தேனி லட்சுமிபுரத்தில் இயற்கை உரம் மூலம் விளையும் உயரம் குறைவான ‘ரெட் ராயல்’ ரக பப்பாளி ‘ருசி’ மிகுதியால் குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு டன் கணக்கில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் மாதம் ரூ. 50,000 வரை விவசாயி பாலசுப்பிரமணி லாபம் ஈட்டி வருகிறார்.
தேனி லட்சுமிபுரத்தை சேர்ந்த விவசாயி பாலசுப்பிரமணி. இவருக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் குறைந்த காலத்தில் பயன்தரக்கூடிய உயரம் குறைவான ‘ரெட்ராயல்’ ரக பப்பாளி மரங்களை சாகுபடி செய்துள்ளார். இம்மரங்கள் மூலம் வாரத்திற்கு ஒரு முறை 2 டன் பப்பாளி பழங்களை மகசூலாக பெற்று வருகிறார். ஒவ்வொரு பழமும் குறைந்தது 2 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ளது.
பழுக்கும் நிலைக்கு முன்னதாகவே மரத்தில் இருந்து காய்கள் பறிக்கப்பட்டு, அவை கேரள மொத்த வியாபாரிகள் மூலம் நவீன முறையில் ‘பேக்கிங்’ செய்யப்பட்டு அங்கு கொண்டு செல்லப்படுகிறது.

பின் அங்கிருந்து விமானம் மூலம் குவைத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.பாலசுப்பிரமணி கூறுகையில், “ இதுபோன்ற பப்பாளி மரங்களுக்கு காற்றோட்டம், இடைவெளி முக்கியம். ‘ஹைபிரிட்’ வகையை சேர்ந்த ‘ரெட் ராயல்’ பப்பாளி ஒன்றரை அடி உயரத்தில் பயன்தரக்கூடியது. ஒரு மரம் குறைந்தது 10 முதல் 15 காய்கள் தரும். பழுக்கும் நிலையில் உள்ள காய்கள் மட்டுமே பறிக்கப்படுகின்றன.
வாரத்திற்கு ஒரு முறை 2 டன் வரை மகசூல் கிடைக்கிறது. கைக்கு எட்டிய துாரம் பறிப்பதால், காய்கள் சேதாரம் இல்லை. கிலோ ரூ. 8 க்கு விற்கப்படுகிறது.
இம்மரங்கள் மூன்று ஆண்டுகள் வரை பயன்படக்கூடியவை. ரசாயன உரம் பயன்படுத்துவதில்லை. பால், மீன்,மாட்டுச்சாணம், கோமியம் உட்பட பஞ்சகாவியம் அடங்கிய இயற்கை உரத்தில் விளையும் இந்த பப்பாளிக்கு ‘சுவை’ அதிகம். இதனால் கேரள மொத்த வியாபாரிகள் டன் கணக்கில் வாங்கிச் செல்கின்றனர்.
பின் அங்கிருந்து குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு விமானம் மூலம் பப்பாளிப் பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஜூன், ஜூலை மாதங்களில் இவற்றுக்கு கிராக்கி அதிகம்.
அந்தநேரத்தில் கிலோ ரூ. 10க்கு விற்போம். ரத்தத்தில் உயிரணுக்கள் அதிகரிக்கச் செய்து நோய் எதிர்ப்பு சக்தி கொடுப்பதால் இதை பலரும் விரும்பி உண்கின்றனர். பப்பாளி சாகுபடியால் மாதந்தோறும் ரூ. 50,000 லாபம் ஈட்டி வருகிறேன்,” என்றார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Very nice. I want Balasubramanian Mobile number.