மழைக்காலத்தில் நெல் பயிரை பாதுகாக்க யோசனைகள்

மழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளுக்கு நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத் தலைவர் முனைவர் டி. பாஸ்கரன், பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் இராஜா. ரமேஷ் ஆகியோர் நெல் வயல்களில் மழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக கூறியதாவது:

Courtesy: Dinamani
Courtesy: Dinamani

 

 

 

 

 

 

 

 

 

தமிழகத்தில்  தற்போது அதிக மழை பெய்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், நெல் பயிரின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், எதிர்பார்க்கும் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலில் இருந்து நெற்பயிரைக் காக்கவும் கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

  • வடிகால் வசதியை உடனடியாக ஏற்படுத்தி வயல்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • இளம் நெல்பயிர்கள் அழுகிப் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அவ்வாறான சமயங்களில் அதே வயதுடைய நாற்றுகளை அந்த இடத்தில் மீண்டும் நடவு செய்ய வேண்டும்.
  •  சற்று வயதான நெல் பயிராக இருந்தால் வயலில் அதிக தூர்கள் இருக்கும் குத்திலிருந்து சில தூர்களைப் பிடிங்கி, நெற்பயிர் அழுகிய இடங்களில் நட்டு பயிர் எண்ணிக்கையைச் சரியாக பராமரிக்க வேண்டும்.

 ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்யும் வழிமுறைகள்:

  • தண்ணீரால் மூழ்கிய பயிர்களில் தழைச்சத்து குறைபாட்டைப் போக்குவதற்கு மழை இல்லாதபோது ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம், 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு- இவற்றைக் கலந்து ஓர் இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் காலை இதனுடன் 17 கிலோ பொட்டாஷ் உரத்தையும் கலந்து தெளிக்க வேண்டும்.
  •  இலை வழி உரமாக அளிக்க வேண்டுமெனில் 2 கிலோ யூரியாவுடன் 1 கிலோ சிங்சல்பேட்டை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும் அல்லது 4 கிலோ டி.ஏ.பி.யை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து ஓர் இரவு முழுவதும் வைத்திருந்து, மறுநாள் காலை வடித்து தெளிந்த நீருடன் 2 கிலோ பொட்டாஷ் உரத்தையும் சேர்த்து 190 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

 இலைச்சுருட்டுப் புழுவைக் கட்டுப்படுத்த வழிமுறைகள்:

  • தற்போது நிலவும் மந்தமான சீதோஷ்ணநிலையில் இலைச்சுருட்டுப்புழு, குருத்து ஈ மற்றும் புகையான், ஆனைக்கொம்பன் ஈ போன்ற பூச்சிகளின் தாக்குதல் மற்றும் குலை நோய் தோன்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
  • இலைச்சுருட்டுப் புழு தாக்கப்பட்ட வயல்களில் இலைகள் நீளவாக்கில் சுருட்டப்பட்டு, பட்டுப் போன்ற மெல்லிய இழைகளால் இணைத்து புழுக்கள் உள்ளிருந்து கொண்டு இலைகளை சுரண்டி உண்ணுவதால், இலைகளில் பச்சையம் சுரண்டப்பட்ட இடங்களில் நீளவாக்கில் வெள்ளை நிற பட்டையாகக் காணப்படும்.
  • இதனைக் கட்டுப்படுத்திட ஒரு ஏக்கருக்கு வேப்பெண்ணெய் 3 சதவீதம், வேப்பங்கொட்டைக் கரைசல் 5 சதவீதம் ஃப்ளுபென்டியாமைட் 20 மில்லி, குளோரன்ட்ரான்லிபுரோல் 60 மில்லி, கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 400 கிராம், புரோபினோபாஸ் 400 மில்லி மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தோ அல்லது கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 7 கிலோ மருந்தை 10 கிலோ மணலுடன் கலந்து தூவியோ கட்டுப்படுத்தலாம்.
     

குருத்து ஈ, புகையான், ஆனைக்கொம்பன் ஈயைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  •  குருத்து ஈ தாக்குதலுக்குண்டான இளம் இலைகளில் மெல்லிய துளைகள் காணப்படும். முதிர்ச்சியடைந்த இலைகளில் தாக்கப்பட்ட பகுதியில் இலை முறிந்து காணப்படும்.
  • ஆனைக்கொம்பன் ஈயினால் தாக்கப்பட்ட இலைகள் விரியாமல் வெங்காய இலை போன்று சுருண்டு நீண்டு காணப்படும்.
  • இவற்றை கட்டுப்படுத்திட அசடிராக்டின் 500 மில்லி அல்லது தயாமீத்தாக்சாம் 40 கிராம் அல்லது குளோரிபைரிபாஸ் 500 மில்லி, கார்போசல்பான் 400 மில்லி அல்லது பிப்ரோனில் 400 கிராம் மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

 குலை நோயைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • குலை நோயினால் பாதிக்கப்பட்ட நெற்பயிரின் இலையில் நீல நிற புள்ளிகள் உருவாகி இரண்டு பக்க நுனிகளும் விரிவடைந்து, நடுப் பகுதியில் அகலமாகவும், முனைகள் கூராகவும் உடைய நீண்ட கண் வடிவத்துடன் காணப்படும்.
  • இந்த கண் வடிவப் புள்ளிகளின் ஓரங்கள் கரும்பழுப்பும், உள்பகுதியில் இளம் பச்சை அல்லது சாம்பல் நிறமும் கொண்டிருக்கும்.
  •  குலைநோயைக் கட்டுப்படுத்திட 1 கிலோ சூடோமோனஸ் புளோரசன்ஸ் உடன் 1 லிட்டர் புளித்த தயிரை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

 பாக்டீரியா இலைக் கருகல் நோயைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • பாக்டீரியா இலைக் கருகல் நோயினால் தாக்கப்பட்ட இலைகள் நுனியிலிருந்து கீழ்நோக்கி பக்கவாட்டில் மஞ்சள் நிறமடைந்து, பின்னர் கருகிக் காணப்படும்.
  • வைக்கோல் நிறமுடைய காய்ந்த பகுதியானது நுனியிலிருந்து கீழ்நோக்கியும், ஓரங்களிலிருந்து நடு நரம்பை நோக்கியும் நெளிந்து அலை போன்று நீண்ட கோடுகளுடன் தனித்துக் காணப்படும்.
  • இதனைக் கட்டுப்படுத்திட, நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் 20 சதவீத பசுஞ்சாணக் கரைசல் தெளிக்க வேண்டும்.
  • இதற்கு ஒரு ஏக்கருக்கு தேவைப்படும் 40 கிலோ பசுஞ்சாணத்தை 100 லிட்டர் தண்ணீரில் நன்கு கலக்கி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதனை வடிகட்டி பெறப்படும் தெளிந்த கரைசலுடன், மேலும் 100 லிட்டர் தண்ணீர் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு காலை நேரத்தில் தெளிக்க வேண்டும் அல்லது காப்பர் ஹைட்ராக்ûஸடு 500 கிராம் மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *