நெல்லில் செம்பேன் ஒருங்கிணைந்த கட்டுப்பாடு

  • தற்போது பயிரிடப்பட்டுவரும் பல்வேறு ரக நெற்பயிர்களில் செம்பேன் தாக்குதல் அதிகம் தென்பட்டு வருகிறது.
  • இச்செம்பேன்கள் கண்களுக்கு தெளிவாகப் புலப்படாது.  ஒரு மி.மீ. அளவிற்கும் சிறியவை. சாதாரண கை உருப்பெருக்கிகள் கொண்டுதான் நன்றாக பார்க்க முடியும்.
  • எட்டுக்கால்களைக் கொண்ட சிலந்திவகையைச் சேர்ந்த இந்த நுண்ணிய செம்பேன்கள் நெற்பயிரில் இலைகளின் அடிப்புறத்தில் இருந்து சாற்றை உறிஞ்சுவதால் இலைகளின் மேற்பரப்பில் பழுப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்தில் புள்ளிகளும் மெல்லிய வரிகளும் ஏற்பட்டு நாளடைவில் இலைகள் வெளிறி கருகிவிடும்.
  • அதிக எண்ணிக்கையில் பெருகும்போது இலையின் மேற்பரப்பிற்கும் வந்து சாற்றை உறிஞ்சி மிகுந்த அளவில் சேதம் ஏற்படுத்துகிறது.
  • நாற்றங்கால்களிலும் நடவு வயலிலும் இதன் பாதிப்பால் 25 சதம் வரை மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
  • வெப்பமான மழைக் காலத்தை ஒட்டி இதன் தாக்குதல் அதிகம் தென்படும்.
  • தாய்ச்செம்பேன்கள் தனித்தனி முட்டைகளை இலைகளின் நடுநரம்புகளை ஒட்டி இருபுறங்களிலும் இடுகின்றன.
  • மென்மையான பட்டு இழைகள் போல் வலைகள் பின்னி 200 முட்டைகள் வரை இடுகின்றன.
  • குஞ்சுகள் 6 கால்களுடன் இளம்பழுப்பு நிறத்திலும் முதிர்ந்த செம்பேன்கள் 8 கால்களுடன் மஞ்சள் கலந்த பச்சை நிறத்திலும் காணப்படும்.
  • தாய்செம்பேன்கள் 21 நாட்கள் வரை உயிர்வாழும். உடம்பின் இரு ஓரங்களிலும் சிறு கருப்பு புள்ளிகளுடன் காணப்படும்.

செம்பேன் பரவ காரணங்கள்

  • வயற்பரப்பில் அதிகமான ஈரப்பதமும் வெப்பமும் இருத்தல்,
  • நெருக்கமான நடவு,
  • போதுமான காற்றோட்டமும் சூரிய வெளிச்சமும் இல்லாதது,
  • களைகள் மண்டிக் கிடப்பது,
  • தேவையில்லாமலும் தேவைக்கு அதிகமாகவும் விஷப்பூச்சி மருந்துகளைத் தெளித்து இயற்கை எதிரிகளை அழிப்பது போன்றவை இந்த நெற்செம்பேன்களின் அதிவேகமான இனப்பெருக்கத்திற்கு முக்கிய காரணங்களாகும்.

கட்டுபடுத்தும் முறைகள்

  • சூடோமோனாஸ் புளூரசன்ஸ் என்ற பூஞ்சாணத்தை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்து விதைப்பதால் செம்பேன் தாக்குதலைத் தவிர்க்கலாம்.
  • வயலில் களைகளை அகற்ற வேண்டும்.
  • செம்பேன்கள் பாதித்த பாகங்களை சேகரித்து அழித்தல் வேண்டும்.
  • எதிர்ப்புத்திறன் உள்ள நெல் ரகங்களைக் கண்டறிந்து பயிர்செய்ய வேண்டும்.
  • தழைச்சத்து அதிகம் இடுவதைத் தவிர்க்கவும்.
  • தழைச்சத்தை யூரியா வடிவில் வேப்பம் புண்ணாக்குடன் 5:1 என்ற விகிதத்தில் கலந்து இடவேண்டும்.
  • தொடர்ந்து நெல் சாகுபடி செய்யாமல் பயிர் சுழற்சி முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
  • செம்மை நெல் சாகுபடி முறைகளைப் பின்பற்றும்போது பொதுவாக செம்பேன் மற்றும் இதர பூச்சிகளின் தாக்குதல் மிகக்குறைவாக உள்ளது.
  • செம்பேன்களின் எண்ணிக்கை இலைக்கு 10 என்று மிகும்பொழுது நனையும் கந்தகம்  80 சதம் @ 6.25 கிராம்/ லி, புரபெனோபாஸ் @ 2மிலி/லி, ஸ்பைரோமெசிபென் @ 0.75 மிலி/லி அல்லது 3 சத வேப்பெண்ணெய் கரைசல், 5 சதம் வேப்பம் பருப்புச்சாறு போன்றவற்றைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
  • பூச்சி மருந்து தெளிக்கும்போது தவறாது ஒட்டும் திரவம் 0.5 மிலி/லி என்ற அளவில் சேர்க்க வேண்டும்.

ஜெ.ஜெயராஜ், சி.சின்னையா மற்றும் எஸ்.மணிசேகரன்,
வேளாண் பூச்சியியல் துறை,
வேளாண்மைக் கல்லூரி மற்றும்
ஆராய்ச்சி நிலையம்,
மதுரை-625 104.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *