‘பனைமரக்காடே பறவைகள் கூடே’ என ஒரு திரைப்படப்பாடலில், இலங்கை நாட்டில் உள்ள யாழ்ப்பாணம் பகுதியைப் பற்றி எழுதியிருப்பார், கவிஞர் வைரமுத்து. அந்தளவுக்குப் பெருமை வாய்ந்தவை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த பனை மரங்கள்.
இவை நம் நாட்டில் உள்ளபனைமரங்களைக் காட்டிலும் சற்றுத் தடித்துக் காணப்படும். தமிழ்நாட்டுச் சீதோஷ்ண நிலை யாழ்ப்பாணப் பனைகள் வளர்வதற்கு ஏற்ற நிலையில் இருப்பதால், பலரும் இம்மரங்களை இங்கு பயிரிட்டுள்ளனர். குறிப்பாக விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் இம்மரங்கள் அதிகளவில் உள்ளன.
யாழ்ப்பாணப் பனைமரங்கள் குறித்து, செஞ்சி அருகே உள்ள பூரிகுடிசை கிராமத்தைச் சேர்ந்த பனை விவசாயி விஜயராமனிடம் பேசினோம். “நான் சின்ன வயசா இருக்குறப்போ எங்க பகுதியில இருந்து மரம் ஏறுறதுக்காக நிறையபேர் திருப்புவனம் பக்கம் போவாங்க. எங்கப்பாவும் அடிக்கடி போவார். ஒருமுறை இங்கேயிருந்து நிறையபேர் அப்படிப் போனப்போ, அந்தப்பகுதியில கிடைச்ச யாழ்ப்பாணம் பனை விதைகளை எடுத்துட்டு வந்து, இந்தப்பகுதியில பரவலா விதைச்சு விட்டாங்க. கிட்டத்தட்ட ஐம்பது வருஷத்துக்கு முன்னாடி நடந்த விஷயம் இது.
அப்போ விதைச்சு வளர்ந்த மரங்கள்தான் இப்ப நின்னு பலன் கொடுத்துட்டுருக்கு. இந்தப்பக்கம் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் யாழ்ப்பாணப் பனைமரங்கள் இருக்கும். என் வயல் ஓரத்துலேயே 300 பனைமரங்கள் இருக்கு. அதுல கிட்டத்தட்ட 200 மரங்கள் யாழ்ப்பாண ரகம்தான். இந்த மரங்கள்ல அதிகமாகப் பதநீர் கிடைக்கும். மாசி மாசத்துல இருந்து ஆனி மாசம் வரைக்கும் சீசன் இருக்கும். சீசன் சமயங்கள்ல பனை விதைகள், பனங்கிழங்கு, பதநீர்னு விற்பனை செய்வோம்.
பனம் பழங்களைச் சேமிச்சு வெச்சு விதை எடுத்து மண்ணுக்குள்ள புதைச்சு வெச்சா மூணு மாசத்துல பனங்கிழங்குகள் கிடைக்கும். பெரும்பாலும் கிழங்கை நாங்களே ஒரு கிழங்கு மூணு ரூபாய்னு விற்பனை செஞ்சுடுவோம். வியாபாரிகளும் தேடி வந்து வாங்கிட்டுப் போறாங்க. ஆனா, வியாபாரிங்க ஒரு கிழங்குக்கு ஒரு ரூபாய்தான் கொடுப்பாங்க. சீசன் நேரங்கள்ல பதநீர் விற்பனை நல்லாயிருக்கும். மரங்கள்ல சுண்ணாம்பு தடவுன பானைகளைக் கட்டி பதநீர் இறக்குவோம்.
ஒரு பாளையில ஒரு வேளைக்கு ஒரு லிட்டர்ல இருந்து ஐந்து லிட்டர் வரை பதநீர் இறங்கும். தினமும் ரெண்டு வேளையும் மரம் ஏறுவோம். இந்தப் பகுதிகள்ல நம்ம நாட்டு ரக மரங்களையும் சேர்த்து மொத்தம் ரெண்டு லட்சம் பனைமரங்கள் இருக்கு. நம்ம பனை மரம், அடிப்பகுதியில இருந்து மேல்பகுதிக்குப் போகப்போக மெல்லிசாக இருக்கும். ஆனா, யாழ்ப்பாணப் பனை மரங்கள் அடிப்பகுதியும், மேல் பகுதியும் தடிச்சிருக்கும். நடுவுல மெலிஞ்சுருக்கும். யாழ்ப்பாணப் பனைமரங்களோட ஓலைகள் பூ விரிஞ்ச மாதிரி பார்க்க அழகா இருக்கும்” என்ற விஜயராமன் பனைமரங்களைக் காட்டியபடியே தொடர்ந்தார்.
“இப்போ நிறைய பேர் பனை விதைகளை வாங்கிட்டு போறாங்க. யாழ்ப்பாணப் பனை விதைகளுக்குக் கொஞ்சம் கிராக்கி அதிகம். யாழ்ப்பாணப் பனை விதைகளை மற்ற விதைகளைவிட ஒரு ரூபாய் அதிகமா வெச்சுத்தான் விற்பனை செய்றேன். போன வருஷம் 200 யாழ்ப்பாணப் பனை மரங்கள்ல இருந்து ரெண்டு லட்சம் ரூபாய் லாபம் கிடைச்சது. எந்தப் பயிர் கைவிட்டாலும், பனை எங்களைக் கைவிடாது” என்றார், விஜயராமன்.
யாழ்ப்பாணப் பனை விதைகளை அதிகளவில் நடவு செய்திருக்கும் ‘எழில்சோலை’ மாசிலாமணி, “நான், பனை விதைகளை வாங்கலாம்னு போனப்போ ‘யாழ்ப்பாணப் பனை விதைகள்’ இங்க கிடைக்கும்னு விவசாயிகள் சொன்னாங்க. நான் ஆச்சர்யத்தோட பார்க்கவும் அந்த மரங்களைக் காட்டி விளக்கிச் சொன்னாங்க. இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தில் சிறப்பு வாய்ந்த உணவு வகைகளில் பனை சார் உணவுப்பொருள்களுக்கு முக்கியத்துவம் உண்டு.
அவங்களோட பாரம்பர்ய உணவு பனை உணவுதான். யாழ்ப் பாணத்துக்குச் சுற்றுலா வர்றவங்களும் பனை உணவுகளை விரும்பிச் சாப்பிடுவாங்க. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 1981-ம் வருஷம் 11 மில்லியன் (ஒரு கோடியே பத்து லட்சம்) பனை மரங்கள் இருந்ததாகச் சொல்றாங்க. இலங்கையில் பனை மேம்பாட்டுக்காகப் ‘பனை அபிவிருத்திசபை’ ஆரம்பிச்சுப் பனைத்தொழிலை மேம்படுத்திட்டு இருக்காங்க. அதேமாதிரி தமிழ்நாட்டிலும் பனை பத்தின விழிப்பு உணர்வை அதிகரிக்கணும்” என்றார் அக்கறையுடன்.
தொடர்புக்கு மாசிலாமணி, செல்போன்: 9443638545
நன்றி: பசுமை விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்