஒரு நாளைக்கு இயந்திரத்தின் மூலம் குறைந்தது 50 முதல் 70 மரங்கள் ஏற இயலும். உடலுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாது.
- ஒரு மரத்துக்கு ஏறி இறங்க ரூ.30 கூலி எனக் கொண்டால், குறைந்தது ஒரு நாளைக்கு ரூ.1,500 வருவாய் ஈட்டலாம்.
- நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சமாக ரூபாய் ஆயிரம் வருவாய் உறுதியாக ஈட்டலாம் எனத் தெரிவித்தார்.
முதலீடு இல்லாமல் நல்ல வருவாய் தரக் கூடிய இந்த திட்டம் குறித்து ஆர்வம் உள்ளவர்கள் வேளாண் அறிவியல் மையம், எலுமிச்சங்கிரி, கிருஷ்ணகிரி என்ற முகவரியிலோ அல்லது வேளாண் அறிவியல் மையத்தை 04343296039 , 8098280123 என்ற எண்களிலோ அல்லது வேளாண் அறிவியல் மையத்தின் தலைவரை 9443888644 என்ற கைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்