மழையினால் நெற்பயிராய் தாக்கும் நோய்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நெற்பயிர்களைத் தாக்கும் இலைக்கருகல் நோயை கட்டுப்படுத்தலாம் என வேளாண் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது.  இலை கருகல் நோய்த் தாக்கும் அபாயம் உள்ள போதும், இவற்றை கட்டுப்படுத்தலாம் என வம்பன் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் ஞானமலர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

  • கடந்த 2 வாரங்களாக பெய்து வரும் மழை மற்றும் மேகமூட்டமான சீதோஷ்ண நிலையால் நெற்பயிர்களில் பாக்டீரியா இலைக்கருகல் நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது.
  • பொதுவாக இந்நோய் நாற்றாங்காலில் நாற்றுகளைத் தாக்குவதுடன் நடவு வயலில் வளர்ச்சியுற்றிருக்கும் நெற்பயிரையும் தாக்குகிறது. அதிக ஈரப்பதம் தொடர்ந்து பலநாட்கள் இருக்கும் போது இந்நோய் வேகமாகப் பரவி நெற்பயிரைத் தாக்கி சேதப்படுத்துகிறது.
  • இது விதை, தண்ணீர் மற்றும் மண் மூலமும் பரவுகிறது.
  • மழைத் தண்ணீர் அதிகமாகத் தேங்குவதால், சூறாவளி 25 மற்றும்  39 சதவிகித அளவு வெப்ப நிலை, அதிக அளவில் தழைச்சத்து இடுதல் மற்றும் நாற்றுக்களைக் கிள்ளி நடுதல் ஆகியன இந்நோய் பரவ காரணமாக உள்ளன. நெற்பயிர் இல்லாத காலங்களில் களைச் செடிகளான லீர்சியா ஹெக்சான்ட்ரா, குதிரைவாலி, எறுமைப்புல் ஆகியவற்றையும் இந்நோய் தாக்கி பரவுகிறது.
  • நோயின் அறிகுறிகளாக நெற்பயிரின் அடி மட்டத்தில் உள்ள இலைகளின் ஓரங்களில் உருண்டை வடிவில் உள்ள புள்ளிகள் தோன்றும், இப்புள்ளிகள் மேலும் நீண்டு அகலாமாகியும் பெரிதாக வளரும். இதன் ஓரங்கள் அலை போன்ற அமைப்பு இருக்கும். பின் மஞ்சளாக மாறி முடிவில் காய்ந்து விடும். இலைகள் முற்றிலுமாக காய்ந்து கருகியவுடன் அந்த இலைகளின் மேல் சாறுண்ணி பூசணங்கள் வளருவதால் இலைகள் சாம்பல் நிறத்துடன் காணப்படும். இலையின் ஆரோக்கியமான பாகத்தின் பக்கத்தில் நீர்க்கோர்வை ஏற்படும். இதன் பக்கத்தில் ஏதேனும் காயம் ஏற்பட்டால் உடனடியாக அதன் மூலம் இந்நோய் தாக்கி புள்ளிகள் தோன்ற ஆரம்பிக்கும். பின் இலையின் முழுப்பரப்பையும் பாதித்துவிடும். இலையின் மேல் பாகத்தில் இளம் புள்ளிகளில் பால் போன்ற ஒளிபூக முடியாத பனித்துளிகளில் அதிகாலையில் பாக்டீரியா நோய்க் கிருமிகளைக் காணலாம்.

கட்டுப்படுத்தும் வழிமுறை:

  • இந்நோய்த் தாக்குதல் ஏற்படாமல் இருக்க முதலில் நோய் எதிர்ப்பு ரகங்களைப் பயிரிட வேண்டும். நடும் போது நாற்றுகளின் நுனியைக் கிள்ளக்கூடாது, உரங்களை கவனத்துடன் இடவேண்டும். நோய் தாக்கிய வயல்களில் தழைச்சத்து உரங்களை பிரித்து இடுவது அல்லது குறிப்பாக நோய் அதிகமாகத் தாக்கிய வயல்களில் மேலுரம் இடாமல் இருப்பது நன்மை பயக்கும்.
  • நோய் தாக்கப்பட்ட வயலில் இக்காத வயலுக்கு பாய்ச்சக் கூடாது.
  • நோயின் அறிகுறி தென்பட்டவுடன் 40 கிலோ பசுஞ்சாணத்தை 100 லிட்டர் தண்ணீரில் முதல் நாள் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் தெளிந்த பசுஞ்சாணக் கரைசலை வடிகட்டி அதனுடன் மொத்த கொள்ளளவான 200 லிட்டர் கரைசலை தயார் செய்து 1 ஏக்கருக்கு இலைவழியாக கைதெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும், பசுஞ்சாணக் கரைசலை தெளிப்பதன் மூலம் இந்நோயை கட்டுப்படுத்தலாம்.
  • 500 கிராம் செப்ரோமைசின் சல்பேட், 300 கிராம் டெட்ரா மைசின், 1250 கிராம் காப்பர் ஆக்ஸிகளோரைடு மருந்தினை ஒரு எக்டரில் ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிப்பதன் மூலமும் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம். அதேபோல் 1250 கிராம் காப்பர் ஹைட்ராக்சைடு 77கிராம் மருந்தினை ஒரு எக்டேரில் தெளிப்பதன் மூலமும் கட்டுப்படுத்தலாம். அத்துடன் நல்ல மகசூலையும் விவசாயிகள் எதிர்பார்க்கலாம். மேலும் விவரங்களை வம்பன் அறிவியல் நிலையத்தில் நேரடியாக அல்லது அலுவலக தொலைபேசி எண் 04322296447 மற்றும் நோயியல் உதவிப் பேராசிரியர் மதியழகன் 09944520544 ஆகிய தொலைபேசி, அலைபேசி எண்களில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *