தினம் 5,000 லிட்டர் குடிநீர்’ – மழைநீரில் இருந்து சேமித்த விவசாயி!

`தண்ணீரைப் பூமியில் தேடக் கூடாது வானத்தில் இருந்து கொண்டுவர வேண்டும்” என இயற்கை வேளாண் விஞ்ஞானியின் கூற்றுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் 25 வருட ஆனந்த விகடன் வாசகரும் இயற்கை விவசாயியுமான காசிநாதன். நாள்தோறும் 5,000 லிட்டர் அளவு குடிநீரை மக்களுக்கு விலையில்லாமல் அளித்து வருகிறார் அவர். மழைநீர் சேகரிப்பு மூலம் சேகரிக்கப்பட்ட நீர் அது என்பது குறிப்பிடத்தக்கது.

குடிநீர்

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காட்டைச் சேர்ந்தவர் காசிராமன். தொழிலதிபரான இவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரால் ஈர்க்கப்பட்டு, இயற்கை விவசாயம் மேற்கொண்டு வருகிறார். “தண்ணீரைப் பூமியில் தேடக்கூடாது வானத்தில் இருந்து கொண்டுவர வேண்டும்” என்ற நம்மாழ்வாரின் வரிகளுக்கு ஏற்ப, மழைநீரைச் சேகரித்து வரும் காசிராமன் கோடை வாட்டி வரும் நிலையில், பொதுமக்களுக்கு நாளொன்றுக்கு 5,000 லிட்டர் வரை விலை இல்லாமல் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கி வருகிறார்.

திருவெண்காடு பகுதி, பூம்புகார் கடற்கரை ஒட்டியுள்ள பகுதி என்பதால் நிலத்தடி நீர் உப்பாகி விட்ட நிலையில், பெய்யும் மழை நீரைத் தனது வீட்டின் கிணற்றில் அப்படியே சேகரித்து வைத்து, அதை மீண்டும் நவீன தொழில்நுட்ப உதவியுடன், சுத்திகரிப்பு இயந்திரங்களுடன் சுத்திகரித்து, தன் வீட்டு வாசலில் யார் வேண்டுமானாலும் வந்து தண்ணீர் எடுத்துச் செல்லலாம் என்ற அறிவிப்புடன் விநியோகம் செய்து வருகிறார்.

குடிநீர்

அப்பகுதியில் வாகனங்களில் செல்பவர்கள் குடிநீர் பாட்டில்களிலும் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் குடங்களிலும் தண்ணீர் பிடித்துச் செல்கின்றனர். தனி ஒரு மனிதனாக ஐந்து கிராமங்களின் பொதுமக்களுக்குத் தாகம் தீர்த்து வைக்கிறார் காசிராமன்.

கடந்த 3 ஆண்டுகளாக இந்தச் சேவையை சத்தமின்றி செய்து வரும் காசிநாதனிடம் பேசினோம், “முதலில் ஒரு மண் பானையில் மட்டும் தண்ணீர் வைப்பதில் தொடங்கப்பட்ட இந்த சேவை, தற்போது பொதுமக்களின் தேவை கருதி 5,000 லிட்டர் டேங்கின் மூலம் தண்ணீர் விநியோகம் செய்து வருகிறேன். மனிதர்கள் குளங்கள், குட்டைகள் போன்ற நீர் நிலைகளை பாதுகாக்காததன் விளைவாகத் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது” என்றார். பறவைகளும் கால்நடைகளும் காசு கொடுத்தா தண்ணீர் வாங்க முடியும்? என்று கேள்வி எழுப்பும் காசிராமன், “மரங்களை வளர்ப்பதுடன், நீர்நிலைகளைப் பாதுகாக்க, ஒவ்வொரு மனிதனும் முன்வர வேண்டும்” என்று வேண்டுகோளை முன் வைத்தார்.

விவசாயி காசிநாதன்

தவித்த வாய்க்குத் தண்ணீர் அதுவும் சுத்திகரிக்கப்பட்ட நீர் வழங்கும் காசிராமனின் சேவை தொடரட்டும், மழை நீரைக் குடிநீராக்கும் இந்த முயற்சி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கட்டும்.

நன்றி: விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *