சம்பா நெல் சாகுபடிக்கு மேலுரம் இடுவதற்கு இதுவே தகுந்த தருணம் என அறந்தாங்கி வேளாண்மை உதவி இயக்குனர் பொன்னையா தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
- காவிரி மேட்டூர் பாசன பகுதிகளில் தற்பொழுது நல்ல மழை பெய்து வருகிறது. இதுவே முதல் மேலுரம் இடுவதற்கு தக்க தருணம் ஆகும்.
- நெல் வளர்ச்சி பருவத்தில் தூர் கட்டும் நேரத்தில் தூர்கள் அதிகளவில் வெடிக்கவும் வேரின் வளர்ச்சி அதிகமாகவும் தற்போது வேளாண்மை விரிவாக்க மையங்களில போதுமான அளவு நெல் நுண்சத்துக்கள் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 50 சதவித மானிய விலையில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
- அதனை ஏக்கருக்கு 5 கிலோ அளவில் 25 கிலோ மணலுடன் கலந்து மேலே சீராக தூவவேண்டும்.
- மேலும் மேலுரம் இடும் விவசாயிகள் தழைச்சத்து கிடைக்க ஏக்கருக்கு 22 கிலோ யூரியாவை நன்கு தூள் செய்யப்பட்ட 5 கிலோ வேப்பம் புண்ணாக்குடன் கலந்து ஒரு நாள் வைத்திருக்கவும்.
- வேப்பம் புண்ணாக்கில் உள்ள கசப்பு தன்மையை கொண்ட நிம்பிசிடின் என்ற வேதிப்பொருள் யூரியாவில் மேல் பரப்பு முழுவதும் ஒரு முலாம் பூசியதை போல செய்யப்பட்டு யூரியா விரைவில் நீரில் கரையாமல் தடுத்து பயிர் மெதுவாக எடுப்பதற்கு ஒரு கிரியா ஊக்கியை போல் செயல்படுகிறது.
- இதனுடன் சாம்பல் சத்து கிடைக்க 15 கிலோ பொட்டாஷ் உரம் கலந்து இடவேண்டும்.
- தழைசத்து, சாம்பல்சத்து, வேப்பம் புண்ணாக்கு கலந்து இடுவதால் பயிர்கள் ஒளிச்சேர்க்கைக்கு தேவையான கரியமில வாயு கிடைக்க வழி செய்கிறது. இதனால் பயிர்கள் செழித்து வளர்ந்து காற்றில் உள்ள தழைச்சத்தையும் கிரகிக்கிறது.
- பயிர்களில் வேர் வளர்ச்சி அதிகரிப்பதால் மண்ணில் உள்ள அங்கக சத்துக்களை மிகவும் அதிக அளவில் உறிஞ்சப்பட்டு பயிரின் வளர்ச்சி அதிகரிக்கிறது. இதனால் வறட்சியும் தாங்குகிறது.
- மேலும் வேப்பம்புண்ணாக்கு இடுவதால் பூச்சி தாக்குதல் குறைக்கப்பட்டு பயிரின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது மற்றும் மண்ணிலுள்ள நுண்ணுயிர் செயல்பாட்டினையும் அதிகப்படுத்துகிறது எனத்தெரிவித்துள்ளார்.
நன்றி: தினகரன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்