விதைநெல் முதல் சாதம் வரை!

கடந்த இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வரை சாப்பிடும்போது ஒரு பருக்கை கீழே சிந்தினால் அதைத் தட்டில் எடுத்துப்போட்டு மீண்டும் சாப்பிடும் பழக்கம் இருந்து வந்தது. ஆனால், நவீன உலகத்தில் நாம் எத்தனை பேர் சோற்றுப் பருக்கைகள் சிந்தினால் அதைத் தட்டில் மீண்டும் எடுத்துப் போடுகிறோம்? குக்கரில் இறுக்கமாக மூடி, விசில் வந்தவுடன் எடுத்துச் சாப்பிட்டு விட்டு அடுத்த வேலையைப் பார்க்கக் கிளம்பி போகும் நமக்கு, அதை உற்பத்தி செய்வதை மட்டுமே வேலையாக வைத்துக் கொண்டு இருக்கும் விவசாயிகள் பற்றியும் அவர்கள் உழைப்பைப் பற்றியும் எவ்வளவு தூரம் தெரியும்? அரிசி அரிசியாகவே விளைவது இல்லை.

இந்த வருடம் வெளியான ‘பாம்புச்சட்டை’ திரைப்படத்தில் அரிசியின் அவசியத்தைச் சொல்லுமாறு ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அக்காட்சியில் நடிகர் சார்லி, “நாம சிந்தும் ஒரு பருக்கை ஏதோவோர் ஊர்ல, யாரோ ஒரு விவசாயி நிலத்துல நெல்லா இருந்துருக்கும். அதை அறுவடை பண்ணும்போது நெல்லா வயல்ல விழுந்துருக்கலாம்ல… களத்துல அடிக்கும்போது சிதறி இருக்கலாம்ல… அதுல இருந்து தப்பிச்சு மூட்டையில ஏறி ரைஸ் மில்லுக்கு போயிருக்கும். அங்க அவிச்சு, அரைச்சு, உடைச்சு இதுலையும் தப்பிச்சு அரிசியா வருது. அந்த அரிசியை உங்க அம்மா கழுவும்போது நழுவாம, வடிக்கும்போது தெறிக்காம… பதமா உனக்கு சோறு ஆக்கி போட்ருக்காங்க. இத்தனையும் தாண்டி உன்னைத் தேடி வந்த பருக்கை உன்னோட அலட்சியப் போக்கால வீணா போகணுமா” என தன் மகளிடம் கேட்பார்.  எளிமையாகக் கிடைக்கும் எந்த ஒரு பொருளையும் நாம் அலட்சியம் செய்து கொண்டேதான் இருக்கிறோம். மனித சமுதாயத்தின் மத்தியில் அலட்சியமாக நினைக்கும் விஷயங்களில் மிக முக்கியமானது, அரிசி.

Courtesy: Pasumai vikatan

ஒவ்வொரு பருவம், பட்டம் பார்த்து ஒவ்வொரு ரக விதை நெல்லை விதைக்கும் வழக்கம் விவசாயிகளிடையே இருந்து வருகிறது. நாற்றங்காலில் விதையைத் தூவுவதில் இருந்து தக்கபடி விதை நேர்த்தி செய்து ஈரமான கோணிப்பையில் விதையை ஊற வைக்க வேண்டும். விதைப்பதற்குத் தகுந்ததுபோல நாற்றங்காலை தயார் செய்ய வேண்டும். விதை தூவப்பட்டதற்குப் பிறகு சேதமில்லாமல் எல்லா விதையும் முளைத்து வர வேண்டும். நாற்று அழுகாமலும், பூச்சி நாசப்படுத்தாமலும் பாதுகாக்க வேண்டும். நாற்று நல்லா வளர்ந்தற்குப் பிறகு நாற்றங்காலில் இருந்து பிடுங்கி வயலில் நடவு செய்வதற்காக மட்டும் ஒரு இருபது இருபத்தைந்து நாட்கள் காத்திருக்க வேண்டும்.

நடவு செய்வதற்கு முன்னால் நிலத்தை நன்றாக உழுது, தண்ணீரைப் பாய்ச்சி சேறாக்கி, உரம் போட்டு நன்றாகப் பதப்படுத்தி வைக்க வேண்டும். பதப்படுத்தி வைத்த நிலத்தில் நாற்றுகளையெல்லாம் சீரான இடைவெளியில் நட்டு, தகுந்த அளவு தண்ணீர்விட்டு பராமரிக்க வேண்டும்.

பயிர் வளர வளரக் களையும், நோயும் வளரும் அதனால் ஆகும் செலவும் வளரும். இது நெல்லா களையா என உற்றுப் பார்த்தால் கூட நம்மால் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உருவ ஒற்றுமையோடு வளர்ந்து கொண்டே இருக்கும். இருக்கும் களைகளை எல்லாம் பார்த்து பார்த்து எடுக்க வேண்டும். காலை முதல் மாலை வரை களைபிடுங்கும் ஆட்களுக்கெல்லாம் கூலி தர வேண்டும். களைக்கொல்லி மருந்திற்குத் தனியாக கப்பம் வேறு கட்ட வேண்டும்.

நெல்

களைகளோடு சேர்ந்து நெல்லைத் தாக்கும் பூச்சிகளிடமிருந்து பயிரைப் பாதுகாக்க வேண்டும். யானைக்கொம்பன், தண்டு துளைப்பான் என இன்னும் எத்தனையோ பூச்சிகளெல்லாம் பயிரைக் கடித்து நாசப்படுத்தும். பயிர் சரியாக வரவில்லை என்றால், மண்ணில் போதிய சத்து இல்லை என்றால் உரங்களைக் கொட்ட வேண்டும். கதிர்பிடித்த பயிர்களைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏதாவது ஒரு நோய் வந்துவிட்டால் போதும் அவ்வளவு நாள் பட்ட கஷ்டமெல்லாம் அர்த்தமில்லாமல் போய்விடும்.

கதிர் முற்றி அறுவடை செய்ய காத்திருக்கும்போது நாளும் தவறக் கூடாது, ஆளும் தவறக் கூடாது. சரியான நேரத்தில் நெல் அறுத்து, சரியான நேரத்தில் போர் அடித்து, சரியாக வேக வைத்து, நேர்த்தி செய்து சந்தைக்குக் கொண்டு வரும்போது அதற்குச் சரியானதொரு விலை கிடைத்தால் மட்டுமே விவசாயி கனவு நிஜமாகும். இதுவரை எந்தவொரு விவசாயியுமே அதிகமாக வெளியில் சொன்னதில்லை. இந்த முழுநீள முயற்சியிலும் ஏதாவது ஓர் இடத்தில் தடைப்பட்டாலோ, எங்காவது ஓரிடத்தில் இயற்கை சதி செய்தாலோ மகசூலில் நிச்சயமாய் மனநிறைவே இருக்காது.

அரிசி பிளாஸ்டிக்கா பிளாட்டினமா என்ற ஆராய்ச்சியை அப்புறம் வைத்துக்கொள்ளலாம். நெல் செடியா மரமா என்று வருங்காலத் தலைமுறை கேள்வி கேட்டுவிடும் ஆபத்து ஏற்படுவதைத் தடுக்க வேண்டும். நம் பிள்ளைகள் ஒவ்வொரு முறை உண்ணும் போதும் உழவனுக்கு ஒருமுறை நன்றி சொல்ல கற்றுக் கொடுப்போம். வீணாகும் ஒவ்வொரு பருக்கையின் பின் உள்ள உழைப்பிற்கு மதிப்பும் மரியாதையும் கொடுப்போம்.!
நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *