சம்பா நெல் நடவுக்கு அடியுரம்

சம்பா பருவத்தில் நடவு செய்யப்படும் நெல் பயிருக்கு அடியுரம் அவசியம் இட வேண்டும் என குடுமியான்மலை, மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை பயிற்சி நிலைய இயக்குநர்(பொ) வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

  • தற்போது சம்பா பருவத்தில் நெல் நடவு செய்யும் பணி ஆரம்பமாகியுள்ளது. எனவே நடவு வயலுக்கு நாற்று நடுவதற்கு முன்பாக அடியுரம் இடுவது அவசியம்.
  • ஒரு ஏக்கருக்கு 5 டன் நன்கு மக்கிய தொழு உரம் அல்லது கம்போஸ்ட் இட வேண்டும். இல்லையெனில் 2.5 டன் பசுந்தாள் உரம் இட வேண்டும்
  • ரசாயன உரங்களை மண் பரிசோதனைப் பகுப்பாய்வு முடிவுப்படி இட வேண்டும். மண் பரிசோதனை செய்யாத வயல்களில் பொதுப் பரிந்துரையின்படி உரம் இட வேண்டும்.
  • அதாவது ஒரு ஏக்கருக்கு அடியுரமாக 15 கிலோ தழைச்சத்து, 20 கிலோ மணிச்சத்து, 5 கிலோ சாம்பல் சத்து தரக்கூடிய யூரியா 33 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 125 கிலோ, பியூரியேட் ஆப் பொட்டாஷ் 8 கிலோ ஆகியவற்றை கடைசி உழவுக்கு முன்பாக இட வேண்டும்.
  • சூப்பர் பாஸ்பேட் கிடைக்கவில்லையெனில், ஒரு ஏக்கருக்கு டி.ஏ.பி 44 கிலோ, யூரியா 27 கிலோ, பியூரியேட் ஆப் பொட்டாஷ் 8 கிலோ என்ற அளவில் இடலாம்.
  • மேலும் உயிர் உரமான அசோஸ்பைரில்லம் 4 பொட்டலம், பாஸ்போ பேக்டீரியா 4 கொட்டலம் ஆகியவற்றை 10 கிலோ தொழு உரம் மற்றும் 10 கிலோ மணலுடன் கலந்து நடவுக்கு முன் சீராக இடவும்.
  •  அத்துடன் ஒரு ஏக்கருக்கு 1 கிலோ சூடாமோனாஸ் ப்ளோரசன்ஸ் உயிரி பூஞ்சான மருந்தினை 20 கிலோ தொழுஉரம் 20 கிலோ மணலுடன் கலந்து நடவுக்கு முன்பாக இட வேண்டும்.
  • மேலும் நெல் நுண்ணுட்ட உரம் ஏக்கருக்கு 5 கிலோவினை 20 கிலோ மணலுடன் கலந்து நடவுக்கு முன் அல்லது நடவுக்குப் பின் மேலாக சீராகத் தூவ வேண்டும். நுண்ணுட்டக் கலவையினை அடி உரமாக இடக் கூடாது.

இவ்வாறு செய்வதால் நெற்பயிரில் கூடுதல் சிம்புக்கள் உண்டாவதுடன் அதிக மகசூல் கிடைப்பதற்கும் அதனால் கூடுதல் லாபம் பெற்றும் பயனடையலாம் என விவசாயிகளை குடுமியான்மலை, மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை பயிற்சி நிலைய இயக்குநர்(பொ) வெள்ளைச்சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *