நிலக்கடலை/மணிலா சாகுபடி டிப்ஸ்

நிலக்கடலை பயிரிட்டுள்ள விவசாயிகள் அதிக மகசூல் பெறும் வழிமுறைகளை  வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெண்ணந்தூர் வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் கு.சீனிவாசன் தெரிவித்துள்ளது:

 •  நிலக்கடலை பயிர் நடப்பு பருவத்தில் வெண்ணந்தூர் வட்டாரத்தில் சுமார்  2,000 ஏக்கரில்  மானாவாரியாக பயிர் செய்யப்பட்டுள்ளது.
 • நிலக்கடலை பயிரில் அதிக மகசூல் பெற ஜிப்சம் மற்றும் ஊட்டச்சத்து கரைசலை தெளிக்க வேண்டும்.
 •  ஜிப்சத்தை பயிருக்கு இடுவது மிகவும் அவசியமானதாகும்.
 • ஜிப்சத்தில் சுண்ணாம்புச் சத்து 24 சதவீதமும், கந்தகச்சத்து 18 சதவீதமும் உள்ளது.
 • சுண்ணாம்புச் சத்து காய்கள் திரட்சியாகவும், அதிக எடையுடையதாகவும் உருவாக உதவுகிறது.
 • கந்தகச்சத்து நிலக்கடலையில் எண்ணெய் சதவிகிதத்தை அதிகரிக்கிறது.
 •   ஒரு ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சத்தை அடி உரமாகவும், 45-ஆம் நாளில் 80 கிலோ ஜிப்சத்தை மேலுரமாகவும் இடவேண்டும்.
 • செடிகளை சுற்றி ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும்.
 • செடிகளை சுற்றி ஜிப்சம் இடும்போது நிலத்தில் போதிய ஈரம் இருக்க வேண்டும்.
 • மானாவாரி நிலங்களில் செடியின் வயது 35 முதல் 55 நாள் வரை இடைவெளியில் எப்போது மழை பெய்தாலும் ஜிப்சம் இட்டு மண்ணை அணைக்கலாம்.
 • சுண்ணாம்புச் சத்து உள்ள நிலங்களில் ஜிப்சம் இடுவதை தவிர்ப்பது நல்லது.

 

 • ஒரு மணிலா செடி தனது வளர்ச்சிப் பருவத்தில் 200-க்கும் மேற்பட்ட பூக்களை உற்பத்தி செய்கின்றன.
 • பூத்த பூக்களில் பெரும்பான்மையானவை காயாகாமல் உதிர்ந்து விடுகின்றன.
 • சுமார் 20 சதவீத பூக்களே காய்களாகின்றன.  இதனால் உற்பத்தி குறைகிறது.
 • பூக்கள் உதிராமல் இருக்க கையாளும் நல்ல யுக்தியே ஊட்டச்சத்து கரைசல் ஆகும்.
 •  ஒரு ஏக்கருக்கு தேவையான டை-அம்மோனியம் பாஸ்பேட்  ஒரு  கிலோவினை இரவு முழுவதும் ஒரு குடம் தூய தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலை அதனை எடுத்து வடிகட்டி இந்தக் கரைசலுடன் பொடி செய்யப்பட்ட 400 கிராம் அம்மோனியம் சல்பேட் மற்றும் 200 கிராம் போராக்ஸ் மற்றும் 180 மில்லி பிளானோபிக்ஸ் பயிர் ஊக்கியை கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
 •   ஒரு ஏக்கருக்கு கைத்தெளிப்பானால் தெளிப்பதற்கு 200 லிட்டர்  தண்ணீர் தேவைப்படும்.
 • ஊட்டச்சத்து கரைசல் கைத்தெளிப்பானால் மட்டுமே தெளிக்க வேண்டும். விசைத்தெளிப்பானால் தெளிக்கக் கூடாது.
 • மேலும், தேவைப்படும் தொழில்நுட்ப தகவலுக்கு வெண்ணந்தூர் மற்றும் அத்தனூர் வேளாண்மை விரிவாக்க மையங்களை விவசாயிகள் அணுகலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *