நெல் பயிரில் புகையான் தாக்குதல்

நெல் பயிரை தாக்கும் புகையான் பூச்சியைக் கட்டுப்படுத்த பின்வரும் தொழில்நுட்பங்களைக் கையாண்டு பயிரைக் காக்கலாம் என்று, கிருஷ்ணகிரி வேளாண்மை இணை இயக்குநர் சே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கார், சம்பா பருவத்தில் நெல் பயிரை குறிப்பாக, ஐ.ஆர்.-64, பிபிடி மற்றும் ஜலகர பொன்னி போன்ற ரகங்கள் புகையான் பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன.

அறிகுறிகள்:

  • இந்தப் பூச்சி தாக்கும் வயல்களில் வட்ட வட்டமாக பயிர்கள் தீயில் காய்ந்தது போலக் காணப்படும். இந்தப் பூச்சித் தாக்குதலுக்கு உள்ளான பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறி பின்னர் முற்றிலும் காய்ந்து விடும்.
  • நெல் பயிரின் தண்டு உடைந்து சாய்ந்துவிடும். இதனால், மகசூல் முற்றிலும் பாதிக்கப்படும். தண்டுப் பகுதியில் துர்நாற்றம் வீசும்.
  • இந்த வகையான புகையான் பூச்சிகள் பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் நெல் பயிரின் தண்டுப் பகுதியின் அடியில் நீர்ப்பகுதிக்கு சற்று மேலே இருந்து கொண்டு தண்டின் சாற்றை உறிஞ்சி எடுக்கும்.
  • இதனால், தண்டுப் பகுதி செயலிழந்து மடிந்து பயிர்கள் சாய்கின்றன. தண்ணீர் தேங்கியுள்ள வயல்களிலும், தழைச் சத்து அதிகம் இட்ட வயல்களிலும் இந்தப் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும். எனவே, பயிர் பால் பிடிக்கும் முன்பே காந்து பதராகிவிடும். ஆகையால், பூச்சிக் கட்டுப்பாடு முறைகளை கையாள்வது அவசியமாகிறது.

புகையான் கட்டுப்பாடு முறைகள்:

  • பயிருக்கு அதிக தழைச்சத்து இடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • யூரியாவை மேலுரமாக 3 அல்லது 4 முறை பிரித்து இட வேண்டும். நன்மை செய்யும் பூச்சிகளைப் பாதுகாக்க வேண்டும். வயலில் உள்ள நீரை சுத்தமாக வடித்துவிட்டு வேர்களில் நன்குபடும்படி கீழ்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை கைத்தெளிப்பான் கொண்டு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
  • பூப்பதற்கு முன்பு: 5 சத வேப்பங்கொட்டை கரைசல், இமிடா குளோப்ரிட் 200 எஸ்.எல். 50 மி.லி, இமிடா குளோப்ரிட் 17.8 சி.எல். 100 மி.லி., தயோ குளோப்ரிட் 240எஸ்.சி. 200 மி.லி., தயோமிதாக்சாம் 25 டபிள்யூ.ஜி 40 மி.லி., மோனோ குரோட்டோபாஸ் 36 எஸ்.எல். 500 மி.லி.
  • பூத்த பிறகு: வயலில் நீரை வடிகட்டிவிட்டு ஏக்கருக்கு 10 கிலோ கார்பரில் 10 சதத் தூளைப் பயிரின் அடிப் பகுதியில் படும்படி தூவ வேண்டும்.
  • புகையானுக்கு எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் பூச்சி மருந்துகளான செயற்கை பைரிதராய்டுகள், மீதைல் பாரத்தியான், குயினால்பாஸ் போன்ற மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து நெல் பயிரில் புகையான் பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் அலுவலர்களைத் தொடர்பு கொள்ளலாம்

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *