4 ஏக்கர்… 120 நாள்கள்… ரூ.2 லட்சம்! லாபம் தரும் குத்துக்கடலை

ண்டு முழுவதும் தேவையும் சந்தை வாய்ப்பும் இருக்கும் விளைபொருள்களில் ஒன்று நிலக்கடலை.

எண்ணெய் எடுக்க, சட்னி தயாரிக்க, உணவுப் பதார்த்தங்கள் செய்ய… எனப் பலவிதங்களில் நிலக்கடலை பயன்படுகிறது. இறவை, மானாவாரி ஆகிய இரண்டு முறைகளிலுமே நிலக்கடலைச் சாகுபடி செய்யப்பட்டுவருகிறது. இதற்குச் சத்தான சந்தை வாய்ப்பு இருப்பதால், பெரும்பாலான மானாவாரி விவசாயிகளின் தேர்வாக இருக்கிறது நிலக்கடலை. அந்த வகையில், தொடர்ச்சியாக இயற்கை முறையில் மானாவாரிப் பயிராக நிலக்கடலையைச் சாகுபடி செய்து வருகிறார் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி பி.ஆர்.சுப்பிரமணியன்.

மானாவாரி துவரை பற்றிய கட்டுரை மற்றும் பஞ்சகவ்யா தொடர் ஆகியவைமூலம் பசுமை விகடன் வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்தான் சுப்பிரமணியன். அன்னூர் அடுத்துள்ள பட்டக்காரன்புதூர் கிராமத்தில் சுப்பிரமணியனின் தோட்டம் இருக்கிறது. ஒரு முற்பகல் வேளையில் வயலில் மும்முரமாய் வேலை செய்துகொண்டிருந்த சுப்பிரமணியனைச் சந்தித்தோம். மகிழ்ச்சியுடன் நம்மை வரவேற்ற சுப்பிரமணியன், வேலைகளை முடித்துவிட்டு நம்முடன் பேச ஆரம்பித்தார்.

 

“இருபது வருஷமா இயற்கை விவசாயம் செஞ்சிட்டிருக்கேன். பட்டம் தவறாம துவரை, பாசிப்பயறு, நிலக்கடலைனு மாத்தி மாத்தி மானாவாரியில விதைச்சிடுவேன். பருவமழை கைகொடுத்தா நல்ல மகசூல் கிடைக்கும். மழை கிடைக்காட்டியும் கவலைப்பட மாட்டேன். ‘ஐஸ் தண்ணீர் தெளிப்பு’ முறையைச் செயல்படுத்திப் பயிரைக் காப்பாத்திடுவேன். நாலு ஏக்கர் நிலத்துல நிலக்கடலை விதைச்சிருந்தேன். இப்போதான் அறுவடை நடந்திட்டிருக்கு. போன 3 வருஷத்துல வடகிழக்குப் பருவமழை, தென்மேற்குப் பருவமழை ரெண்டுமே சரியா கிடைக்கல. கிணறுகளெல்லாம் வறண்டு போனதால, இறவை விவசாயம்கூடச் செய்ய முடியாம போயிடுச்சு. இந்த வருஷம் நல்ல மழை கிடைச்சதால, மானாவாரி விவசாயம் படு ஜோரா நடந்திட்டிருக்கு” என்ற சுப்பிரமணியன் நிலக்கடலை வயலுக்குள் அழைத்துச் சென்று காட்டியபடியே பேச ஆரம்பித்தார்.

“இது ‘குத்துக் கடலை’ங்கிற பாரம்பர்ய ரகம். கிட்டத்தட்ட 50 வருஷமா இந்த ரகத்தைத்தான் சாகுபடி செஞ்சிட் டிருக்கேன். ஒவ்வொரு போகம் விதைக்கும்போதும் அடுத்த போகத்துக்கான விதையை எடுத்து வெச்சிக்குவேன். நல்லா வெளைஞ்ச கடலைகள்ல பொக்கு இல்லாத திறட்சியான காய்களைத் தேர்வு செஞ்சு, போதுமான அளவு காயவெச்சு, மூட்டை பிடிச்சு வெச்சிடுவேன். மூட்டைகள்ல ஈரக்காத்துத் தாக்காம வெச்சிக்கிட்டா, பூஞ்சண பாதிப்பு இல்லாம அப்படியே இருக்கும். போன போகத்துல எடுத்து வெச்ச விதைக்கடலையைச் சேமிச்சு வெச்சிருந்தேன். இந்த வருஷம் மழை நல்லா இருந்துச்சு. அதனால, ஆனிப்பட்டத்துல விதைக்கலாம்னு முடிவு செஞ்சேன். கடலைகளைக் கையால உடைச்சு விதையெடுத்து விதைச்சேன். ஒரு ஏக்கர்ல விதைக்க 50 கிலோ விதைப் பருப்பு தேவைப்படும். விதைச்ச 120 நாள்ல அறுவடைக்கு வந்துடும். ஒரு ஏக்கர் நிலத்துல 1,200 கிலோவில் இருந்து 1,500 கிலோ வரை பச்சைக்காய் மகசூல் கிடைக்கும். 1,000 கிலோ பச்சைக்காயைக் காய வெச்சா 800 கிலோ கடலை கிடைக்கும். கடலையைப் பிரிச்ச பிறகு கிடைக்கிற கடலைக்கொடியைக் காயவெச்சு ஆடு, மாடுகளுக்கு உலர் தீவனமாகப் பயன்படுத்திக்கலாம்” என்ற சுப்பிரமணியன் மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொன்னார்.

“பாரம்பர்ய ரகங்கிறதால விதைக்கடலையாவே விற்பனை செய்ய முடியுது. கடலையைக் காயவெச்சு இருப்பு வெச்சிடுவேன். பிறகு, எனக்குத் தேவையான விதைக்கடலையை எடுத்து வெச்சுகிட்டு, மீதியை விற்பனை செஞ்சிட்டிருக்கேன். இன்னிக்கு விலை நிலவரப்படி கிலோ 70 ரூபாய்ல இருந்து 80 ரூபாய் வரை விற்பனையாகுது. நாலு ஏக்கர் நிலத்துல மொத்தம் 6,000 கிலோ பச்சைக்காய் மகசூல் ஆகியிருக்கு. அதைக் காய வெச்சா 4,800 கிலோ காய்ஞ்ச கடலை கிடைக்கும். அதைக் கிலோ 70 ரூபாய்னு விற்பனை செஞ்சாலே 3,36,000 ரூபாய் வருமானம் கிடைச்சிடும். இதுவரை 1,32,000 ரூபாய் செலவாகியிருக்கு. அதைக் கழிச்சா 2,04,000 ரூபாய் லாபமா நிக்கும். எப்படிப் பார்த்தாலும் ஒரு ஏக்கருக்கு 50,000 ரூபாய்க்குமேல லாபம் கிடைச்சிடும்” என்ற சுப்பிரமணியன் நிறைவாக,

“அந்தக்காலத்துல பட்டம் தவறாம பருவமழை கிடைச்சது. அதனால, மானாவாரி விவசாயம்தான் நடந்துச்சு. விதைச்சு விட்டுட்டு வீட்டுக்கு வந்தா, அறுவடைக்குத்தான் வயலுக்குப் போவோம். இயற்கையாவே எல்லாம் நடந்துடும். ஆடு மாடுகளைக் கிடை அடைச்சா நிலத்துக்கு அடியுரம் கிடைச்சுடும். மழையானது பாசனம் பண்ணிடும். பறவைகள் பூச்சிகளை அழிச்சிடும். அப்போ உண்மையான இயற்கை விவசாயம் நடந்துச்சு. ஆனா, இப்போ காலச் சூழ்நிலை மாறிட்டதால பூச்சிகளை அழிக்க, நோய்களைத் தடுக்க சில யுக்திகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கு. நம்மாழ்வார், பாலேக்கர் மாதிரியான இயற்கை வேளாண் வழிகாட்டிகள் அதையும் நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்காங்க. அதையெல்லாம் கடைப்பிடிச்சுத் தற்சார்பு விவசாயம் செய்யறதுதான் லாபம் சம்பாதிக்கிறதுக்கான வழி” என்றார்.

மானாவாரி முறையில், ஒரு ஏக்கர் நிலத்தில் நிலக்கடலைச் சாகுபடி செய்யும்முறை குறித்துச் சுப்பிரமணியன் சொன்ன தகவல்கள் இங்கே…

தேர்வுசெய்த ஒரு ஏக்கர் நிலத்தில் மாசி, பங்குனி, சித்திரை ஆகிய மூன்று மாதங்களிலும் ஒவ்வொருமுறை கோடை உழவுசெய்து வைக்க வேண்டும். கோடை உழவுமூலமாக மண்ணிலுள்ள கூட்டுப்புழுக்கள் மற்றும் களைச்செடிகள் ஆகியவை அழியும். மழை பெய்யும்போது மழைநீர் நிலத்துக்குள் இறங்க ஏதுவாகவும் இருக்கும்.

வைகாசி மாதத்தில்… 5 டன் தொழு உரத்துடன் 2 டன் மட்கிய தென்னைநார்க் கழிவுத்தூளைக் கலந்து நிலத்தில் பரவலாகக் கொட்டி நன்கு உழ வேண்டும். தென்னை நார்க்கழிவு மண்ணில் ஈரப்பதத்தைக் காப்பதோடு, பயிருக்கு உரமாகவும் இருக்கும். ஆனி மாதத்தில் மழை அறிகுறியை வைத்து… மாடுகள் பூட்டிய கலப்பைமூலம் உழவடித்து, சால் முறையில் விதைகளை விதைக்க வேண்டும். ஒரு விதைக்கும் இன்னொரு விதைக்கும் 10 சென்டிமீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். விதைக்கும்முன் விதைநேர்த்தி அவசியம். 10 கிலோ விதைக்கு 100 கிராம் சூடோமோனஸ், 40 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி என்ற விகிதத்தில் கலந்து வைத்துக்கொண்டு, அதில் விதைகளைப் புரட்டி எடுத்து விதைக்க வேண்டும்.

விதைத்த 20-ம் நாளில் முளைத்து இலைவிடும். அந்தச் சமயத்தில் களைகளை அகற்ற வேண்டும். மறுநாள் அதிகாலையில், 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற விகிதத்தில் கலந்து, செடிகள் முழுவதும் நனையும்படி தெளிக்கவேண்டும். கிடைக்கும் பருவமழையைப் பொறுத்துத்தான் செடிகளின் வளர்ச்சி இருக்கும். மழை கிடைக்காவிடில் இலைத்தேமல் நோய் தாக்க வாய்ப்புகள் உண்டு. போதிய மழை கிடைக்காமல் செடிகள் வாடும்போது… 200 லிட்டர் தண்ணீரில் 5 கிலோ ஐஸ்கட்டியைப் போட்டுக் கரைத்து, அந்தக் குளிர்ச்சியான தண்ணீரைப் புகைபோலச் செடிகள்மீது தெளித்தால், உடனடியாக மலர்ந்துவிடும்.

விதைத்த 30-ம் நாளில் 50 கிலோ தொழு உரத்துடன் 50 கிலோ சலித்த மணலைக் கலந்து வயலில் இறைத்து விட வேண்டும். இது வேர் அழுகல் நோயைத் தடுக்கும். 60-ம் நாளில் 2 டன் சாண எரிவாயுக் கழிவுத்தூளை வயலில் பரவலாக இட வேண்டும். எரிவாயுக்கழிவு கிடைக்காதவர்கள் ஏதாவதொரு இயற்கை இடுபொருளைப் பயன்படுத்தலாம்.

செடிகளில் பூச்சிகள், புழுக்கள் தென்பட்டால்… 4 லிட்டர் வேப்பெண்ணெய், 1 லிட்டர் புங்கன் எண்ணெய், சிறிதளவு காதிசோப் கரைசல் ஆகியவற்றைக் கலந்து வைத்துக்கொண்டு 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி எண்ணெய்க் கரைசல் என்ற விகிதத்தில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம். 100 நாளுக்குமேல் இலைகள் வெளிர ஆரம்பிக்கும். அதற்குப் பிறகு சில செடிகளைப் பிடுங்கிப் பார்த்துக் காய் முற்றியதை உறுதி செய்துகொண்டு அறுவடை செய்யலாம். சரியான நேரத்தில் மழை கிடைத்து வந்தால், 110-ம் நாளுக்குமேல் அறுவடைக்கு வந்துவிடும்.

நிலக்கடலையில் உடல் நலனுக்குத் தேவையான ஃபோலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம் ஆகியவை அடங்கியுள்ளன. தொடர்ந்து நிலக்கடலை சாப்பிட்டுவரும் பெண்களுக்குக் கருப்பைக் கட்டி, மார்பகப் புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கப்படுகின்றன.

மேலும், பித்தப்பைக்கல், எலும்புத்துளை நோய், இதயநோய் ஆகியவற்றைத் தடுக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்கு உண்டு.

தொடர்புக்கு:
பி.ஆர்.சுப்பிரமணியன்,
செல்போன்: 0989450518

நன்றி: பசுமை விகடன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *