ஆண்டுக்கு பெரிய வருமானம் தரும் பெருநெல்லி!

விருதுநகர் மாவட்டம் பாலவநத்தத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது மெட்டுக்குண்டு. இந்தக் கிராமத்தின் தொடக்கத்திலேயே உள்ளது வீரபோஸின் நெல்லித் தோட்டம். நெல்லிக்காய்களைப் பறித்துக்கொண்டிருந்தவரைச் சந்தித்தோம். ‘‘இயற்கை நெல்லி சாப்பிட்டுப் பாருங்க’’ என ஒரு நெல்லிக்காயைக் கொடுத்தபடியே பேசத் தொடங்கினார். “எங்க கிராமத்துல 10 வருஷத்துக்கு முன்னால வாழை, கரும்பு விவசாயம் செழுமையா நடந்துச்சு. தைப்பொங்கலுக்கு இங்கே இருந்தும் கரும்புக்கட்டுகள் கணிசமா வெளி மாவட்டங்களுக்குப் போகும். தண்ணீர்ப் பற்றாக்குறையால கரும்புச் சாகுபடி நின்னுபோச்சு.

நெல்லித் தோட்டத்தில்

இப்போ வாழையை மட்டும்தான் சாகுபடி செய்யுறாங்க. தாத்தா காலத்துல இருந்தே விவசாயம் செய்றோம். மத்த விவசாயிக மாதிரி வாழை, கரும்பு மட்டுமல்லாம சேனைக் கிழங்கையும் சேர்த்துச் சாகுபடி செஞ்சுட்டு வந்தோம். அடியுரமா ஆட்டுக்குப்பையும் அடுப்புச்சாம்பலும் போட்டுத் தாத்தா செஞ்ச விவசாய நிலத்துல முழுக்க ரசாயன உரத்தைப் போட்டு விவசாயம் செய்தார் எங்க அப்பா.

10-ம் வகுப்புக்குப் பிறகு, நானும் அப்பா கூடச் சேர்ந்து விவசாயத்தையே பார்க்க ஆரம்பிச்சேன். அப்பா செய்யுற மாதிரியே ரசாயன உரத்தை இஷ்டத்துக்கும் தூவினேன். ஒருகட்டத்துல வாழை வளர்ச்சியே இல்லாம போயிடுச்சு. அப்படியே வளர்ந்தாலும் தூர்வெடிப்பு அதிகமாச்சு.

உரக்கடையில என்ன மருந்து வாங்கித் தெளிச்சாலும் கட்டுப்படலை. அந்த நேரத்துலதான் அருப்புக்கோட்டை வேளாண் விரிவாக்க மையம் மூலமா எங்க கிராமத்துல 50 விவசாயிகளைத் தேர்ந்தெடுத்து ‘ஆளுக்கு ஒரு ஏக்கர்’னு 50 ஏக்கர்ல குதிரைவாலிச் சாகுபடி செய்யச் சொன்னாங்க. ‘மானாவாரி விவசாயத்துல அடியுரத்தாலயும், பெய்யுற மழைத்தண்ணியாலயும் தன்னால வளர்ற சிறுதானியச் சாகுபடியிலயும், அதிக மகசூலுக்காக ரசாயன உரம் பயன்படுத்துற ஊரு எங்க ஊரு. ஆனா, அந்தத் தடவை ரசாயனம் இல்லாம குதிரைவாலியை விளைய வெச்சாங்க. அப்பதான், இயற்கை விவசாயத்தைப் பத்தி ஓர் அதிகாரி எடுத்துச் சொன்னார். தொடர்ந்து தோட்டக்கலைத்துறை மூலமும் இயற்கை விவசாயப் பயிற்சிகளை நடத்துனாங்க.

நெல்லிக்காயுடன் வீரபோஸ்

நெல்லிக்காயுடன் வீரபோஸ்

பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், மூலிகைப் பூச்சிவிரட்டி தயாரிக்கிறது, பயன்படுத்துறதுனு முழுமையா அதுல தெரிஞ்சுகிட்டேன். தொடர்ந்து இயற்கை விவசாயப் பண்ணைகளுக்குப் போய்ச் சந்தேகங்களைக் கேட்டுத் தெரிஞ்சுகிட்டேன். பிறகு, சோதனை அடிப்படையில ஒரு ஏக்கர்ல இயற்கை முறையில ரெட்லேடி பப்பாளிச் சாகுபடி செஞ்சேன். நல்ல மகசூல் கிடைச்சது. எங்க ஊர்ல யாரும் அதிகமா நெல்லிச் சாகுபடி செய்யலை. அதனால நெல்லிச் சாகுபடி செய்யலாமேன்னு ஒரு யோசனை தோணுச்சு. உடனே நெல்லி நட்டுட்டேன்’’ என்றவர் தனது தற்போதைய சாகுபடி விவரங்களுக்குள் புகுந்தார்.

320 மரங்கள்… 22,000 கிலோ மகசூல்

‘‘இது மொத்தம் 6 ஏக்கர் நிலம். 2 ஏக்கர்ல நெல்லி, 2 ஏக்கர்ல நாடன் ரக வாழை, 2 ஏக்கர்ல பப்பாளிச் சாகுபடிக்காக நிலத்தைத் தயார்படுத்தி வெச்சிருக்கேன். நெல்லி பறிப்பு முடியுற நிலையில இருக்கு. காஞ்சன், பி.எஸ்.ஆர்-4, என்.ஏ-7, சக்கயானு நாலு ரகங்கள்ல மொத்தம் 350 மரங்கள் இருக்குது. அதுல 320 மரங்க நல்ல நிலையில இருக்கு. வருஷத்துக்கு 5 மாசம் வரைக்கும் காய் பறிக்கலாம். வாரம் ஒரு தடவைனு தேவையைப் பொறுத்து காய் பறிச்சு விற்பனை செய்யுறேன். 22,000 கிலோ வரைக்கும் காய்கள் கிடைச்சுட்டு இருக்கு. ஒரு கிலோ நெல்லி குறைந்தபட்சம் 10 ரூபாய்ல இருந்து அதிகபட்சமா 20 ரூபாய் வரைக்கும் விலை போகுது.

2 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ. 2,86,000 பெரிய வருமானம் தரும் பெருநெல்லி!

நெல்லியைப் பொறுத்தவரைக்கும் காத்துல ஈரப்பதம் அதிகமாக இருந்தால்தான் நல்ல காய்ப்பு இருக்கும். ஆனா, ஜனவரியில பூக்கும் பூ அம்புட்டும் காயாக மாறாது. இதுல கோடைக்காலத்துலதான் நெல்லிக்கு நல்ல விலை கிடைக்கும். குளிர்காலத்துல குறைவான விலைதான் கிடைக்குது. இன்னொரு விஷயம், இயற்கை முறையில விளைய வெச்சதால காய்கள் திரட்சியாவும் பளபளப்பாவும் இருக்கு. அதனால சந்தையில வியாபாரிகள் விரும்பி வாங்குறாங்க. ஆனா, தனி விலை எதுவும் கொடுக்கிறதில்லை’’ என்றவர் நிறைவாக வருமானம் பற்றிப் பேசினார்.

குறிப்பு: நிலையான செலவுகள் எல்லா ஆண்டுகளுக்கும் என்பதால் இதில் சேர்க்கப்படவில்லை.

குறிப்பு: நிலையான செலவுகள் எல்லா ஆண்டுகளுக்கும் என்பதால் இதில் சேர்க்கப்படவில்லை.

‘‘குறைந்தபட்சம் கிலோ 13 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலும் 22,000 கிலோவுக்கு 2,86,000 வருமானமா கிடைக்குது. இதுல, பரமாரிப்புச் செலவு ரூ.85,000 ஆகிடும். அதைக் கழிச்சா, மிச்சமிருக்கிற ரூ.2,01,000 லாபம்தான். விருதுநகர், அருப்புக்கோட்டை சந்தைகள், பழக்கடைகள்ல தான் விற்பனை செய்யுறேன். நெல்லியை அப்படியே விற்பனை செய்யாம தேன்நெல்லி, ஊறுகாய், ஜாம்னு மதிப்புக்கூட்டினா வருமானமும் ரெண்டு மடங்காகும்” என்றார்.

தொடர்புக்கு,வீரபோஸ், செல்போன்: 86376 51821

இப்படித்தான் செய்யணும் நெல்லிச் சாகுபடி!

யற்கை முறையில் நெல்லிச் சாகுபடி செய்வது குறித்து வீரபோஸ் கூறிய தகவல்கள் பாடமாக இங்கே…

நெல்லிச் சாகுபடிக்குச் செம்மண் ஏற்றது. இதற்கெனப் பட்டம் கிடையாது. ஆனால், மழைக்கு முன்பாக ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் நடவு செய்யலாம். எந்த மாத்தில் நடவு செய்கிறோமோ அதற்கு இரண்டு மாதத்துக்கு முன்பு, ஒரு வார இடைவெளியில் 4 முறை உழவு செய்ய வேண்டும். செடிக்குச் செடி 12 அடி மற்றும் வரிசைக்கு வரிசை 12 அடி இடைவெளியில் 2 அடி சுற்றளவு, 2 அடி ஆழத்தில் குழிகள் எடுக்க வேண்டும். அப்போதே நீர்ப்பாசன வசதியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். பழ மரங்களைப் பொறுத்தவரையில் சொட்டுநீர்ப் பாசனமே சிறந்தது.

10 நாள்கள்வரை குழிகளை ஆற விட வேண்டும். பிறகு, ஒரு குழிக்கு 5 கிலோ மக்கிய தொழுவுரம் போட்டு, அதன்மீது செம்மண், நிலத்து மண் கலந்து 10 தட்டுகள்வரை போட வேண்டும். பிறகு, தண்ணீர்ப் பாய்ச்சிக் குழிகளை ஈரப்பதமாக்க வேண்டும். அப்போதே ஒவ்வொரு குழியிலும் ஒரு லிட்டர் தண்ணீரில் 2 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி, 2 கிராம் சூடோமோனஸ் தூளைக் கலந்து தெளிக்க வேண்டும். இதனால், வேர்ப்புழுத் தாக்குதல் ஏதும் வராது.

பிறகு, செடிகளை நடவு செய்யலாம். ஒரே ரகமாக நடவு செய்யாமல் இரண்டு முதல் நான்கு ரக நெல்லியைக் கலந்து நடவு செய்தால் மகரந்தச்சேர்க்கை ஏற்பட்டுக் காய்ப்பு அதிகமாகும். 3 மாதங்கள் வரை, ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் மட்டுமே பாய்ச்சி வர வேண்டும். பிறகு, 15 நாள்களுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் பஞ்சகவ்யா கலந்து பாசன நீரில் கலந்து விட வேண்டும். (ஓராண்டுக்குப் பிறகு, 200 லிட்டர் தண்ணீரில் 5 லிட்டர் வரை பஞ்சகவ்யா கலந்து நீரில் விடலாம்) 7-ம் மாதம் செடி ஒன்றுக்கு அடியுரமாக ஒரு கிலோ மண்புழு உரம் வைக்க வேண்டும். 8-ம் மாதம் கவாத்து செய்ய வேண்டும்.

பூக்களைக் கிள்ளினால்தான் மகசூல் அள்ள முடியும்

கவாத்து செய்தபிறகு, பூக்கும் பூக்களைக் கிள்ளிவிட வேண்டும். 12-ம் மாதம் ஒரு செடிக்கு ஒன்றரை கிலோ மண்புழு உரத்தை அடியுரமாக வைத்துவிட்டு, 13-ம் மாதத்தில் மீண்டும் ஒருமுறை கவாத்துச் செய்ய வேண்டும். அதேபோல பூக்கும் பூக்களையும் கிள்ளிவிட வேண்டும். 15-ம் மாதம் ஒரு செடிக்கு இரண்டு கிலோ வரை மண்புழு உரம் வைத்து மீண்டும் ஒரு முறை கவாத்து செய்ய வேண்டும். அதன் பிறகு பூக்கும் பூக்களைக் காய்க்க விடலாம். பெரும்பாலான விவசாயிகள், இரண்டாவது கவாத்துக்குப் பிறகு, பூக்கும் பூக்களைக் காய்க்க விட்டுவிடுவார்கள். ஆனால், மூன்றாவது கவாத்துக்குப் பிறகு, பூக்கும் பூக்களைக் காய்க்கவிட்டால் காய்கள் திரட்சியாகவும், நல்ல மகசூலும் கிடைக்கும்.

கவாத்து கவனம்

பூப்பூக்கும் நேரத்தில் அசுவினிப் பூச்சிகளின் தாக்குதல் இருக்கும். இதைக் கட்டுப்படுத்த மஞ்சள் அட்டைகளைத் தொங்கவிடலாம். அத்துடன், 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி மூலிகைப் பூச்சிவிரட்டி அல்லது இஞ்சி-பூண்டுக்கரைசல் கலந்து கைத்தெளிப்பானால் 5 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும். மூன்றாவது முறை பூப்பூக்கத் தொடங்கியதும் 10 நாள்களுக்கு ஒரு முறை ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசன நீருடன் கலந்து விட வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதம் பூப்பூக்கும். ஏப்ரல் மாதம்வரை காய் பறிக்கலாம். அதேபோல, ஜூன் மாதம் பூப்பூத்தால் அக்டோபர் வரை காய் பறிக்கலாம். அக்டோபர் மாத பறிப்புக்குப் பிறகு, கவாத்து செய்வது அவசியம். ஆரம்பத்தில் குறைவான மகசூல் கிடைத்தாலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரித்துக்கொண்டே செல்லும். கவாத்துக்கு முன்பாக அடியுரமாக வைக்கும் தொழுவுரம், மண்புழு உரத்தின் அளவை மரத்தின் வயதுக்கேற்ப அதிகரிக்க வேண்டும். முறையாகப் பராமரித்து வந்தால் 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர் அறுவடை செய்யலாம்.

மூலிகைப் பூச்சிவிரட்டி

வேப்பிலை, ஆடாதொடா, எருக்கு, நொச்சி, தும்பை, ஆமணக்கு, நித்யகல்யாணி இவற்றில் தலா ஒரு கிலோ எடுத்துத் துண்டு துண்டாக நறுக்கி, 5 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரில் ஒரு வாரம் வரை ஊறவைத்து வடிகட்டினால் மூலிகைப் பூச்சிவிரட்டித் தயார்.

இஞ்சி-பூண்டுக் கரைசல்

ஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றில் தலா அரைக்கிலோ அளவு எடுத்து, அவற்றை உரலில் இடித்து 5 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரில் 5 நாள்கள் வரை ஊற வைத்து வடிகட்டினால் இஞ்சி-பூண்டுக் கரைசல் தயார்.

மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் தேனீக்கள்

மூன்றாம் ஆண்டில் பூக்கும் நேரத்தில் ஒரு ஏக்கரில் 5 தேனீப் பெட்டிகள் வைத்தால் தேனீக்களால் மகரந்தச்சேர்க்கை ஏற்பட்டுக் காய்ப்பு அதிகமாகும். 15 பெட்டிகள் வைத்தால், (ஆண்டுக்கு ஒரு பெட்டிமூலம் 10 கிலோ தேன்) அதிலிருந்து கிடைக்கும் தேன் மூலம் உபரி வருமானமும் பெறலாம்.

ஊடுபயிர்

ராமரிப்புச் செலவை ஈடுகட்டும் ஊடுபயிர் நெல்லியில் இரண்டரை ஆண்டுக்குப் பிறகுதான் கணிசமான வருமானம் கிடைக்கும். அதனால், அதுவரை பராமரிப்புச் செலவுகளை ஈடுகட்ட நிலக்கடலை, செடிஅவரை, உளுந்து, பாசி, மல்லி போன்றவற்றை ஊடுபயிராகச் சாகுபடி செய்யலாம். அறுவடைக்குப் பிறகு, காய்ந்த செடிகளை மூடாக்காகவும் போடலாம். களைகளைக் கட்டுப்படுத்த தொடர்ந்தும் ஊடுபயிராக இவற்றைச் சாகுபடி செய்துவரலாம்.

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *