நீரா – சட்டமன்ற தீர்மானத்திற்கு காத்திருக்கும் தென்னை விவசாயிகள்

கேரள மாநிலத்தில் இருப்பது போல, தமிழ்நாட்டிலும் தென்னை மரங்களில் இருந்து நீரா பானம் இறக்கி விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்பது தென்னை விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை. அதை ஏற்றுகொண்ட  தமிழக முதல்வர் பழனிசாமி தமிழ்நாட்டில் தென்னை மரங்களில் இருந்து நீரா இறக்கி விற்பனை செய்ய அனுமதி என்கிற அறிவிப்பு ஒன்றை கடந்த மாதம் வெளியிட்டார்.

இந்த அறிவிப்பு தென்னை விவசாயிகளின் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இந்த அறிவிப்பை உடனடியாக நடை முறைப்படுத்த முடியாதபடி சட்டச்சிக்கல் உள்ளது. நடக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அந்த சட்ட திருத்தம் நிறைவேற்றப்படுமா? என்கிற கேள்வியும் தென்னை விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

இது குறித்து தமிழக விவசாயிகள் விழிப்பு உணர்வு இயக்கத்தின் மாநிலத்தலைவர் உடுமலை வேலாயுதம் என்பவரிடம் பேசினோம்.

தென்னை மரத்தின் பாளைகளில் இருந்து பெறப்படும் ஒருவகை பானம்தான் நீரா. ஏற்கெனவே தென்னை மரங்களில் இருந்து பதநீர், கள் ஆகிய பானங்களை உற்பத்தி செய்யப்பட்டுவந்தது. இதில், கள் இறக்க தமிழ்நாட்டில் அனுமதி இல்லை என்பதால் இங்குள்ள தென்னை மரங்களில் தற்போது பதநீர் மட்டும் இறக்கப்படுகிறது.

Courtesy: Pasumai Vikatan

கள்ளுக்கும் பதநீருக்கும் இடைப்பட்ட பானம் தான் நீரா.

சீவிய பாளைகளில் பொருத்தப்படும் மண்கலயங்களுக்குள் சுண்ணாம்பு பூசப்பட்டு, அதில் கசிந்து வழியும் தென்னைப்பால் பதநீர் எனப்படுகிறது.

சுண்ணாம்பு பூசப்படாத கலயத்தினுள் கசிந்து சேகரமாகும் திரவம் கள் எனப்படுகிறது.

பசும்பால் நிறத்தில் இருக்கும் கள் ஒரு போதை தரும் பானம். பதநீரை நேரடியாக பருகலாம். காய்ச்சி அச்சில் ஊற்றி கருப்பட்டியும் உற்பத்தி செய்யலாம்.

ஆனால், அதே சமயம் நீரா என்பது வேறு. 5 டிகிரி செல்சியஸ் குளிர் நிலையில் எப்போதும் இருக்க வேண்டிய பானம்தான் நீரா. இதை தென்னை மரங்களில் இருந்து இறக்கி பதப்படுத்துவது மிக துல்லிய தொழில் நுட்பமாகும். சதுரமான தெர்மாகோல் பெட்டிக்குள் ஐஸ்கட்டிகளை நிரப்பி, அந்தப்பெட்டியின் நடுவில் கலயத்தை பொருத்தி , கலயத்தின் வாயை நன்றாக மூடி, அதில் ஒரு குழாயை பொருத்தி அந்த குழாயை பாளையில் செருகி விடவேண்டும். கலயத்தினுள் வெளிக்காற்று, வெளிச்சம், கிருமிகள் எதுவும் போகமால் பார்த்துக்கொள்ளவேண்டும்.

பாளைகளில் இருந்து வடியும் திரவம் குளிர்ந்த கலயத்தினுள் சேகரமாகும் இதுதான் நீரா. சேகரமாகும் நீரா நிரம்பிய கலயங்களை கீழ் இறக்கி , பீரிஸர் பொருத்தப்பட்ட வேன்களில் ஏற்றி, அருகில் இயங்கும் குளிரூட்டும் நிலையத்துக்கு கொண்டுசென்று, பதப்படுத்தி பாட்டில்களில் அடைத்து பீரிஸர் வசதியுள்ள அங்காடிகளில் வைத்து விற்பனை செய்யலாம். எக்காரணம் கொண்டும் நீரா பானத்தை 5 டிகிரி செல்சியஸ் குளிரில் இருந்து வெளியில் எடுக்கக்கூடாது. அப்படி எடுத்தால் வெளியில் உள்ள பாக்டீரியாக்கள் உள் புகுந்து நீரா புளித்த கள்ளாக மாறிவிடும்.

சரியான தொழில் நுட்பத்தைக்கொண்டு நீரா இறக்கி விற்பனை செய்யும் பட்சத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் குளிர் பானங்களுக்கு மாற்றாக இது விளங்கும். நல்ல முறையில் பராமரிப்பு செய்யப்படும் தென்னை மரம் ஒன்றில் இருந்து நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சமாக 2 லிட்டர் நீரா கிடைக்கும். கேரள மாநிலத்தில் ஒரு லிட்டர் நீரா விவசாயிகளிடம் இருந்து லிட்டர் 30 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. மரம் ஒன்றில் இருந்து தினமும் 60 ரூபாய் வருமானம் பார்க்க முடியும். மாதம் ஒன்றுக்கு 1,800 ரூபாய் கிடைக்கும்.

அதே சமயம், தென்னை மரம் ஒன்றில் இருந்து அதிகபட்சமாக ஆண்டுக்கு சராசரியாக 140 தேங்காய்கள்தான் அறுவடை செய்யமுடியும். சராசரி விலையாக தேங்காய் ஒன்றுக்கு 10 ரூபாய் என்று வைத்துக்கொண்டாலும், ஆண்டுக்கு 1,400 ரூபாய்தான் வருமானமாக பெறமுடியும். தேங்காய் விலையை ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 10 மடங்கு கூடுதல் வருமானம் கொடுக்கும் பானம்தான் நீரா.
மேலும், இதைக் காய்ச்சி மதிப்புக்கூட்டிய பொருளாக மாற்றி, சர்க்கரை, மிட்டார் போன்ற உணவுப்பொருள்களையும் தயாரிக்க முடியும்.

ஏற்றுமதி தரம் வாய்ந்த நீரா சர்க்கரை கிலோ 750 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

அழிந்து வரும் தென்னை விவசாயத்தை காப்பாற்றும் நீரா சட்டத்திருத்தம் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே ஒட்டு மொத்த விவசாயிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

நீரா இறக்க அனுமதியில் என்ன சிக்கல்? 

மத்திய தென்னை வளர்ச்சி வாரியத்தின் சென்னை மண்டல இயக்குநர் பால சுதாகரியிடம் இது பற்றி கேட்டோம்.

தமிழ்நாட்டில் நீரா இறக்க அனுமதி என்கிற அறிவிப்பை முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தாலும், ஏற்கெனவே உள்ள நடைமுறைச்சட்டம் அதற்குத் தடையாக உள்ளது.1937 ஆம் ஆண்டின் தமிழக அரசின் மது விலக்கு சட்டம் 11 மற்றும் 19 ஆம் பிரிவுகளில் ‘கள்‘ என்கிற போதைப் பொருள் பட்டியலில் நீரா உள்ளது. அந்த பட்டியலில் இருந்து நீரா நீக்கப்படவேண்டும்.  சட்டமன்ற கூட்டத்தொடரில் ஒப்பதலுக்கு வைக்கப்பட்டு, பெரும்பான்மை உறுப்பினர்கள் ஏகமனதாக ஆதரவு கொடுத்து , பிறகு சட்டத்திருத்தம் கொண்டுவந்தால் மட்டுமே தமிழக முதலமைச்சர் கொடுத்த அனுமதி நடை முறைக்கு வரும்.

மேலும், நீரா இறக்க தடையாக உள்ள அப்காரி சட்டம் குறித்து,  நீண்டகாலமாக நீரா இறக்க அனுமதி கேட்டு போராடி வரும் ‘ பெரியசாமி கூறியது:

நீரா ஒரு ஊட்டச்சத்து மிகுந்த உடல்நலப்பானமாகும். இதில் ஆல்கஹால் கிடையாது. ஆனால், அன்றைய ஆங்கிலேய ஏகாதி பத்திய அரசு கொண்டுவந்த அப்காரி சட்டத்தில் நீரா, கள் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. கள் என்பது 7 முதல் 9 சதவிகிதம் வரை ஆல்கஹால் அடங்கியுள்ள புளித்த பதநீராகும். எனவே , நீரா இறக்கவுள்ள அப்காரி சட்டத்தை இந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் திருத்தம் செய்து நீரா இறக்க கொடுத்த அனுமதியை உண்மையாக்க வேண்டும் என்பதே..ஆயிரக்கணக்கான தென்னை விவசாயிகளின் எதிர்பார்ப்பு ஆகும்.”

செய்யுமா தமிழக அரசு?

நன்றி: பசுமை விகடன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *