இந்தியாவின் நீர் மனிதர் என்று அழைக்கப்படும் ராஜேந்தரசிங் திருவண்ணாமலையில் உள்ள பவா பத்தாயத்தில் தண்ணீர் விழிப்பு உணர்வு நிகழ்ச்சிக்காக வந்திருந்தார். அவர் பேசும்போது வறட்சிக்கான காரணங்களை விவரித்தார். அதிலிருந்து…

”வறட்சி என்பதை மனிதன்தான் உருவாக்கினான். வளர்ச்சியை நோக்கி செல்லும்போது வறட்சி தானாக ஏற்படுகிறது. வளமான தமிழகமும் இப்போது வறட்சியை நோக்கிப் போகிறது. மனதில் வளர்ச்சி என்கிற குறுகிய பார்வை வறட்சியைப் பரிசாகத் தருகிறது. 65 சதவிகிதம் மண் மாசுபடுத்தப்பட்டுவிட்டது. தமிழ் கலாசார அறிவு உள்ளவர்களும் அதனை அதிகமாக மாசுபடுத்தி விட்டார்கள். நமது மண்ணின் கலாசார நிறம் மாறிப் போகிறது அதுதான் பிரச்னையே. எந்த ஒரு கலசாரமும்,தேசிய கலாசாரமாக மாறும்போது சமூகத்துக்கு அது பிரச்னையைத் தருகிறது. டெக்னாலஜி டெவலெப்மெண்ட் என்கிற முன்னேற்றத்தால் நம்முடைய கலாசாரம் மாறுகிறது. தேசிய கலாசாரமும் மாறுகிறது. மக்களுக்கும் இயற்கைக்குமான இடைவெளி பெருகுகிறது. இந்த இடைவெளி நாம் தேடிக்கொண்டதுதான்.
தமிழகத்தில் சுதந்திரத்துக்கு முன்பு இருந்த 70 சதவிகித ஆறுகள் இப்போது இல்லை. அந்த ஆறுகள் மக்களின் அலட்சியத்தால் அவலமாகி போய்விட்டது, நாசமாகிப் போய்விட்டது. இந்த நிலைக்கு, தமிழக மக்கள்தான் காரணம். சென்னை வெள்ளம் வந்தபோது பெரும் அழிவு ஏற்பட்டது.அதற்கு முன் மழை வெள்ளத்தை சேமிக்க முடியவில்லை. நாம் இயற்கையை அழித்துவிட்டோம். அதனால் இயற்கை நம்மை அழிக்கப் பார்க்கிறது. விளைநிலங்கள் அழிக்கப்பட்டுவிட்டது. தண்ணீர் எடுக்க பல மிஷின் வந்துவிட்டது. மிஷின் மூலம் எடுக்கத்தான் தண்ணீர் இல்லை. ராணிப்பேட்டையில் பாலாறு மாசுபடுகிறது. ஆற்று நீரில் கெமிக்கல் பாதிப்பு இருக்கிறது. இந்த நிலை நீடித்தால், ஆற்றுக்கு வருங்காலம் கிடையாது.
அரசியல்வாதிகளுக்கு நீர்நிலைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் கொஞ்சம்கூட இல்லை. ராணிபேட்டையில் 40 வருசம் முன்பு அரசு தொழிற்சாலையை அடைச்சிட்டாங்க. ஆனால் குரோமியம் அங்கேயே இருக்கு. அதனை இன்னும் மாற்றவே இல்லை. அந்த கெமிக்கல் கழிவுநீர் கலந்துவிட்டது. அதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுவிட்டது. எந்த நாட்டில் தண்ணீர் கெட்டுப்போய் விட்டதோ, அந்த நாடு முன்னேற்றம் அடையாது. அரசால் தண்ணீர் கொடுக்க முடியாது.
மக்களுக்குத் தேவையானவைகளை கொடுக்காமல் மக்களிடம் இருந்து வரிப்பணங்களை வாங்குவதிலேயே குறியாக அரசு இருக்கிறது. எனது மாநிலமான ராஜஸ்தானில் ஒரு கிராமத்துக்குப் போனபோது அங்கே டாக்டர்களும், டீச்சர்களும் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால் தண்ணீர்தான் இல்லை. ராஜஸ்தான் பாலைவனமான பகுதி. அங்கே மழை பெய்யாது. அந்த கிராமத்தில் இளைஞர்கள் யாரும் இல்லை. வேலை தேடி நகரத்துக்குப் போய் விட்டார்கள். அங்கே உள்ளவர்களுக்கு மாலைக் கண் நோய் பாதிப்பு இருந்தது. தண்ணீர் மட்டும் அவர்களுக்குத் தேவை இருந்தது. மணல் மேடுகளிலில் இருந்து மணல் பறந்துகொண்டிருக்கும். தண்ணீர் இருந்தால் அதைச் சூரியன் உறிஞ்சி எடுத்துவிடும். வெப்பத்தின் தாக்கமும் அங்கு அதிகம். 7 நதிகளை தூர்வாரி நீரைக் கொண்டு வந்தோம். நகரத்துக்கு வேலைக்குப் போனவர்கள் இப்போது கிராமத்துக்கு வந்து விவசாயம் செய்கிறார்கள். விவசாயிகளுக்கு வேலை வந்துவிட்டது. அதுதான் வளர்ச்சி.
ராஜஸ்தானில் அரபிக்கடலில் நதிகள் கலப்பதுக்கு முன் சூரியன் உறிஞ்சி எடுத்துவிடும். காக்கா நரி கதையைப் போலதான் நீர் சுழற்சி. அப்போதுதான் 120 அடி ஆழத்தில் தோல் பையை கட்டி தண்ணீரை சேமிக்க தொடங்கினேன். இதனை மரத்தைப் பார்த்து கற்றுக் கொண்டேன். மரம் வேர்களை ஒரே நேர்கோட்டுக்குள் விடாமல், பரப்பி விட்டிருக்கும். அதனை வைத்து நீரை எப்படி சேமித்துக் காப்பது என கற்றுக்கொண்டேன். அரசியல்வாதிகளுக்கு தண்ணீர் தேவையைவிட ஓட்டுதான் தேவை. நாம் இயற்கைக்குப் பிடித்த குழந்தைகள். நீரை வைத்து தண்ணீர் அறிவியல், டெக்னாலஜி என இரண்டு விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்.என்னுடைய ஆசிரியருக்கு அதில் ஆறு வார்த்தைக்கூட புரிய சிரமாக இருந்தது.
உலகம் முழுவதும் வெப்பமயம் அதிகமாகும்போது எனது ஊரில் 47 சதவிகித வெப்ப நிலையில் 3 சதவிகிதம் குறைத்துள்ளேன். எங்கள் மாநிலத்தில் இப்போது அதானிக்கும், அம்பானியும் நுழைய வேலை இல்லாமல் போய்விட்டது. அரசிடம் உதவிகளைக் கேட்டாலும் செய்யாது. ஆனால் அரசு செய்யவில்லை என்றாலும் பிரச்னை இல்லை. சமூகம் ஒற்றுமையாக சேர்ந்து மாற்ற வேண்டும்.
தமிழகத்தில் அதிகமாக விளை நிலங்கள் அழிக்கப்பட்டுவிட்டது. கேரளாவில் அப்படி இல்லை. அரசியல்வாதிகளின் கண்ணில் நீர் இல்லை எனவே அவர்களுக்கு மக்களின் கஷ்டம் புரியாது. அதனால் அவர்களின் தலையில் தண்ணீர் தொட்டி கட்டினால் தண்ணீரின் அருமை புரியும். தமிழகத்தில் ஆற்று மணல் கொள்ளை அதிகம் நடக்கிறது.கேரளா, ராஜஸ்தானில் அப்படி இல்லை. மணலை அளவுக்கு அதிகமாக எடுத்தால் நதி கெட்டுப் போய்விடும். இயற்கையை நேசிக்கும் நாம் இயற்கையை கெட விடக்கூடாது. சுய நலம் இல்லாமல் இருக்க வேண்டும்.
இளைஞர்கள் ஒரு குழுவாகச் சேர்ந்து தண்ணீர் விழிப்பு உணர்வு செய்ய வேண்டும். தமிழகத்தில் இருந்து ஒருகுழு புறப்பட்டு ஆகஸ்ட் மாதம் 16,17,18 ஆகிய தேதிகளில் பிஜாப்பூரில் நடக்க இருக்கும் தண்ணீர் விழிப்பு உணர்வு மாநாட்டுக்கு வரவேண்டும். மாநாட்டுக்கு வருபவர்கள், கடக்கும் பகுதிகளில் தண்ணீர் விழிப்பு உணர்வு குறித்துப் பேசி செல்ல வேண்டும். நீர் பாதுகாப்பு மக்கள் மன்றம் ஒன்று ஏற்படுத்த வேண்டும். அதனை மாவட்டம் தோறும் பரப்ப வேண்டும் அதன் மூலம் மக்களுக்கு நீர் விழிப்பு உணர்வு ஏற்படுத்த முடியும்” என்று பேசினார்.
நன்றி: பசுமை விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்