நெற்பயிரில் கதிர்நாவாய் பூச்சி கட்டுப்படுத்தும் முறைகள்

நெற்பயிரில் கதிர்நாவாய் பூச்சியை கட்டும்படுத்தும் முறைகள் பற்றி வேளாண்மை அதிகாரி விளக்கியுள்ளார்.

“”தென்காசி வட்டாரத்தில் நடப்பு பிசான பருவத்தில் 3 ஆயிரத்து 500 எக்டர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பூக்கும் பருவத்திலும், பால்பிடிக்கும் பருவத்திலும் நெற்பயிர் உள்ளது. இப்பருவத்தில் கதிர்நாவாய் பூச்சி தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது.

அறிகுறிகள்

 • இப்பூச்சியின் குஞ்சுகளானது பச்சை அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும்.
 • காலையிலும் மாலையிலும் இப்பூச்சிகள் அதிகளவில் நெல் மணிகளில் சாற்றை உறிஞ்சுகிறது.
 • நெல் மணிகளில் இப்பூச்சியானது வாயுறுப்பை செலுத்தி உண்பதால் அப்பகுதி பழுப்பு நிற புள்ளிகளாக மாறிவிடும்.
 • இந்த துளையின் வழியோக பூஞ்சாணம் உட்புகுவதால் நெல் மணிகள் நிறம் பாதிப்படைந்து கருமை நிறமாக மாறும்.
 • இப்பூச்சியின் தாக்குதல் தீவிரமாகும் போது பாதிக்கப்பட்ட மணிகள் பதராக மாறும்.
 • மணி உருவான பின் இப்பூச்சி தாக்குவதால் மணிகள் சிறுத்தும் சுருங்கியுள் காணப்படும். பூச்சி இருப்பதை துர்நாற்ற வாடையிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

சாதக சூழ்நிலைகள்

 • பல கட்டங்களில் பயிர் நடவு செய்யப்படுவது, மேக மூட்டமாக இருப்பது, விட்டு விட்டு வரும் தூவான மழை இப்பூச்சி தோன்ற சாதகமான சூழ்நிலையாகும்.
 • நெல் வயலிற்கு அருகில் அதிக பரப்பளவில் இருக்கும் களைகள் மற்றும் கால்வாய் ஓரங்களில் இருக்கும் காட்டு செடிகள் இப்பூச்சிக்கு நெற் பயிர் இல்லா காலங்களில் புகலிடமாக அமைகிறது.

கட்டுப்படுத்தும் முறைகள்

 • ஒரு சேர அனைத்து விவசாயிகளும் நடுவது மற்றும் களைகளின்றி வயலை பராமரிப்பது போன்றவற்றால் கதிர்நாவாய் பூச்சியின் தாக்குதலிருந்து பயிரை பாதுகாக்கலாம்.
 • இறந்த நத்தைகள் மற்றும் எலிகளின் வாடை இப்பூச்சியை கவர்ந்திழுக்கும்.
 • குளவிகள் இதன் முட்டை பருவத்தை தாக்கி அழிக்கும். வெட்டுக்கிளி, சிலந்தி, பொறிவண்டு, தட்டான் உள்ளிட்ட இரை விழுங்கிகள் இப்பூச்சியை உணவாக உட்கொள்கின்றன.
 • 100 கதிர்களில் பூக்கும் பருவத்தில் 5க்கு மேலான கதிர்நாவாய் பூச்சிகளும், பால் பிடிக்கும் மற்றும் கதிர் முதிர்ச்சி பருவத்தில் 16க்கு மேலான கதிர் நாவாய் பூச்சிகளும் காணப்படும்.
 • இந்த வேளையில் பூச்சி கொல்லி மருந்துகள் தெளித்து கட்டுப்படுத்த வேண்டும். டைக்குளோர்வாஸ் 200 மில்லி, பொன்தியான் 200 மில்லி, அபாமெக்டின் 200 மில்லி உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒரு மருந்தை 200 லிட்டர் தண்ணீர் உபயோகித்து ஒரு ஏக்கர் பரப்பில் தெளிக்க வேண்டும்.
 • அல்லது 10 கிலோ வசம்பு தூளை காலை பனி பதத்தில் ஒரு ஏக்கர் பரப்பில் ஒரு வார இடைவெளியில் இருமுறை தூவி கட்டுப்படுத்தலாம்

இவ்வாறு  தென்காசி வேளாண்மை உதவி இயக்குநர் வெங்கடகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி உள்ளார்

நன்றி: தினமலர்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *