மழையால் பாதித்த நெற்பயிர்களைக் காக்க வழிகள்

வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களைக் காக்க காட்டுத்தோட்டம் மண் மற்றும் நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் கோ.ரெங்கராஜன், பா.சந்திரசேகரன் தெரிவித்த யோசனைகள்.

வடகிழக்குப் பருவமழையால் சம்பா, தாளடிக்கான இளம் மற்றும் வளர்ந்த நெல் நாற்றுகள் மழை நீரில் மூழ்கி முழுமையாக பயிர் அழுகியும், வெள்ளத்தின் வேகத்தால் நட்ட இளம் பயிர் பெரும்பகுதி கரைந்தும் வீணாகியிருக்கும்.

இதைச் சரிசெய்ய நிலத்தடி நீர்ப்பாசன வசதியுள்ள இடங்களில் ஆடுதுறை 36, 37 போன்ற குறுகியகால ரகங்களை நாற்றுவிட்டு நடவு செய்தோ அல்லது மூன்றாங்கொம்பு முளைவிட்ட நெல் விதைகளை நேரடி ஈரவிதைப்பு செய்தோ ஈடு செய்யலாம்.

வெள்ளத்தின் குறைவான வேகத்தினால் இளம்பயிர்கள் திட்டுத்திட்டாக கரைந்து போகும் நிலையில் இருந்தால், நாற்று கைவசம் இருந்தால் அதே ரகத்தைக் கொண்டும் அல்லது இருக்கும் பயிரை நடவு செய்தும் பயிர் எண்ணிக்கையை பராம்ரிப்பு செய்யவேண்டும்.

உடனடியாகத் தண்ணீர் வடிய வாய்ப்பு இல்லாத இடங்களில் பயிர் பாதி அளவு நீரில் மூழ்கியிருக்கும் நிலையில், பயிர் மஞ்சள் மற்றும் பழுப்பு நிறமாக மாற வாய்ப்புள்ளது. துத்தநாகம், தழைச்சத்து பற்றாக்குறையினால் இந்த நிலை ஏற்படும்.

உடனடி நிவாரணமாக ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ யூரியாவும், ஒரு கிலோ சிங்க்சல்பேட்டும் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு பயிரின் இலைமேல் தெளிக்கவேண்டும்.

சூல்கட்டும், பூக்கும் பருவத்தில் உள்ள நெல் பயிர்களுக்கு 2 சதம் டிஏபி கரைசலை 14 கிலோ டிஏபி உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து ஒரு நாள் ஊறவைத்த பிறகு மறுநாள் வடிகட்டி, அந்த நீரை 190 லிட்டர் தண்ணீருடன் கலந்து மாலை நேரத்தில் இலைவழி உரமாக கைத்தெளிப்பானால் தெளிக்கவேண்டும்.

நெல் பயிரில் தண்ணீர் வடிந்துவிட்ட நிலையில் ஊட்டச்சத்து பற்றாக்குறையுடன் உடனடியாக மேலுரம் இடவேண்டிய நிலையில் இருக்கும். அப்போது ஏக்கருக்கு 42 கிலோ அமோனியம் குளோரைடு அல்லது 50 கிலோ அமோனியம் சல்பேட்டை தனியாகவோ அல்லது 22 கிலோ யூரியாவுடன் 18 இலோ ஜிப்சம் கலந்து இரவு வைத்திருந்து மறுநாள் 17 கிலோ மூரியேட் ஆப் பொட்டாஷ் உரத்தையும் சேர்த்தோ போடவேண்டும்.

தண்ணீர் வடித்த நிலையில் பயிரின் மேல் வண்டல் மண் படிந்து காணப்பட்டால் அதை காட்டர் ஸ்பிரேயர் மூலம் தண்ணீரை தெளித்து நீக்கவேண்டும். பிறகு ஏக்கருக்கு ஒரு கிலோ சிங்சல்பேட்டு மற்றும் 2 கிலோ யூரியாவை 200 லிட்டர் நீரில் கரைத்து கைத்தெளிப்பான் கொண்டு இலைகளின் மேல் தெளித்து நிவாரணம் காணலாம்.

காற்றின் அதிக வேகத்தினால் நெல் பயிரின் இலை நுனியிலிருந்து நீளவாக்கில் கிழிந்து சிவந்து காய்ந்து காணப்பட்டால் இலை வழி உரமாக ஊட்டச்சத்து தெளிப்பதைத் தவிர்த்து பயிரில் உள்ள தன்ணீர் வடித்த பிறகு 25 கிலோ யூரியாவை 50 கிலோ காய்ந்த மணலுடன் கலந்து இரவு வைத்திருந்து மறுநாள் போடவேண்டும்.

தகவல் அனுப்பியவர் முருகன், MSSRF,  திருவையாறு

நன்றி: MS சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *