நெல்லி சாகுபடியில் பூச்சி மற்றும் நோய் பாதுகாப்பு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நெல்லி நீண்ட ஆயுளையும், நிறைவான இளமையும் தரவல்லது.  தற்போது காய்ப்புப் பருவத்தில் உள்ள நெல்லியில் காணப்படும் பல்வேறு பூச்சி நோய்களை முறையாகக் கட்டுப்படுத்தி மகசூல் இழப்பைத் தவிர்க்கலாம்.

amla

 

 

 

 

 

 

பட்டைத் துளைப்பான்:

 • போதிய பராமரிப்பு இல்லாத மரங்களை இப்பூச்சித் தாக்கும்.
 • ஏப்ரல் மாதத்தில் இதன் தாக்குதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தாய் அந்துப்பூச்சி மரப்பட்டையின் பள்ளம் மற்றும் காயம்பட்ட இடத்தில் முட்டையிடும். எ
 • னவே மரப்பட்டையில் அரிவாளைக் கொண்டு குத்துதல் போன்ற மூலம் காயம் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்.
 • புழு வெளியாகி துளைத்து உள்ளே செல்லும். இதன் தாக்குதலால் கிளைகளின் வளர்ச்சி தடைபடும். மகசூல் பருவங்களில் பூ பிடிப்பது குறையும். தாக்குதல் தீவிரமானால் கிளைகள் காய்ந்து மரமே இறக்கக் கூடும்.
 • தாய் அந்து இலைக் கோணங்களில் முட்டையிடுவதால் துவாரமும் கிளைப் பிரியும் கோணங்களில் காணப்படும்.

கட்டுப்படுத்துதல்:

 • காய்ந்த தாக்கப்பட்ட பகுதிகளை அகற்றித் தோட்டத்தை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.
 • விளக்குப்பொறி வைத்து தாய் அந்துப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
 • ஈரமான கழிவுகள் இருக்கும்போது, துளைக்குள் முனை வளைந்த கம்பி செலுத்தி, புழுவை வெளியே எடுத்து அழிக்கலாம்.
 • உயிரியல் பூஞ்சாணக் கொல்லி பெவேரியா பேசியானா தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
 • சேதம் அதிகமாகும்போது, துளைகளில் பஞ்சில் 5 மிலி டைகுளோர்வாஸ் மருந்தை நனைத்து, உள்ளே வைத்து துளையை மண்கொண்டு அடைக்க வேண்டும்.

தண்டு வீங்கி நோய்:

 • இந்நோயால் செடிகளிலும் மரங்களிலும் தண்டு வீங்கி முடிச்சுப் போல காணப்படும்.
 • இதனால் வளர்ச்சி பாதிக்கப்பட்டு பூ காய் பிடிப்பது பாதிக்கப்படும்.
 • தொடர்ந்து தாக்குதல் தென்பட்டால் மானோகுரோட்டோபாஸ் மருந்தை ஒரு லிட்டருக்கு 1.5 மி.லி வீதம் கலந்து 15 தினங்கள் இடைவெளியில் இரு முறை தெளிóக்க வேண்டும்.

பழத்துளைப்பான்:

 • இந்த புழுவின் தாக்குதல் காய்ப்பிடிப்பு பருவத்தில் காணப்படும்.
 • பழுப்பான கருநீல நிற வண்ணத்துப்பூச்சி வெள்ளைநிற முட்டையை இளம் காய்களில் தனித்தனியாக இடுகிறது.
 • முட்டையில் இருந்து வெளிவரும் புழு, பழத்தை துளைத்து விதையை உண்டு சேதப்படுத்தும். இதனால் பழங்கள் தரம் குறைந்து அழுகி வெம்பி விழுந்து விடும். இது நேரிடையாக மகசூல் இழப்பை ஏற்படுத்தும்.
 • நெல்லி மரங்களுக்கு அருகில் கொய்யா, மாதுளை பயிரிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
 • தாக்கப்பட்ட பழங்களைச் சேகரித்து அழிக்க வேண்டும்.
 • டிரைகோகிரம்மா ஒட்டுண்ணிகளை ஏக்கருக்கு 1 லட்சம் வீதிம் விட்டு பழத்துளைப்பான் முட்டைகளை அழிக்கலாம்.
 • பூ பிடிக்கும் காலங்களில் வேப்பங்கொட்டைச் சாறு 5 சதவிகிதம் அல்லது வேப்பெண்ணெய் 2 சதவிகிதம் அல்லது வேம்பு சார்ந்த மருந்தை 15 தினங்கள் இடைவெளியில் 4 முறை தெளிக்க வேண்டும்.
 • தாக்குதல் அதிகரிக்கும்போது, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1.5 மிலி மனோகுரோட்டோபாஸ் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

தாக்கும் நோய்கள்:

 • பழங்களில் சிறு கரும்துரு போன்ற புள்ளிகள் முதலில் தோன்றிப் பின் வளையம்போல் வட்டமாக உருவாகும்.
 • இவை இணைந்து பழத்தின் பெரும்பகுதி கருப்பாக மாறிவிடும். நோய் தாக்குதல் இலைகளில் தோன்றும்போது, சிவந்த பழுப்பு நிற துரு புள்ளிகள் சிதறியது போன்றோ அல்லது கூட்டமாக சேர்ந்தோ காணப்படும்.
 • தரு நோய் இலைகளைத் தாக்கினால் பழங்களில் தாக்குதல் இருக்காது. அதுபோல பழங்களைத் தாக்கினால் இலைகளில் தாக்குதல் இருக்காது.
 • நோயினை நனையும் கந்தகம் மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் வீதம் கலந்து தெளித்து கட்டுப்படுத்த வேண்டும்.

பறவைக்கண் புள்ளி நோய்:

 • இலைகளில் வட்ட வடிவ பழுப்பு நிறப்புள்ளிகளில் மஞ்சள் நிற விளிம்புகளுடன் தோன்றும்.
 • பழங்களில் உள்குவிந்த திவலைகள் ஏற்பட்டு பின்னர் பழுப்பாகி வட்ட வரி வளையங்களாக மாறும்.
 • தாக்குதல் தீவிரமாகும்போது கனிகள் சுருங்கி அழுகிவிடும்.
 • நோயை ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் மாங்கோசெப் அல்லது ஒரு கிராம் கார்பண்டாசிம் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

வினையியல் குறைபாடு:

 • கனிகளின் வெளிப்புறம் நன்கு தோற்றமளித்தாலும் உள் பகுதிகளில் தீய்ந்த பழுப்பு நிறச் சதைப்பகுதி காணப்படும்.
 • பின் கரும்பழுப்பாகி கடின பிசின்போல் மாறிவிடும். என்.ஏ. 6 மற்றும் என்.ஏ. 7 ரகங்களில் இக் குறைபாடு தோன்றுவதில்லை. இந்த குறைபாடுகளை ஒரு லிட்டர் நீருக்கு 4 கிராம் துத்தநாக சல்பேட், 4 கிராம் போராக்ஸ் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
 • இத்தகைய நோய் பாதுகாப்பு முறைகளை முறையாக பின்பற்றுவதன் மூலம் நெல்லி சாகுபடியில் நிறைவான மகசூல் பெற்று பயன்பெறலாம் என்றார் அவர்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *