நீர்வளத்தை கெடுக்கும் கருவேல் மரங்கள்

மதுரை மாநகரில் நீர்வளத்தை பாதுகாக்கவும், மாணவர்கள் வழிதவறிச் செல்வதை தவிர்க்கும் முகமாக, கோடை விடுமுறையை பயன்படுத்தி 100 மாணவர்கள் அடங்கிய குழு மூலம், சீமைக்கருவேல் மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருவதாக, அமெரிக்கன் கல்லூரி செயலாளரும், முதல்வருமான ம.தவமணி கிறிஸ்டோபர் தெரிவித்தார்.

இது தொடர்பாக, அவர் மேலும் கூறியது:

 •  மதுரை மாநகரில் நிலத்தடி நீர் அதள பாதளத்துக்குச் சென்று விட்டது. வண்டியூர் கண்மாய், செல்லூர் கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளும் வறண்டு கிடக்கின்றன.
 • மாநகரின் சுற்றுச்சூழலும் சீர்கெட்டுள்ளது. இதற்கு சீமைக்கருவேல் மரங்களும் முக்கியக் காரணம்.
 • பயிர்களுக்கு வேலியாகவும், சமையலுக்கு விறகாகவும் பயன்படும் என்று, 1950-களில் ஆஸ்திரேலியாவில் இருந்து சிறிதளவு விதையாக, இது இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. அறுபது ஆண்டுகளில் பெருகிப் பரவி, தமிழகம் முழுவதும் இந்த மரங்கள் ஆக்கிரமித்துள்ளன.
 • இந்த முள் மரம் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில், வேளாண்மைக்கு எதிரான ஆபத்தான நச்சுத் தாவரமாக அறிவிக்கப்பட்டு, அழிக்கப்பட்டு வேளாண் கண்காட்சியில் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது.
 •  கேரளத்தில் வேரோடு பிடுங்கி எறியப்பட்டு, மீண்டும் வளரா வண்ணம் பாதுகாக்கப்படுகிறது.
 • இந்த மரங்கள், தமிழகத்திலுள்ள விளை நிலங்களில் 25 சதவீதத்திற்கு மேல் வளர்ந்து, வேளாண்மையை பாழ்படுத்தி வருகின்றன.
 • இந்த மரங்களின் வேர்கள் பூமிக்கடியில் 175 அடி நீளம் (53 மீட்டர்) வரை சென்று, நிலத்தடி நீரை உறிஞ்சக் கூடியது.
 • ஆழ வேர் மட்டுமல்லாது, உறுதியான பக்க வேர்களையும் கொண்டு மழை நீரை உறிஞ்சி, நிலத்தடிக்குச் செல்லாமல் தடுக்கிறது.
 • எந்த நோயினாலும், பூச்சிகளாலும் தாக்க முடியாத, எந்த இடத்திலும் மற்ற தாவரங்களை அழித்துவிட்டு, தான் மட்டும் செழித்துப் படர்கின்ற தன்மை உடையது.
 • இந்த மரங்கள் மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளிலும் பரந்து விரிந்து வளர்ந்துள்ளன. இதனால், மாநகரத்தின் நிலத்தடி நீருக்கு ஆபத்து உள்ளது.
 • எனவே, இந்த சீமை கருவேல் மரங்களை அகற்றுவதற்கு, அமெரிக்கன் கல்லூரியின் பசுமை சங்கத்தின் சார்பில், மாணவர்களின் பசுமை நீர் திட்டத்தின் கீழ் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

  மதுரையை நீர் வளமிக்க மாநகரமாக்குவதை நோக்கமாகக் கொண்டு, இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளோம். ஒருமாத காலத்துக்கு இந்தப் பணி நடைபெறும், என்றார் அவர்.

நன்றி: தினமணி

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “நீர்வளத்தை கெடுக்கும் கருவேல் மரங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *