காலங்களைக் கடந்து நிற்கும் அற்புத கருப்பட்டி..!

உணவே மருந்து…’ என்கிற உயரிய சிந்தனையில் வாழ்ந்த நம் முன்னோர்களின் உன்னதக் கண்டுபிடிப்புகளில் ஒன்று… கருப்பட்டி!

இனிப்புக்காக மட்டும் இதைப் பயன்படுத்தவில்லை. கருப்பட்டியில் கூடுதலான மருத்துவத் தன்மை இருப்பதாலும்தான் அதைப் பயன்படுத்தினார்கள். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை, தமிழக கிராமங்கள் பலவற்றிலும் ‘கருப்பட்டி காபி’தான் கமகமத்தது! இனிப்புப் பண்டங்களிலும் கருப்பட்டியே இடம் பிடித்தது! அது, சர்க்கரை வியாதி என்றால், என்னவென்றே அவ்வளவாக அறியாத காலம்!

ஒருகட்டத்தில் தொழிற்புரட்சியின் அதிவேக முன்னேற்றம் காரணமாக… வெள்ளைச் சர்க்கரை (சீனி) சந்தைக்கு வந்து சேர… மெள்ள கருப்பட்டியை ஒதுக்கினார்கள் மக்கள். விளைவு, தற்போது

20, 30 வயதுகளிலேயே… ‘சர்க்கரை வியாதி வந்துவிடுமோ’ என்கிற பயத்துடனேயே திரிகிறார்கள் பலரும். 30 வயது கடந்த நிலையிலேயே பலரும் அந்த நோய்க்கு ஆட்பட்டு அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்! ஏன்… குழந்தைகள் கூட இப்போதெல்லாம் சர்க்கரை நோய் (டைப் -2) தாக்குதல் காரணமாக பாதிக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது! ஆனாலும்கூட கருப்பட்டியின் மகத்துவத்தை இன்னமும் உணராமல்தான் இருக்கிறார்கள் நம்மவர்கள்!

கருப்பட்டி பயன்படுத்துவது ஒரேயடியாகக் குறைந்து போக… அதன் உற்பத்தியும் பெருமளவு குறைந்து விட்டது. என்றாலும்… பாரம்பரியத்தை மறக்காத பகுதிகளில் கருப்பட்டி உற்பத்தி சுறுசுறுப்பாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவு கருப்பட்டி உற்பத்தி செய்யப்படுகிறது.

நாலரை லட்சம் பனை மரங்கள் !

வட்டன்விளை கிராமத்தைச் சேர்ந்த பனைபொருள் உற்பத்தியாளர் ராமச்சந்திரனை, அவரது பனை மரத் தோப்பில் சந்தித்தபோது… ”இருபது வருஷங்களுக்கு முன்ன சுமார் 790 ஹெக்டேர் பரப்பளவுல, சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் பனைமரங்கள் கற்பகவிருட்சமா பயன் தந்திட்டிருந்துச்சு. உள்ளூர் ஆட்கள் தவிர, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள்ல இருந்தும் பனைஏறும் தொழிலாளிகள் வந்து தங்கியிருந்து, மரம் ஏறுவாங்க. ஒரு நாளைக்கு ஒவ்வொரு மரத்துலயும் மூணு தடவை ஏறுவாங்க. அந்தக் காலத்துல ‘கள்’ இறக்கறதுக்கு அனுமதி இருந்ததால… கள் வியாபாரம் அமோகமா நடந்துச்சு. பனை ஏறுற தொழிலை மட்டுமே நம்பி கிட்டத்தட்ட ரெண்டாயிரம் குடும்பங்கள் இருந்துச்சு. திரும்பிய திசையெல்லாம் கருப்பட்டித் தொழில் கமகமத்த காலம் அது” என்று பனை பெருமை பேசியவர், கருப்பட்டி உற்பத்தி செய்யும் முறை பற்றி தெளிவாக விளக்கினார்.

சுண்ணாம்பு தடவினால் பதநீர்…
தடவாமல் விட்டால் கள்!

”கருப்பு நிறத்தில் கட்டிக் கட்டியா இருக்கறதால ‘கருப்புக்கட்டி’னு பேர் வெச்சுருக்காங்க. அதுவே பேச்சு வழக்கில் ‘கருப்பட்டி’னு ஆயிடுச்சு. ‘பனை அட்டு’, ‘பானாட்டு’னெல்லாம் இதுக்கு பெயர்கள் உண்டு. பங்குனி தொடங்கி, ஆவணி வரைக்கும்தான் பதநீர் தொடர்ச்சியா கிடைக்கும். இந்த ஆறு மாசம் மட்டும்தான் கருப்பட்டியோட உற்பத்திக் காலம். மத்த மாசங்கள்ல, எங்களுக்குப் பிழைப்பு இல்லை. சும்மாத்தான் இருக்கணும்!

பனை மரத்துல இருக்கற பாளையோட நுனியை சீவிவிட்டு, சுண்ணாம்பு தடவின சின்னப் பானையை, அதுல கவிழ்த்து வெச்சு, கட்டி தொங்க விடுவோம். பாளையோட நுனியில இருந்து பிசுபிசுப்பான திரவம், சொட்டுச் சொட்டா பானையில வடியும். இதுதான் பதநீர் (சுண்ணாம்பு தடவாம கட்டப்படுற பானையில் வடியறது… கள்) சீசன் தொடங்குறப்ப, காலையில் பானை கட்டினா… சாயந்திரம் இறக்கிடுவோம். ஒரு நாளைக்கு ரெண்டு தடவை பனை ஏறுவோம். சீசன் முடியுற காலத்துல ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் ஏறுவோம்” என்று கருப்பட்டிக்கான மூலப்பொருள் பற்றி பேசியவர், அடுத்து கருப்பட்டி தயாரிப்புக்குள் புகுந்தார். அது இங்கே பாடமாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது!

கலப்படமில்லாத கருப்பட்டி!

அடுப்பில் பெரிய தாச்சு (வட்ட வடிவ பெரிய இரும்புக் கொப்பரை) வைத்து, வடிகட்டிய பதநீரை பத்து டின் அளவுக்கு (எண்ணெய் டின்) ஊற்றி, 3 மணி நேரம் காய்ச்ச வேண்டும். கருக்குமட்டையால் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். கிளறுவதைக் கொஞ்சம் நிறுத்தினாலும்… பதநீர் கெட்டியாகி, கருப்பட்டிக்கான பதம் கிடைக்காமல் போய்விடும். இந்த மூன்று மணி நேரத்துக்குள் சிரட்டைகளை (கொட்டாங்குச்சி) மண்தரையில் வட்டவடிவில் அடுக்கி வைத்துக் கொள்ளவேண்டும்.

ஒரு மணி நேரத்திலேயே கருப்பட்டி மணம் வீசும். நன்கு கொதித்ததும், ‘கூம்பனி’யை (கொதிக்கும் பதநீர்), பெரிய தாச்சுவிலிருந்து, சின்னதாச்சுவுக்கு மாற்றி, சூட்டோடு சூடாக… சிரட்டைகளில் ஊற்றி, பதினைந்து நிமிடம் காயவைக்க வேண்டும். அதன் பிறகு, விரித்து வைக்கப்பட்டுள்ள ஓலைப்பாயில் சிரட்டைகளைத் தட்டினால்… அரைவட்ட பந்துகள் போல… கருப்பட்டிகள் கட்டிக் கட்டியாக அதில் விழும்.

சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித்து, பதநீரில் போட்டுக் காய்ச்சி தயாரித்தால், அது ‘சுக்குக்கருப்பட்டி’. இதே பதத்தில் காய்ச்சிய பதநீரை, மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டுள்ள பெரிய மண்பானையில் ஊற்றி, நன்கு மூடிவிட்டு, நாற்பது நாட்கள் கழித்து பானையை வெளியே எடுத்து, ஓலைப்பெட்டியில் தட்டினால்… கிடைப்பது ‘பனங்கற்கண்டு’!.

சுலபமாகப் பதப்படுத்தலாம்!

கருப்பட்டியை உற்பத்தி செய்து பனந்தோப்பில் அமைக்கப்பட்டுள்ள ஓலைக் கொட்டகைக்குள் பனங்கட்டைகளை கட்டில் போல விரித்து அடுக்கி, அதன்மீது கருப்பட்டிகளை அடுக்காக அடுக்கி, கொட்டகைக்குள் காற்றுப் புகாத அளவுக்கு ஓலைப்பாயினால் கட்டி வைத்தால்… கருப்பட்டி கெடாமல் இருக்கும்.

மழைக்காலங்களில் பனங்கட்டைகளின் அடியில் மிதமான தீ மூட்டினால்… குளிர்ந்த காற்றில் இருந்து கருப்பட்டியைப் பாதுகாக்கலாம். மழை அதிகமாக பெய்தால் காலை, மாலை இரண்டு வேளையும், மழை குறைவாக பெய்தால் மாலையில் மட்டும் தீ மூட்டினால் போதும்.

கருப்பட்டியை பனையோலைப் பெட்டிகளில் அடைத்து, விற்பனைக்கு அனுப்பலாம். எந்தக் கலப்படமும் இல்லாத நயமான கருப்பட்டி… இரண்டு வருடம் வரைகூட கெடாமல் இருக்கும். பனங்கற்கண்டு எத்தனை வருடம் வேண்டுமானாலும், அப்படியே இருக்கும்.

கிலோ 140 ரூபாய்!

கருப்பட்டி தயாரிப்பு பற்றி ராமச்சந்திரன் சொல்லி நிறுத்த… அதைச் சந்தைப்படுத்தும் முறை பற்றி பேசிய செல்வக்குமார், ”உற்பத்தி செய்யுற கருப்பட்டியை நாங்களே சந்தைப்படுத்துறோம். சீசன் காலங்கள்ல தினமும் 150 பனை மரத்துல இருந்து, 1,500 லிட்டர் பதநீர் இறக்குவோம். அதன் மூலமா 250 கிலோ கருப்பட்டி உற்பத்தி செய்வோம். மாசத்துக்கு 4,000 முதல் 6,000 கிலோ வரைக்கும் கருப்பட்டி உற்பத்தி செய்வோம். கிலோ 140 ரூபாய் வரைக்கும் விலை போறதால… மாதம்

ரூ.5 லட்சத்து 60 ஆயிரம், வருமானம் கிடைக்கும். செலவெல்லாம் போக 3 லட்ச ரூபாய் கையில் நிற்கும். ஆனா, இது வருஷம் முழுக்கவே கிடைக்காது. ஏன்னா… பதநீர்ங்கறது… சீஸன்ல கிடைக்கும். உடன்குடி, சுற்று வட்டாரப் பகுதிகள்ல நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரம் குடும்பங்கள் வரைக்கும் கருப்பட்டித் தொழிலை நம்பித்தான் இருக்கு. இங்க உற்பத்தி செய்யப்படுற கருப்பட்டி… பல மாவட்டங்களுக்கும், பல மாநிலங்களுக்கும் போயிட்டிருக்கு. வெளியூர் வியாபாரிங்க நேரடியா உடன்குடிக்கு வந்தே கொள்முதல் செய்றாங்க” என்றார் பெருமிதமாக!

கருப்பட்டியைக் காப்பாற்றுவோம்!

தூத்துக்குடி மாவட்டத்திலேயே மிகப்பெரிய வாரச்சந்தை உடன்குடியில்தான் நடக்கிறது. குலசேகரப்பட்டினத்தில் மிகப்பெரிய சர்க்கரை ஆலையும் கருப்பட்டி மற்றும் சீனி ஏற்றுமதிக்காக தனி ரயில் பாதையும் இருந்தன. இன்று அந்த ஆலை பாழடைந்தும், ரயில் பாதை பயனற்றும் காட்சியளிக்கிறது.

பனைதொழிலாளர்கள் முன்னேற்றத்துக்கும், பாதுகாப்புக்கும் எந்த அரசாங்கமும் சரியான நடவடிக்கை எடுக்காதது, பருவநிலை மாற்றம் போன்ற காரணங்களால் கருப்பட்டித் தொழில் அடியோடு பாதிக்கப்பட்டு விட்டது. தற்பொழுது உடன்குடி பகுதியில் மொத்தப் பனைமரங்களின் எண்ணிக்கை… இரண்டு லட்சம்கூட இருக்காது.

இரண்டாயிரம் குடும்பங்கள் பிழைத்த இத்தொழிலை, தற்போது வெறும் ஐநூறு குடும்பங்கள் மட்டுமே செய்து வருகின்றன. இந்த நிலை நீடித்தால்… இது ஐந்து குடும்பங்களாக சீக்கிரமே சுருங்கிவிடும். கருப்பட்டியை கண்ணால் பார்ப்பதே கடினமாகிவிடும்!

சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கருப்பட்டி!

பனங்கருப்பட்டியின் மருத்துவ குணங்களைப் பற்றி பேசிய காரைக்குடியைச் சேர்ந்த சித்த மருத்துவர். சொக்கலிங்கம், ”இன்றைக்கு அனைத்து வகையான மூலிகைகளும் மிட்டாய் வடிவில் கிடைக்கின்றன. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது… கருப்பட்டி. இதன் மருத்துவ பயன்கள் அளவில்லாதது. பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்… இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும். சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை, கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால், வாயுத்தொல்லை நீங்கும். குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.

ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால்… உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும்கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.

சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்… சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது” என்றார்.

நன்றி: பசுமை விகடன் 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “காலங்களைக் கடந்து நிற்கும் அற்புத கருப்பட்டி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *