நெற்பயிரில் உர மேலாண்மை

நெல் பயிரில் உயர் விளைச்சல் பெறுவதற்கு ஒருங்கிணைந்த உர மேலாண்மை நிர்வாகத்தை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும் என்று வேலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஆர்.ஜெயசுந்தர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

 •  நெல் விளைச்சலில் 40 விழுக்காடு உர நிர்வாகத்தைப் பொருத்தே அமைகிறது.
 • இயற்கை எருக்களான பசுந்தாள் உரம், தொழு உரம், மண்புழு உரம், மக்கிய தென்னை நார்க் கழிவு, செயற்கை உரங்களான யூரியா, சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ் உரங்கள், உயிரி உரங்களான பாஸ்போ பாக்டீரியா, அசோஸ்ஸ் பைரில்லம், நுண்ணூட்ட சத்துகளைச் சேர்த்து சமச்சீர் உணவாக நெல்லுக்கு அளிப்பது தான் ஒருங்கிணைந்த உர மேலாண்மை நிர்வாகம்.
 • இதனால் நிலவளத்தை காத்து, விளைச்சலை அதிகரிக்கச் செய்ய முடியும்.

 நெல் பயிருக்கு அடியுரம்

 •  மண் ஆய்வு அடிப்படையில் வயலில் வேதியியல் உரங்களை இட வேண்டும்.
 • இதனால், மண்ணிலிருந்து பயிருக்கு கிடைக்கும் உரச் சத்தின் அளவையும் பயிரின் உரத் தேவையையும் தீர்மானிக்கலாம். இதனால் தேவைக்குக் குறைவான அல்லது அதிகமாக உரமிடுவதைத் தவிர்க்கலாம்.
 •  மண் ஆய்வு செய்யாத நிலமாக இருப்பின், ஏக்கருக்கு 50 கிலோ தழைச் சத்தும், 20 கிலோ மணிச் சத்தும், 20 கிலோ சாம்பல் சத்தும் இட வேண்டும்.
 • இதில் அடியுரமாக மணிச்சத்தை ஊட்டமேற்றிய தொழு உரமாக இட வேண்டும்.
 • நெல் பயிரின் இளம் பருவத்தில் வேர்ப் பிடித்து நன்றாக வளாóவதற்கும், பூக்கள் பூப்பதற்கும் நெல்மணிகளின் வளர்ச்சி எண்ணிக்கை, முதிர்வடைதல் ஆகியவற்றை சீராக்கி விளைச்சலைப் பெருக்குவதற்கு ஏக்கருக்கு 62.5 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரத்தை 300 கிலோ தொழு உரத்துடன் கலந்து ஒரு மாதம் காற்று புகாமல் வைத்து ஊட்டமேற்றிய தொழுவுரமாக மாற்றி கடைசி உழவின்போது இட வேண்டும்.
 • இரும்புச் சத்து குறைபாடுள்ள நிலத்தில் அடியுரமாக பெரஸ் சல்பேட்டை ஹெக்டேருக்கு 50 கிலோ என்ற அளவில் இடவேண்டும்.
 • மானாவாரி நெல்லுக்கு சிங்க் சல்பேட் ஹெக்டேருக்கு 25 கிலோ என்ற அளவில் விதைப்பின்போது இட வேண்டும்.
 • ஒரு ஹெக்டேருக்கு 10 பாக்கெட் அசோஸ்பைரில்லம், 10 பாக்கட் பாஸ்போ பாக்டிரியா ஆகியவற்றுடன் 25 கிலோ தொழு உரம், 25 கிலோ மண் கலந்து வயலில் முதல் மழை வந்தவுடன் தெளிக்க வேண்டும்.

 மேலுரம்

 •  நெல் பயிருக்கு மேலுரமிடுவதில் மிகுந்த கவனம் தேவை.
 • நெல் வளர்ச்சியில்  தூர்கட்டும் பருவம், தண்டு உருளும் பருவம், பூக்கும் தருணம் ஆகிய காலங்களில் பயிர்களுக்கு உணவு சத்துக்களின் தேவை அதிகம். இதற்கு தழைச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது.
 •  மானாவாரியில் பகுதி பாசனம் செய்யும் நெல் ரகங்களுக்கு, தழைச்சத்து அடங்கிய யூரியாவை, நட்ட 20, 40, 60-ம் நாளில் முறையே ஏக்கருக்கு 22 கிலோ யூரியா என்ற அளவில் இட வேண்டும்.
 • சாம்பல் சத்து உரத்தை, நட்ட 20, 40-ம் நாளில் முறையே ஏக்கருக்கு 8, 9 கிலோ இட வேண்டும்.
 •  விதைத்த முதலிலும், இடையேயும் நல்ல மழை பெய்து, பயிரின் வளர்ச்சி நன்கு அமைந்திருப்பின் இரண்டாம் தருணமான 40 முதல் 45 நாள்களுக்குள் இடப்படும் யூரியாவை ஏக்கருக்கு 35 கிலோவாக அதிகரிக்கலாம். அதன் பின்பு குறைந்தது 10 நாளாவது தண்ணீர் தேங்கியிருத்தல் கட்டாயத் தேவை.

 இலைவழி உரமிடல்

 •  இலைவழி உரமாக யூரியா 1 சதம், டிஏபி2 சதம் கரைசலை இருமுறை குருத்து உருவான தருணத்திலும், பத்து நாள்கள் கழித்து மீண்டும் ஒரு முறையும் தெளிப்பது நல்லது.
 • இந்த வழிமுறைகளை முறையாக பயன்படுத்துவதால் நெல் மகசூலை பெருக்க முடியும் என்றார் ஜெயசுந்தர்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *