நெற்பயிரில் இலைக்கீரல் நோய் கட்டுப்படுத்த யோசனை

கோபிசெட்டிபாளையம் டி.என்.பாளையம் பகுதியில் நெற்பயிரில், பாக்டீரியா இலைக்கீரல் நோய் தாக்கத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து, டி.என்.பாளையம் வேளாண்மை துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

அரக்கன்கோட்டை பாசனப்பகுதிகளான, பங்களாப்புதூர், கள்ளிப்பட்டி, டி.என்.பாளையம், டி.ஜி.புதூர் உள்ளிட்ட பகுதியில், 2,200 எக்டேர் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளன. பாக்டீரியா இலைக்கீரல் நோய் தாக்கத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.நோயை கட்டுப்படுத்தும் விதம் குறித்து, டி.என்.பாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் சிதம்பரம் கூறியதாவது:

  • நெற்பயிர்களின் இலைகளின் நுனி மற்றும் ஓரங்களில் ஆரஞ்சு நிற கீரல்கள் நீளவாக்கில் காணப்படும்.
  • நாளடைவியில், இக்கீரல்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து வைக்கோல் போன்று காய்ந்து காணப்படும்.
  • வயல்களில் காணப்படும் அதிகமான களைகள், காற்றில் அதிகமான ஈரப்பதம் நிலவும் சூழ்நிலை, மழைத்துளி, வேகமாக வீசும் காற்று ஆகியவை, இந்நோய் வேகமாக பரவுவதற்கான சூழல்களாகும்.
  • நோய்க்கு எதிர்ப்புதிறன் உள்ள ரகங்களை பயிரிடுதல் (ஐ.ஆர்.20, பொன்னி) நோய் தாக்காத விதைகளை விதைத்தல், நடவின்போது நாற்றின் நுனிகளை கிள்ளி நடுவதை தவிர்த்தல், அதிகமான தழைச்சத்து உரம் இடுவதை தவிர்த்தல், களையை அகற்றி வயலை சுத்தமாக வைத்துக்கொள்வது, நோய் தாக்கிய வயலில் இருந்து மற்ற வயல்களுக்கு பாசன நீர் செல்லாமல் தவிர்த்தல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் இந்நோயின் தாக்கத்தை குறைக்கலாம்.
  • நோயின் தாக்கம் அதிகமாகும்போது, காப்பர் ஹைட்ராக்ஸைடு மருந்தை, ஏக்கருக்கு, 250 கிராம் என்ற அளவில், இலைகளின் மேல் தெளித்தோ அல்லது காப்பர் ஆக்ஸி குளோரைடு, 500 கிராம் மற்றும் ஸ்டெப்ரோசைக்ளின், 120 கிராம் ஆகிய மருந்துகளை கலந்து பயிரின் மேல் தெளிப்பதன் மூலம், இந்நோயை கட்டுப்படுத்தலாம்.
  • நாற்றாங்கால் விடும்போது, விதைகளை ஸ்டெப்ரோசைக்களின், மூன்று கிராம் என்ற அளவில், எட்டு மணி நேரம் விதைகளை ஊறவைத்தும் விதை நேர்த்தி செய்து விதைக்கலாம்.
  • ஐந்து சதம் வேப்பங்கொட்டை கரைசல் தெளித்தும், இந்நோயினை கட்டுப்படுத்தலாம்.
  • நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன், புதிய பசுஞ்சாணத்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 20 கிராம் என்ற அளவில் கரைத்து வடிகட்டி, 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளித்தால், இந்நோயை கட்டுப்படுத்தலாம், என்றார்.

நன்றி: தினமலர் 

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *