கோடையிலும் நிரம்பித் ததும்பும் ராமநாதபுரம் செவல்பட்டி ஊரணி!

றண்ட பூமியான ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல நூறு கிராமங்கள் தண்ணீர்த் தேவைக்காகக் கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கும் நிலையில், எப்போதாவது பெய்யும் மழை நீரைச் சேமித்துவைத்து குடிநீர்ப் பஞ்சத்தைப் போக்கி முன்மாதிரி கிராமமாகத் திகழ்ந்துவருகிறது, `செவல்பட்டி’ கிராமம்.

ராமநாதபுரம் மாவட்டத்தின் எல்லையோர கிராமமாக அமைந்துள்ளது, செவல்பட்டி கிராமம். சாயல்குடியிலிருந்து சுமார் 14 கி.மீ தூரத்தில் உள்ள இந்தக் கிராமத்திலிருந்து 4 கி.மீ. தூரம் சென்றால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேம்பார் கடற்கரைப் பகுதி வந்துவிடும்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவரும் இந்தக் கிராமத்தின் பிரதான தொழில், மிளகாய் விளைவித்தல் ஆகும். இவற்றுடன் கம்பு, சோளம், கேழ்வரகு, உளுந்து, மல்லி போன்ற சிறுதானிய வகைகளும் விளைவிக்கப்படுகின்றன. வான்மழையை மட்டுமே நம்பியுள்ள இந்தக் கிராமத்தில், கடந்த 3 ஆண்டுகளாக மழை பொய்த்துப்போனதால், மிளகாய் விவசாயமும் முடங்கிப்போனது. காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின்மூலம் வழங்கப்படும் தண்ணீரும், மாதத்தில் 10 நாள்களுக்கும் குறைவாகவே விநியோகிக்கப்படுகிறது.

ராமநாதபுரம் செவல்பட்டி ஊரணி

தண்ணீரின்றி விவசாயம் முடங்கிப்போன நிலையிலும், காவிரிக் குடிநீர் முழுமையாக விநியோகிக்கப்படாத நிலையிலும் குடிநீர்ப் பஞ்சம் தங்கள் கிராமத்துக்குள் தலைகாட்ட விடாதபடி பல ஆண்டுக்காலமாகச் சமாளித்து வருகின்றனர், செவல்பட்டி கிராம மக்கள். அதற்கு அடிப்படையாக விளங்குவது, இங்குள்ள செவல்பட்டி பஞ்சாயத்து ஊரணி. ஊரணி என்றால் மனிதர்களுடன் கால்நடைகளும் இணைந்து பயன்படுத்தும் இடம் எனக் காலகாலமாக இருந்துவரும் நடைமுறைக்குத் தடை விதித்ததன் மூலம் தங்கள் குடிநீர்த் தேவையைத் தீர்த்துக் கொள்கின்றனர்.

செவல்பட்டி கிராமத்தின் முன்னோர்கள், ஊர்கூடி தங்களது கிராமத்தில் உள்ள இந்த ஊரணியைத் தூர்வாரி ஆழப்படுத்தினர். பக்கத்து மாவட்டங்களில் பெய்யும் மழைநீரை, இந்த ஊரணிப் பகுதியில் அமைந்துள்ள கன்னி மலைப்போடை, ஊடோடை, கஞ்சநாயக்கன் பட்டி ஓடை ஆகியவற்றின் வழியாகத் தங்கள் ஊரணியில் சேமிக்கின்றனர். இதனால் கோடைக்காலத்திலும் முழு அளவில் நீர் நிறைந்து ததும்புகிறது, செவல்பட்டி ஊரணி.

இந்த ஊரணியையும், அதில் உள்ள நீரையும் பாதுகாக்கும் வகையில் ஊரணியைச் சுற்றிலும் முள்வேலிகளை அமைத்துச்  சுகாதாரத்தைப் பேணி வருகின்றனர். இந்த ஊரணியில் குளிப்பதற்கோ, துணி துவைப்பதற்கோ அல்லது ஆடு, மாடுகளைக்  குளிப்பாட்டுவதற்கோ அனுமதி கிடையாது. மேலும், ஊரணிக் கரையினைச் சுற்றிலும் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகின்றனர். குடிநீர்த் தேவையைத் தவிர்த்து மற்ற தேவைகளுக்குப் பயன்படுத்தாத வகையில், மிகவும் கட்டுப்பாட்டு உணர்வுடனும் கிராம ஒற்றுமையுடனும் செவல்பட்டி கிராம மக்கள் இந்த ஊரணியைப் பராமரித்து வருகின்றனர்.

கம்பி வேலியிடப்பட்ட செவல்பட்டி ஊரணி

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக நிலவிவரும் வறட்சியால், விவசாயம் பொய்த்துப்போனது மட்டுமல்லாமல் குடிநீருக்காகக் காத்துக் கிடக்கும் நிலை உள்ளது. இது, கோடைக்காலங்களில் குடிநீருக்காக மக்களைப் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ளது. இதை உணர்ந்த செவல்பட்டி மக்கள், ஊரணி அமைத்து தங்கள் தண்ணீர்த் தேவையைத் தீர்த்துக்கொள்வதுடன், எப்போதாவது பெய்யும் மழைநீரைச் சேமிக்க, தங்கள் கிராமத்தில் கட்டப்படும் புதிய வீடுகளில் மழைநீர் சேமிப்பு ஏற்பாட்டினையும் மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து செவல்பட்டி கிராமத்தினர் கூறும்போது, “எங்கள் கிராமம் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளதால், வீடுகளில் தோண்டும் கிணறுகளில்கூட உப்புத்தன்மை அதிகமாக இருக்கிறது. இதனால் அந்த நீரைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அரசால் வழங்கப்படும் காவிரிக் குடிநீரும் மாநகராட்சியில் 10 நாள்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே, குடிநீருக்குச் சிரமப்படும் நிலை இருந்துவந்தது. இதற்கு மாற்று ஏற்பாடாக, எங்கள் கிராமத்தில் உள்ள அனைவரும் ஒன்றுசேர்ந்து பஞ்சாயத்துடன் இணைந்து இந்த ஊரணியை ஏற்படுத்தினோம். இதன்மூலம், மழைக்காலங்களின்போதும் பக்கத்து மாவட்டங்களில் மழை பெய்யும்போதும் ஓடைகளின் வழியாக வரும் மழை நீரை முறையாகச் சேமித்து, குடிநீருக்காகப் பயன்படுத்த முடிவெடுத்தோம். பின்பு, பாதுகாப்புடனும், சுகாதாரத்துடனும் செயல்படுத்தத் தொடங்கினோம். இதனால் கோடைக்காலத்திலும் தண்ணீர்ப் பஞ்சம் இல்லாமல் எங்கள் கிராமம் இருக்கிறது” என்றனர்.

செவல்பட்டி கிராமத்தைப் போன்று மற்ற கிராமங்களும் தங்களது குடிநீர்த் தேவையை முழுமையாகப் பூர்த்திசெய்துகொள்ள தங்களது கிராமத்தில் உள்ள ஊரணியைத் தூர்வாரி மழைக்காலத்தில் பெய்யும் மழைநீரைச் சேமித்துவைத்து, முள்வேலிகளை அமைத்து  சுகாதாரமான முறையில் பயன்படுத்துவதன்மூலம் எந்த ஒரு வறட்சிக் காலத்திலும் தண்ணீருக்காகக் கண்ணீர் விடும் தேவை இருக்காது என்பதைச் சாதித்துக் காட்டியுள்ளனர், இந்தக் கிராம மக்கள்.

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *