தனியாரிடம் நெல்லை விற்கும் விவசாயிகள்

அறுவடையான நெல்லை, சுத்தப்படுத்தி தர வேண்டும் என்று நிபந்தனை இருப்பதால், அரசு கொள்முதல் மையங்களை புறக்கணிக்கும் விவசாயிகள், எந்த நிலையில் இருந்தாலும், வாங்கி கொள்ளும் மொத்த வியாபாரிகளிடம், நெல்லை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த 2012ம் ஆண்டில், 22 ஆயிரம் ஹெக்டரில் நெல் பயிரிடப்பட்டது. பருவ மழை பொய்த்ததால், கடந்த நவரை பருவத்தில் 18,000 ஹெக்டர் பரப்பளவில் மட்டுமே நெல் பயிரிடப்பட்டது.

தவிர்ப்புஅறுவடை ஆகும் நெல்லை, விவசாயிகள், எளிதாக விற்பனை செய்வதற்காக, இந்த ஆண்டு, 25 இடங்களில், நெல் கொள்முதல் மையங்களை அரசு திறந்துள்ளது.

இந்த மையங்களில், குவிண்டால் 1,350 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

இருப்பினும், பல விவசாயிகள், நெல் கொள்முதல் மையங்களில் விற்பனை செய்வதை தவிர்த்து, மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகின்றனர்.இது குறித்து, விவசாயி ஒருவர் கூறியதாவது:

  • அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய வேண்டும் என்றால், கருக்காய் தூற்றிவிட்டு சுத்தமாக வழங்க வேண்டும்.
  • நெல் போதிய ஈரப்பதமின்றி, காய்ச்சலாக இருக்க வேண்டும்.
  • நெல்லை தூற்றி சுத்தப்படுத்தும்போது, 40 கிலோ எடை கொண்ட மூட்டைக்கு, 4 கிலோ, கருக்காய் கழிவு போகிறது.
  • அதேவேளையில், அறுவடை செய்யப்பட்ட நெல், எந்த நிலையில் இருந்தாலும், மொத்த வியாபாரிகள் எடுத்துக் கொள்கின்றனர்.
  • சிக்கல்கள்ஒரு மூட்டைக்கு இரண்டு கிலோ மட்டுமே கழிக்கின்றனர். இது ஒருவகையில் லாபமாக இருப்பதால், சில விவசாயிகள், தனியாரிடம் நெல் விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
  • மேலும், நெல்லை காய வைத்து கொடுப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக, கூலி ஆட்கள் கிடைப்பதில்லை. காய வைக்க இட வசதியும் குறைவு.இவ்வாறு, அவர் கூறினார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

  • நெல் காய்ச்சல் இருந்தால் தான், நீண்ட காலத்திற்கு இருப்பு வைக்க முடியும்.இதனால் தான், கொள்முதல் செய்யும்போதே காய்ச்சல் உள்ளதாக இருக்க வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்படுகிறது.
  • மேலும், நெல்லை சுத்தமாக தூற்றி வழங்குவதற்கு அறிவுறுத்துகிறோம்.
  • இதை பின்பற்றாத சில விவசாயிகள், தனியார் நெல் விற்பனை நிலையங்களுக்கு விற்று வருகின்றனர்.சில விவசாயிகள், நெல் பயிரிட தொடங்குவதற்கு முன்பே தனியாரிடம் முன் பணம் பெற்று விடுகின்றனர்.
  • இதனால், அறுவடையின் போது, நெல்லை அவர்களிடமே கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அறுவடை செய்யப்பட்ட நெல்லை, அரசு கொள்முதல் மையங்களிலும் விற்காமல், தனியாரிடமும் கொடுக்காமல், சந்தையில் விலை ஏறும் போது விற்பனை செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில், சில விவசாயிகள் இருப்பு வைக்கின்றனர்.

களங்களிலும், சாலை ஓரங்களிலும் நெல்லை குவித்து, தார் பாய் போட்டு பாதுகாக்கின்றனர். இதுகுறித்து, வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

விலை குறையும் நேரங்களில், இருப்பு வைத்து விற்பனை செய்வதற்கு தான், வேளாண் துறையில் சார்பில், ஒழுங்குமுறை விற்பனை நிலையங்கள் துவக்கப்பட்டன.

இங்கு, சந்தை விலை குறையும் போது, விவசாயிகள், தங்கள் விளைபொருட்கள் மீது இருப்பு ஈட்டுக் கடன் பெறலாம். பின், விலை ஏறும்போது, ஈடு வைத்த நெல்லை மீட்டு, விற்பனை செய்து கொள்ளலாம். இந்த வாய்ப்பினை பெரும்பாலான விவசாயிகள் பயன்படுத்திக் கொள்வதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: தினமலர் 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *