தமிழகத்தில் பயிரிடப்படும் உணவுப் பயிர்களில் நெல் பயிர் பிரதானமாக உள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பிசானப் பருவத்தில் பரவலாக நெல் பயிரிடப்பட்டுள்ளது.
ஆரஞ்சு நிற தோன்றல்:
- இரு மாவட்டங்களிலும் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்களில் மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிற தோன்றல் காணப்படுகிறது.
- இந்த நிறமானது அடி இலைகளில் தொடங்கி மேற்புரம் வரையில் பரவி காணப்படும்.
அறிகுறிகள்:
- முதலில் அடி இலைகள் வெளிறிய மஞ்சள் நிறத்துடன் காணப்படும்.
- பின்னர், இந்த அறிகுறிகள் மேல் இலைகள் வரைக்கும் படிப்படியாக பரவும்.
- மஞ்சள் நிற அறிகுறிகளுக்கான காரணங்களை சரிசெய்யாமல் இருந்தால் பின்னர் ஆரஞ்சு நிறமாக மாறி இலையின் நுனி திசுக்கள் இறந்து காய்ந்து சருகுகளாக மாறும்.
- இவ்வாறு நெல்லின் அடி இலையில் இருந்து நுனி இலை வரை காய்ந்து விடும். காயந்த இலைகளின் பயிர்களில் ஓரினச்சேர்க்கை நடைபெற முடியாது.
- இதனால், மகசூல் குறையும். மேலும், பாதிக்கப்பட்ட நெல் பயிர்களில் பக்க சிம்புகள் உருவாகாமல் போகும். விளைச்சல் வெகுவாகப் பாதிக்கப்படும்.
காரணங்கள்:
- நெல்லில் மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிற இலை தோன்றுவதற்கு முக்கியமாக 2 காணரங்கள் உள்ளன.
- மண்ணில் சாம்பல் சத்து பற்றாக்குறை, மண்ணில் அகி இரும்பு சத்துகளின் கிடைக்கையால் இந்த பாதிப்பு ஏற்படுவதாக ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.
- இந்த பாதிப்பானது வயல் முழுவதும் ஓரத்தில் இருந்து நடு வயல் வரையிலும் காணபட்டால் சாம்பல் சத்து பற்றாக்குறையால் உருவானது எனக் கண்டறியலாம்.
- வயலின் நடுப்பகுதியில் மட்டும் பாதிப்பு இருந்தால் இரும்பு சத்து அதிகம் இருப்பதாகக் கண்டறியலாம்.
- பயிரில் தேவைக்கு அதிகமாக உரங்களை இடுவதாலும், சமச்சீரற்ற ஊட்டச்சத்துகளை அளிப்பதாலும் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன.
- மேலும், நிலங்களை காயவிடாமல் நீர்ப்பாய்ச்சுவதாலும் பாதிப்பு ஏற்படுகிறது.
- திருந்திய நெல் சாகுபடி முறையை விட சாதாரண முறையில் சாகுபடி செய்யப்பட்ட நெல் பயிரில் இத்தகைய பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது.
தடுக்கும் முறைகள்:
- இந்த பாதிப்பைக் கட்டுப்படுத்த சாம்பல் சத்தை சற்று கூடுதலாக இட வேண்டும்.
- ஒரு ஹெக்டேர் நெல் பயிருக்கு பரிந்துரைக்கப்ட்ட 60 கிலோ சாம்பல் சத்துடன் கூடுதலாக 30 கிலோவையும் சேர்த்து பயிரின் வளர்ச்சி பருவத்துக்கு தகுந்தபடி பிரித்து இட வேண்டும்.
- மண் பரிசோதனை செய்து அதற்கு தகுந்தபடியும் உரமிடலாம்.
- மேலும், காய்ச்சல் பாய்ச்சல் முறையில் நீர் மேலாண்மையைக் கையாளுவதன் மூலமும் பாதிப்பைத் தவிர்க்கலாம்.
- வளர்ச்சியடைந்த நெல்லில் பாதிப்பு வராமல் தடுக்க 2 சத டிஏபி, ஒரு சத யூரியா, ஒரு சத பொட்டாஷ் ஆகியவற்றை 15 நாள்களுக்கு ஒரு முறை கைத் தெளிப்பான் மூலம் பாதிக்கப்பட்ட பயிர்களில் முழுமையாக நனையும் வகையில் தெளிக்க வேண்டும்.
இந்த தொழில்நுட்ப முறைகளை தவறாமல் பின்பற்றி மகசூல் இழப்பைக் கட்டுப்படுத்தலாம் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக நெல் ஆராய்ச்சி நிலைய மண்ணியல் பேராசிரியர் சு. ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்