தரிசு நிலத்தில் பயறு வகை சாகுபடி

பாசனப் பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடைக்கு முன்பு, மெழுகுபதத்தில் பயறு வகைகள் விதைக்கப்படுகின்றன. இதற்கு நெல் தரிசுப் பயிர்கள் அல்லது தொடர்ப்பயிர்கள் என்னும் பெயர். நெல் தரிசு ஈரம் மற்றும் சத்துகளைப் பயன்படுத்திப் பயிரிடுவதால், அதிக செலவின்றி கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

இதுகுறித்து, பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்திலுள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய உழவியல் தொழில்நுட்ப வல்லுநர் மு. புனிதவதி கூறியது:


மண் வகை:

களிமண் கலந்த குறுமண் நிலம் மிகவும் உகந்தது. களர் மற்றும் உவர்நிலத்தில் பச்சைப் பயிறு நன்கு விளையும். ஏடிடீ 3, 5, டி.எம்.வி 1 கோ-4 ஆகிய உளுந்து வகைகளும், ஏடிடீ 3, கே.எம் 2 ஆகிய பாசிப்பயறு வகைகளும் நல்ல மகசூலைத் தரும். சான்று பெற்ற விதைகளைப் பயன்படுத்த  வேண்டும்.

தைப்பட்டம் மிகவும் ஏற்றதால், ஜனவரி 15-இல் தொடங்கி பிப்ரவரி 15- ஆம் தேதிக்குள் விதைத்துவிட வேண்டும்.  ஏனெனில், அந்த நாள்களில் வயலில் காணப்படும் ஈரப்பதமும், பனிஈரமும் பயிர்களின் வளர்ச்சிக்கு உதவும்.

விதையளவு:

ஏக்கருக்கு 10 கிலோ விதைபோதும். இயந்திரம் மூலம் அறுவடை நடைபெறும் இடங்களில் 12 கிலோ விதைகளை விதைக்க வேண்டும். சங்கிலி வடிவ இயந்திரம் மூலம் அறுவடை நடைபெறும் வயல்களில் பயிர்கள் நன்கு வளரும்.
ஆறிய அரிசிக் கஞ்சியில் விதைகளுடன், ஒரு பொட்டலம் ரைசோபியம், ஒரு பொட்டலம் பாஸ்போ பாக்டீரியா, 100 கிராம் சூடோமோனாஸ் ஆகியவற்றை கலந்து நேர்த்தி செய்து 15 நிமிடம் நிழலில் உலர்த்தி, 24 மணி நேரத்துக்குள் விதைத்துவிட வேண்டும்.

விதைப்பு:

சம்பா, தாளடி அறுவடை ஆள்கள் மூலம் நடைபெறும் இடங்களில், அறுவடைக்கு 7 முதல் 10 நாள்களுக்கு முன்பும், இயந்திரம் மூலம் அறுவடை நடைபெறும் இடங்களில் 4 முதல் 6 நாள்களுக்கு முன்பும், மெழுகுப் பதத்தில் விதைக்க வேண்டும். இந்தப் பதம் இல்லையெனில் பாசனம் செய்து பதம் வந்ததும் விதைக்க வேண்டும்.

ஒரு சதுர மீட்டரில் 33 செடிகள் இருக்க வேண்டும். விதைகள் முளைக்காத இடங்களில் முளைகட்டிய விதைகளை மீண்டும் விதைத்து, பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்கவேண்டும்.  விதைத்த 20 -ஆம் நாளில், ஏக்கருக்கு 400 மி.லி குயினால் பாஸ் ஈதைல் களைக்கொல்லியை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

அடியுரம் இடமுடியாத இடங்களில் 2 சதவிகித டி.ஏ.பி. கரைசல், பிளானோபிக்ஸ் வளர்ச்சி ஊக்கி அல்லது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பயறு ஒண்டரைத் தெளிக்க வேண்டும்.

பூக்கும் காலமான 25-ஆவது நாள், காய்கள் பிடிக்கும் காலமான 45-ஆவது நாள்களில் 2 சத டி.ஏ.பி. கரைசல், ஒரு சத பொட்டாசியம் குளோரைடு, 40 பி.பி.எம். பிளானோபிக்ஸ் கலந்த கரைசலை காலையில் அல்லது மாலையில் இலைகளில் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்.

2 சத கரைசல் தயாரிப்பு: ஒரு ஏக்கருக்கு தயாரிக்க 4 கிலோ டி.ஏ.பி தேவை. இதை 10 லிட்டர் நீரில் முதல் நாள் இரவில் ஊறவைத்து, மறுநாள் காலையில் தெளிந்த கரைசலை வடிகட்டி எடுத்துக் கொள்ளவேண்டும்.

இத்துடன் 2 கிலோ பொட்டாசியம் குளோரைடு மற்றும் 160 மில்லி பிளானோபிக்ஸ் வளர்ச்சி ஊக்கி ஆகியவற்றை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

ஒரு ஏக்கருக்கு 2 கிலோ தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகப் பயறு ஒண்டர் தேவை. இதை ஒட்டும் திரவத்துடன் 200 லிட்டர் நீரில் கலந்து பூக்கும் தருணத்தில் தெளித்தால், செடிகள் வறட்சியைத் தாங்கி அதிகளவில் காய்த்து 20-25 சதவிகிதம் வரையில் கூடுதல் மகசூலைக் கொடுக்கும்.

ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு:

சாற்றை உறிஞ்சும் பூச்சிகளான அசுவினி, வெள்ளை ஈ, தத்துப் பூச்சி, இலைச் சிலந்தி ஆகியவற்றின் தாக்குதலைக் கட்டுப்படுத்த 3 சதவிகித வேம்பு எண்ணெய்க் கரைசல் அல்லது 5 சதவிகித வேப்பம் பருப்புக் கரைசலைத் தெளிக்கலாம்.

அல்லது ஏக்கருக்கு டைமெத்தயேட் 30 ஈசி 200 மில்லியை 200 லிட்டர் நீரில் கலந்து மாலையில் தெளிக்கலாம்.

காய்களைத் துளைத்துப் பருப்பைத் தின்னும் பச்சைக் காய்ப்புழு, பூ மற்றும் மொக்குகளைத் துளைத்துப் தின்னும் காய்ப்புழு, இலைகளைத் தாக்கிப் பெருஞ்சேதத்தை உண்டாக்கும் புகையிலை வெட்டுப்புழு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்.

இதற்கு, ஏக்கருக்கு 5 இனக் கவர்ச்சிப் பொறிகளை வைத்து ஆண் அந்துப் பூச்சிகளையும், ஒரு விளக்குபொறியை வைத்து, தாய் அந்துப் பூச்சிகளையும் கவர்ந்து அழிக்கவேண்டும்.

மஞ்சள் தேமல் நோயைக் கட்டுப்படுத்த நோய் தாக்கிய செடிகளைப் பிடுங்கி அழிக்கவேண்டும்.

80 சதவிகிதத்துக்கும் அதிகமான காய்கள் முற்றியதும் தரைமட்டத்துக்குச் சற்று, மேலே  செடிகளை அறுவடை செய்யவேண்டும். இதனால் மண்ணுக்குள் இருக்கும் வேர் மண் வளத்தை பெருக்க உதவும்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *