புரதம் தேவையை அதிகரிக்க பயறு வகை பயிர் சாகுபடி

பயறு வகைப்பயிர்களை தனிப்பயிராகவோ அல்லது ஊடுபயிராகவோ, ஆடிப்பட்டத்தில் பயிரிட்டு, நமக்குத் தேவையான புரதத் தேவையை அளிக்கும் இப்பயிர்களின் மூலம் நல்ல வருவாய் பெறலாம்’ என, மோகனூர் வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குனர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:

பயறுவகைப் பயிர்கள், நம் உடலுக்கு தேவையான புரதத்தேவையை அளிப்பதில் முன்னிலை வகிக்கிறது. பயறுவகை பயிர்கள் எல்லாவிதமான மண் மற்றும் தட்பவெப்பநிலைகளையும் தாங்கி வளரும் தன்மை கொண்டவை.

பெரும்பாலும் பயிறுவகைப் பயிர்கள் ஊடுபயிராகவே பயிரிடப்படுகிறது.நெல் வயலில் வரப்பு ஓரங்களிலும், கரும்பு, சோளம், மக்காச்சோளம் மற்றும் தோட்டக்கலைப் பயிரான மரவள்ளி சாகுபடியில் ஊடுபயிராகவும் பயறுவகைப் பயிர்கள் பயிரிடப்படுகிறது.

அவ்வாறு ஊடுபயிராக பயிரிடுவதால், விவசாயிகள் குறிப்பிட்ட அந்த நிலத்தில், பயறு வகைப்பயிர்கள் மூலம் கூடுதல் வருவாய் பெறுவதோடு, அந்த வயலில் களைக் கட்டுப்பாடும் சாதகமாகிறது.

உளுந்து, பாசிப்பயிறு மற்றும் துவரை போன்ற பயிறு வகைப் பயிர்களின் தேவை மற்றும் நுகர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், விவசாயிகள் இப்பயிர்களை தனிப்பயிராகவோ அல்லது ஊடுபயிராகவோ பயிரிட்டு, பண்ணை சாகுபடியில் குறைந்த பரப்பில் அதிக வருவாய் பெறுகின்றனர்.இப்பயிர்களை ஊடுபயிராக பயிரிடும்போது, முக்கியப்பயிர் மற்றும் ஊடுபயிர்களின் சத்துத் தேவைகளை அறிந்து இரண்டுக்கும் தனித்தனியாக உரமிட வேண்டும். தனிப்பயிருக்கு மட்டும் உரமிடுவதால், ஊடுபயிருக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதில், பயிர்களுக்கு இடையே போட்டி ஏற்படுகிறது.

எனவே, இரண்டு பயிர்களுக்கும் அனைத்து தேவைகளுக்கும் போட்டி ஏற்படாதவாறு மண் பரிசோதனை அடிப்படையில் உரமிட்டு சாகுபடி செய்தால் இரண்டிலுமே நிறைவான மகசூல் பெறமுடியும். பயறு வகைப்பயிர்களை தனிப்பயிராகவோ, ஊடுபயிராகவோ ஆடிப்பட்டத்தில் பயிரிட்டு, நமக்குத் தேவையான புரதத் தேவையை அளிக்கும் இப்பயிர்களின் மூலம் நல்ல வருவாய் பெற வேண்டும்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *