சம்பா பருவத்துக்கான புதிய நெல் ரகங்கள்

ஆழ்குழாய் வசதியுள்ள விவசாயிகள் மட்டுமே குறுவை சாகுபடி செய்துள்ள நிலையில், தாமத தென்மேற்குப் பருவமழை காரணமாக எதிர்பார்க்காத வேகத்தில் மேட்டூர் அணை நிரம்பி வீராணம் ஏரியும் பாசனத்துக்கு திறந்து விடப்படவுள்ளது.

இந்நிலையில் விவசாயிகள் சம்பா பருவத்துக்கான ரகத்தை தேர்வு செய்வதற்காக புதிய சம்பா நெல் ரகங்கள் குறித்து பரங்கிப்பேட்டை வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.ரமேஷ் தெரிவித்தது:

ஐந்து புதிய சம்பா ரகங்களை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் இந்த சம்பா ரகங்களை பயிரிட்டு அதிக மகசூல் பெறலாம்.

சம்பா மசூரி:

  • பிபிடி-5204 என்றழைக்கப்படும் இந்த ரகம் சம்பா மசூரி என்ற பெயரில்தான் அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் சில ஆண்டுகளாக பெரும்பாலான விவசாயிகளால் பயிரிடப்படுகிறது.
  • 135 நாள்கள் வயதுடைய, சாயாத தன்மை கொண்டது. புகையான், குலைநோய் ஆகியவைகளால் எளிதில் பாதிக்கும் தன்மையுள்ளது.
  • தண்ணீர் அதிகம் தேங்காத மேட்டுப்பாங்கான நிலங்களும் மிகவும் ஏற்றது.
  • கூடுதல் மகசூல் திறன், தனியார் வியாபாரிகளால் விரும்பி வாங்கப்படுகிறது.
  • அரசின் குறைந்தபட்ச ஆதார விலையைவிட கூடுதல் விலை கிடைப்பது போன்ற காரணங்களால் இந்த ரகம் விவசாயிகளின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
  • நீர் தேங்கும் பள்ளமான வயல்களில் இந்த ரகத்தை பயிரிடும் விவசாயிகள், பாய்ச்சலும், காய்ச்சலுமாக நீர் பராமரிப்பு, நீர் மறைய நீர் கட்டுதல், தழைச்சத்தை மேலுரமாக மூன்று முறையாக, 22 கிலோ யூரியா வீகம் ஒரு முறைக்குப் பிரித்து இடுதல் போன்ற உழவியல் நுட்பங்களை கடைபிடித்தால் பூச்சிநோய் தாக்குதலைத் தவிர்க்கலாம்.

இஞ(த)-50:

  • இந்த ரகம் கோ-43 மற்றும் அஈப-38 ஆகிய ரகங்களை தாயாதிகளாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 135 நாள்கள் வயதுடையது.
  • அதிகம் சாயாது, நடுத்தர சன்னரக நெல்மணிகள் கொண்டது. அதிக மகசூல் திறன் கொண்டது. நீண்ட நெற்கதிர்கள், சராசரியாக 300 மணிகள், கதிர்கள் கொண்டது.

இஞ(த)-38:

  • இந்த ரகம் கோ-43 மற்றும் அநஈ-19 ஆகிய ரகங்களை தாயாதிகளாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
  • வெள்ளை பொன்னி ரகம் போன்று உயரம் வளரும், நடுத்தர சன்னரக நெல்மணிகள். மகசூல் திறன் கொண்டது. பள்ளமான தண்ணீர் அதிகம் தேங்கும் வயல்களுக்கு ஏற்ற ரகமாகும்.

சகத 34449:

  • இந்த ரகம் ஆந்திர மாநிலம் நெல்லூர் ஆராய்ச்சி நிலையத்தாரால் வெளியிடப்பட்ட ரகமாகும். 125 நாள்கள் வயதுடையது, சாயாத தன்மை கொண்டது. மிகச்சன்ன ரக நெல்மணிகள்.

ஆடப-5204:

  • கடந்த ஆண்டில் இந்த ரகத்தை பயிர் செய்த விவசாயிகளுக்கு வறட்சியான நிலையில் குறைந்த பாசனத்தில் நல்ல மகசூல் கிடைத்ததால் விவசாயிகளிடையே பரவலாக இந்த ரகம் அறியப்பட்டு வருகிறது.
  • 10 நாள்கள் குறைவான வயது நெல்மணிகள், பிபிடி போன்று நல்ல விலை கிடைக்கும். எனினும் இந்த ரக அரிசியின் ருசி குறைவாக இருக்கும், டெல்டா வட்டாரங்களில் தை முதல் வாரத்தில் பயிறு வரை விதைப்பு, நஞ்சை தரிசாக பயிரிடுவதால் தை முதல் வாரம் அல்லது 2-ஆம் வாரம் அறுவடை வரும் வகையில் விதைப்பு தேதியை நிர்ணயிக்க வேண்டும்.
  • இவ்வாறு விதைப்பு தேதியை நிர்ணயித்து அதற்கேற்றார்போல் வயதுடைய ரகத்தை தேர்வு செய்யலாம்.
  • மேலும் நேரிடை விதைப்பு செய்யும்போதும் திருந்திய நெல் சாகுபடி முறையில் பயிரின் வயது 10 நாள்கள் குறையும். இதையும் கருத்தில் கொண்டு இந்த ரகத்தைத் தேர்வு  செய்யலாம் என்கிறார் வேளாண் உதவி இயக்குநர் எஸ்.ரமேஷ்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *