நெல்லில் 3 புதிய ரகங்கள்

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக மூன்று நெல் ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வேளாண் பல்கலைக்கழகம் மூலம் அறிமுகப்படுத்தப்படும் நெல் ரகங்கள், முதல், 10 ஆண்டுகளுக்கு அரசு மூலம், விதை நெல், மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.புதிய ரகம் என்பதால், அதை பிரபலப்படுத்தவும், விவசாயிகளை ஊக்கப்படுத்தவும், மானியம் வழங்கப்படுகிறது.

கடந்தாண்டில், கோவை ரகமான கோ-ஆர்-50 என்ற புதிய சன்ன ரகம், ஈரோடு மாவட்டத்தில் அறிமுகமானது. இது, 130 முதல், 135 நாள் பயிராகும். விதைப்பண்ணையில், 38.5 ஏக்கரில் தற்போது பயிர் செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, விவசாயிகளிடம் வழங்கி, விதை நெல் உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு கிலோ, 10 ரூபாய் மானியத்தில் வழங்கப்படும்.

இதேபோல, இந்தாண்டு, கோவை ரகமான கோ-ஆர்-51 என்ற குறுவைக்கு ஏற்ற, 110 முதல், 115 நாள் பயிர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்பயிர், 23.5 ஏக்கரில் விதை உற்பத்தியில் உள்ளது. இதுவும், 10 ரூபாய் மானியத்தில் வழங்கப்படும்.

தவிர, ஆடுதுறை ரகமான, ஏ.டி.டி.,48 என்ற சம்பா பருவத்துக்கு ஏற்ற, நடுத்தர ரகம், 130 முதல், 135 நாள் விதை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இம்மூன்று ரகமும், அரசு விதைப்பண்ணையில் விதையாக உற்பத்தி செய்து பிரச்னைகள், நாட்கள், மகசூல் போன்றவை கணக்கிட்டு வினியோகம் துவங்கும். வழக்கமாக சான்று விதை உற்பத்தியின்போது, ஒரு ஹெக்டருக்கு, 5 டன் விதை கிடைக்கும். அச்சான்று விதையை விவசாயிகள் பெற்று, வயல்களில் நடவு செய்யும்போது, ஹக்டருக்கு சராசரியாக, 7.5 டன் மகசூல் கிடைக்கும். ஏ.டி.டி., 16 என்ற குண்டு ரக இட்லி அரிசிக்கு மாற்றாக, கோ-ஆர்-51 ரகம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள மூன்று ரகமும், நோய் மற்றும் மருந்து எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டவை என்றும் வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *