காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் தீவிரமாக சாகுபடி செய்யப்பட்டு வரும் பகுதிகளில் தற்போது பாசன நீர் சார்ந்த பிரச்னைகள் தோன்றியுள்ளன. நடவு செய்த பிறகு பயிர்கள் வளர்ச்சியற்று, நுனியில் இருந்து பின்னோக்கி அழுகி, மண்ணோடு மண்ணாக மறைந்து விடுகின்றன.
இத்தகைய நிலங்கள் வடிகால் வசதியற்று தொடர்ந்து நீர் தேங்கி, எப்போதும் நிலம் சதுப்புத் தன்மையுடன் காணப்படுவதும், மண்ணின் காற்றோட்ட வசதியும் முற்றிலும் பாதிக்கப்பட்டு இருக்கும். இந்தப் பிரச்னை கந்தகச் சத்து மிகுந்த இடங்களில், குறிப்பாக ஆழ்துளை நீரை தொடர்ந்து பயன்படுத்தி வரும் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது.
இந்த கந்தகமானது தண்ணீரில் கரைந்து ஹைட்ரஜன் சல்பைடு எனும் நச்சு வாயுவைத் தோற்றுவிக்கிறது. இந்த வாயு நெற்பயிர்களுக்கு தீங்கு விளைவிப்பதால், நடவு செய்யப்பட்ட பயிர்கள் நிலத்தில் இருந்து ஊட்டச் சத்துகளை வேர் மூலம் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் திறன் குறைந்து, அதனால் பயிரின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு அழிந்துவிடுகிறது.
எனவே, இந்தப் பகுதி உழவர் பெருமக்கள் நெற்பயிரில் ஹைட்ரஜன் சல்பைடு நச்சினால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கும் முறைகள், வந்த பிறகு கடைப்பிடிக்க வேண்டிய நிவர்த்தி முறைகள் போன்றவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் உழவியல் துறை முதுநிலை ஆய்வாளர் கி.மருதுபாண்டி, பூச்சியியல் துறை ஆய்வாளர் ஏ.சஞ்சீவிகுமார் ஆகியோர் கூறியதாவது:
- ஹைட்ரஜன் சல்பைடு நச்சுத் தன்மைக்கான காரணிகள் கந்தகச் சத்து மிகுந்த நீரை தொடர்ந்து பாசனத்துக்குப் பயன்படுத்தும்போது தண்ணீரில் ஹைட்ரஜன் சல்பைடின் அளவு அதிகரிக்கிறது.
- வயலில் வடிகால் வசதியின்றி தொடர்ந்து நீர் தேங்கியிருப்பதால் ஏற்படும் குறைந்த காற்றோட்டத்தால் ஹைட்ரஜன் சல்பைடு நச்சு மண்ணில் மேலும் அதிகரிக்கிறது.
- நெற்பயிருக்கு சாம்பல் சத்தைக் குறைவாக இடுவதாலும், மணிச்சத்து சுண்ணாம்புச் சத்து, மெக்னீசியம் போன்ற ஏனைய சத்துகளின் குறைபாடும் சல்பைடு நச்சுத் தன்மை அதிகரிக்கக் காரணமாக அமைகின்றன.
- ஹைட்ரஜன் சல்பைடு நச்சின் அறிகுறிகள்: ஹைட்ரஜன் சல்பைடு பாதிப்புள்ள வயல்களின் அருகில் சென்றால் அழுகிய முட்டையின் வாடை வருவதுடன் வயலில் இறங்கும்போது தண்ணீரில் இருந்து நுரையாக வாயு வரும்.
- இலைகளின் நரம்புக்கு இடைப்பட்ட பகுதிகள் மஞ்சளாகி வெளிறி காணப்படும். நச்சுத்தன்மை அதிகமாகும்போது பயிர் நுனியிலிருந்து பின்னோக்கி அழுகி மண்ணோடு மண்ணாக மறைந்துவிடும்.
- நெற்பயிரின் சல்லி வேர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைந்தும் வளர்ச்சியின்றியும் கரும்பழுப்பு நிறமாகவும் காணப்படும்.
- மண்ணில் இருந்து பயிரானது ஊட்டச் சத்துகளை எடுத்துக் கொள்ளும் திறன் குறைவதால் பயிரில் சாம்பல் சத்து, சுண்ணாம்புச் சத்து, மெக்னீசியம், சிலிக்கான் போன்றவற்றின் பற்றாக்குறைக்கான அறிகுறிகள் தென்படும்.
- ஹைட்ரஜன் சல்பைடு நச்சினால் ஊட்டச் சத்துகளின் சமச்சீர் தன்மை பாதிக்கப்படுவதால் பயிரின் வளர்ச்சி குறைந்து தண்டு அழுகல், செம்புள்ளி போன்ற நோய்கள் பயிரைத் தாக்கும் அபாயம் உள்ளது.
ஹைட்ரஜன் சல்பைடு நச்சுத் தன்மையைத் தடுக்கும் வழிகள்:
- ஹைட்ரஜன் சல்பைடு நச்சுத் தன்மையைத் தாங்கி வளர, பயிரின் வளர்ச்சி அதிகமாக இருக்க வேண்டும். எனவே, திருந்திய நெல் சாகுபடி முறையில் பயிரின் வேர் வளர்ச்சி துரிதப்படுவதாலும், ஊக்குவிக்கப்படுவதாலும் இந்த நச்சுத் தன்மையைத் தாங்கி வளர வாய்ப்பு உள்ளது.
- மேலும், திருந்திய நெல் சாகுபடி முறையில் கோனோவீடர் எனும் களை எடுக்கும் கருவியைக் கொண்டு களையை சேற்றில் அமுக்கி கலக்கும்போது மண்ணின் காற்றோட்டம் மேம்படுவதால் ஹைட்ரஜன் சல்பைடு நச்சு வாயு வெளியேறி பாதிப்பு குறையவும் வாய்ப்பு உள்ளது.
- கோடை உழவு செய்வதால் மண்ணில் காற்றோட்டம் அதிகரித்து கந்தகம், இரும்பு அயனிகளின் மாற்றம் அதிகமாவதால் ஹைட்ரஜன் சல்பைடு நச்சு மண்ணில் தேங்குவது குறைகிறது.
- கந்தகச் சத்து மிகுந்த ஆழ்துளைக் கிணற்று நீரை பாசனத்துக்குப் பயன்படுத்துவதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.
- தொடர்ந்து வயலில் நீர் தேங்கி இருப்பதைத் தவிர்ப்பதுடன், வடிகால் வசதியற்ற, கந்தகம் அதிகம் உள்ள வயல்களில் காய்ச்சலும் பாய்ச்சலுமாக பாசனம் செய்ய வேண்டும். பயிருக்குத் தேவையான ஊட்டச் சத்துகளைத் தேவைக்கு ஏற்ப, சமச்சீர் அளவில் பயிருக்கு அளித்தல், சாம்பல் சத்தை பரிந்துரைக்கப்படும் அளவை விட 10 சதவீதம் வரை கூடுதலாக இடுவது அவசியம்.
- பாசன நீர் உப்பாக இருக்கும்போது பம்ப் செட்டில் இருந்து நீரை நேரடியாக வயலுக்குப் பாய்ச்சாமல், சிறிய குட்டையில் தேக்கியோ, நீண்ட வாய்க்காலில் ஓடி பிறகுப் பயிருக்குப் பாயுமாறோ செய்ய வேண்டும்.
- இவ்வாறு செய்யும்போது சல்பைடு நச்சு ஆவியாகி அதன் தாக்கம் குறையும் வாய்ப்பு உள்ளது.
- நீரை நன்கு வடித்த பிறகு ஏக்கருக்கு 10 கிலோ யூரியாவுடன் 10 கிலோ பொட்டாஷ் உரத்தைச் சேர்த்து சீராக தூவ வேண்டும். பிறகு 2 நாள்கள் கழித்து லேசாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மேற்கூறிய உரமிடுதலை 7 – 10 நாள்கள் இடைவெளியில் மறுபடியும் மேற்கொள்ள வேண்டும். பிறகு தேவையான ஊட்டச் சத்தை இலை வழியாக அளித்தும், பயிர் வளர்ச்சியை ஊக்கப்படுத்தலாம்.
- இரும்புச் சத்துள்ள உப்பு, உரங்களை (அன்னபேதி உப்பு) அதிக அளவு மண்ணில் இடலாம். இதனால் ஹைட்ரஜன் சல்பைடானது பெர்ரஸ் சல்பைடாகி நெற்பயிரில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும். எனவே, காவிரி டெல்டா விவசாயிகள் எதிர்வரும் காலங்களில் நெல்லுக்குப் பரிந்துரைக்கப்படும் உர மேலாண்மை, நீர் மேலாண்மை முறைகளை சரிவர கையாள்வதுடன் திருந்திய நெல் சாகுபடி முறையையும் கடைப்பிடித்து ஹைட்ரஜன் சல்பைடு நச்சின் பாதிப்பைத் தவிர்த்து நெல்லில் நிறைவான மகசூல் பெறலாம்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்