பலன் தரும் பப்பாளி சாகுபடி!

பழ மரங்களில் காத்திருந்துதான் கனியைப் பறிக்க முடியும். இதற்கு விதிவிலக்காக இருப்பது பப்பாளி. ஓராண்டுக்குள்ளேயே பலன் தரும் பழமரமாக பப்பாளி உள்ளது.

சத்துகள்:

  • பப்பாளியில் புரதம், நார்ப்பொருள், மாவுப் பொருள், கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் உள்ளிட்ட தாது உப்புகளும், தையாமின், ரிபோபுளோவின், நியாஸின், வைட்டமின் ஏ, வைட்டமின் சி ஆகியவையும் உள்ளன. வைட்டமின் ஏ அதிகளவில் உள்ளது.
  • காய்களில் இருந்து எடுக்கப்படும் பப்பைனில் புதிய புரத வகைகளை உருவாக்கவல்ல புரோட்டினஸ் என்ற என்சைம் உள்ளது.

ரகங்கள்:

  • கோ 1 முதல் 7 வரை, ரெட் லேடி ஆகியவை சிறந்த ரகங்கள்.
  • கோ 3, 7 ரகங்கள் இருபால் மலர்களையும், பெண் மலர்களையும் கொண்டதாக இருக்கும். பழமாக வெட்டிச் சாப்பிட ஏற்றது.
  • கோ 2, 5, 6 ஆகிய ரகங்கள் பழங்களாக சாப்பிடவும், பப்பைன் உற்பத்திக்கும் ஏற்றதாகும்.

காலநிலை:

  • 35 முதல் 35 சென்டிகிரேட் வரையுள்ள வெப்ப நிலையில் நன்கு வளரும். வடிகால் வசதியுள்ள மண் ஏற்றது.
  • நடவுக்கு ஒரு ஹெக்டேருக்கு 500 கிராம் விதைகள் தேவை.

நாற்றங்கால்:

  • பாலிதீன் பையில் பைக்கு நான்கு விதைகளை ஒரு செ.மீ. ஆழத்துக்குள் ஊன்றவும்.
  • பகுதி நிழலில் வளர்க்க வேண்டும். பூ வாளியால் நீரூற்றலாம்.
  • நாற்றுக்கள் 60 நாள்களில் தயாராகும்.

நடவு முறை:

  • ஒன்றரை கனஅடி அளவுள்ள குழிகளில் வரிசைக்கு வரிசை 6 அடி, செடிக்குச் செடி 6 அடி என்ற இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.

நீர்ப்பாசனம்:

  • நடவு செய்தவுடன் நீர்ப்பாய்ச்ச வேண்டும்.
  • பின்னர், வாரத்துக்கு ஒரு முறையும் நீர்ப்பாய்ச்ச வேண்டும். நுண்ணீர்ப் பாசனம் அமைத்து நீர்ப்பாய்ச்சுவது சிறந்தது.

உரமிடுதல்:

  • அடியுரம் இடும்போது குழிக்கு 10 கிலோ தொழுஉரம் இட வேண்டும்.
  • மரம் ஒன்றுக்கு 50 கிராம் தழைச்சத்து தரவல்ல 110 கிராம் யூரியா, 50 கிராம் மணிச்சத்து தரவல்ல 315 கிராம் சூப்பர் பாஸ்பேட், 50 கிராம் சாம்பல்சத்து தரவல்ல 80 கிராம் பொட்டாஷ் உரங்களை இட வேண்டும்.
  • நடவு செய்த மூன்றாவது மாதம் முதல் 2 மாதங்களுக்கு ஒருமுறை இட வேண்டும்.
  • மரம் ஒன்றுக்கு 20 கிராம் அசோஸ்பைரில்லம், 20 கிராம் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை நடவின்போதும், நடவு செய்த ஆறாவது மாதமும் இட வேண்டும்.

பின்செய் நேர்த்தி:

  • பூக்கள் தோன்றியதும் நன்கு பழம் பிடிக்க 20 பெண் மரங்களுக்கு ஒரு ஆண் மரம் என்ற விகிதத்தில் வைத்துக்கொண்டு எஞ்சிய ஆண் மரங்களை அகற்றிவிட வேண்டும்.

நுண்ணூட்டங்கள்:

  • பயிர் வளர்ச்சிக்கும், பழம் பிடிக்கவும் அரை சதவீத சிங்சல்பேட் மற்றும் 0.1 சதவீத ஹைட்ரஜன் போராக்சைடு இரண்டையும் சேர்த்து, நட்ட 4, 8-ஆவது மாதங்களில் தெளிக்க வேண்டும்.

வேர் அழுகல் நோய்:

  • நீர் தேங்கியுள்ள இடங்களில் வேர் அழுகல் மற்றும் வாடல் நோய் ஏற்படலாம். நல்ல வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டியது அவசியம்.
  • ஒரு சதவீத போர்டா கலவையை வேர்ப்பாகம் நனையும்படி ஊற்றி இந்த நோயைக் கட்டுப்படுத்தலாம்.

பப்பைன் பிரித்தெடுத்தல்:

  • பப்பாளிக்காய் பாலில் இருந்து பெறப்படும் பொருள் பப்பைன்.
  • இது ஏராளமான தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகும்.
  • இறைச்சி, துணி வகை, தோல்களைப் பதனப்படுத்தவும், மென்மைப்படுத்தவும் உதவுகிறது. பப்பாளிக்காயில் இருந்து பப்பைனை பிரித்து எடுப்பது மிகவும் சுலபம்.
  • முற்றிலும் முதிராத காய்களில் இருந்து பிரித்தெடுக்கலாம்.
  • பிளேடு அல்லது சிறிய கத்தியால் 0.3 செ.மீ. ஆழத்துக்கு கோடு கிழித்து பால் சேகரிக்க வேண்டும். காலை 10 மணிக்குள் சேகரிக்க வேண்டும்.
  • மூன்று நாள்கள் இடைவெளியில் இதேபோல் 4 முறை சேகரித்து அந்தப் பாலை அலுமினியம் டிரேயில் வைத்து நிழலில் உலர்த்த வேண்டும்.
  • பின்னர், சல்லடையில் சலித்து வேறு பொருள்களை நீக்கி பப்பைனை எடுக்கலாம்.

அறுவடை மற்றும் மகசூல்:

  • 24 முதல் 30 மாதங்கள் வரை பலன் தரும்.
  • கோ 2, 5 ரகத்தில் ஹெக்டேருக்கு 200 முதல் 250 மெட்ரிக் டன் மகசூல் கிடைக்கும்.
  • கோ 7-ல் 200 முதல் 225 மெ.டன், கோ 3-ல் 100 முதல் 120 மெ.டன், கோ 6-ல் 120 முதல் 160 மெட்ரிக் டன் மகசூல் கிடைக்கும்.

பப்பைன் மகசூல்:

  • கோ 2 ரகத்தில் ஹெக்டோருக்கு 600 கிலோவும், கோ 5-ல் 800 கிலோவும் மகசூல் கிடைக்கும்.
  • மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகங்களை அணுகி பயன்பெறலாம் என தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “பலன் தரும் பப்பாளி சாகுபடி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *