சிவகங்கை சுற்றுப்பபகுதி கிராமங்களில் செழித்து வளரும் நெல்லியால் விவசாயிகள் குறைந்த செலவில் வருவாய் ஈட்டி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் செம்மண் சார்ந்த பகுதியாக உள்ளது. ஆண்டுதோறும் சீரான மழை பெய்யாததால் இப்பகுதியில் விவசாயம் செய்வது குறைந்து விட்டது. இந்நிலையில் குறைந்த அளவிலான பராமரிப்புச்செலவு மற்றும் சொட்டு நீர் பாசனம் மூலம் வருவாய் ஈட்டும் விவசாயத்தை பல வெளிமாவட்ட விவசாயிகளும், நிறுவனங்களும் இப்பகுதியில் செய்து வருகின்றனர்.
இதில் நெல்லி உற்பத்தி முதலிடம் வகிக்கிறது. தற்போது பல்வேறு மருந்துகள் செய்வதற்கும், நகர்பகுதிகளில் விற்பனை செய்வதற்கும் நெல்லிக்காய் பயன்பட்டுவருகிறது. சிவகங்கை அருகே கவுரிப்பட்டி, மதகுபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல்லிக்காய் விளைவிக்கப்படுகிறது. நெல்லிக்காய்களுக்கு எல்லா காலங்களிலும் கடும் கிராக்கி நிலவி வருகிறது.
- இதில் பவானிசாகர், கிருஷ்ணா, காஞ்சன், என்ஏ7, என்ஏ10 என பல்வேறு வகையான காய்கள் உள்ளது. 15 அடிக்கு ஒரு நெல்லிச்செடி நடப்படுகிறது.
- இந்த நிலங்களில் மரங்கள் வளர்ந்த பின்னரும் ஊடு பயிராக தட்டைப்பயிர், தர்பூசணி உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களை விவசாயம் செய்துகொள்ளலாம்.
- மேலும் சொட்டுநீர் பாசனம் மூலம் நீர் பாய்ச்சசுவதால் நீருக்கான செலவும், நீர் வீணாவதும் தடுக்கப்படுகிறது.
- இரண்டு ஆண்டுகளில் இருந்து காய்க்கத்தொடங்கும் நெல்லி சுமார் 60ஆண்டுகள் வரை காய்க்கும்.
இது குறித்து நெல்லி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர் கூறியதாவது:
- வருடத்திற்கு ஒரு முறை மற்றும் இரண்டு முறை காய்க்கும் மரங்கள் உள்ளன.
- ஒரு மரம் வருடத்திற்கு 50 கிலோ முதல் 150 கிலோ வரை காய்க்கும் திறன் கொண்டதாகும். இயற்கை உரங்கள் மட்டுமே பயன்படுத்தி வருகிறோம்.
- நெல்லிக்கான பராமரிப்பு செலவு மிகவும் குறைவு. மேலும் நோய் தாக்குதல் போன்ற பிரச்னை இல்லை.
- உடனடியாக பறிக்கப்படும் காய்கள் மட்டுமல்லாது கீழே விழுந்து பலநாள்கள் ஆகி காய்ந்து போன நிலையில் உள்ள காய்களும் வீணாகாது.
- இங்கிருந்து கேரளா போன்ற மாநிலங்களுக்கு மருந்துகளுக்காகவே அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றனர்.
நன்றி:Dinakaran
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்