பயறு வகைகள் பொதுவாகக் குறுகிய கால வயதுடையவை. அதிகப் பாசன நீர் தேவைப்படாதவை. பயறு வகையில் அதிக அளவில் புரதச்சத்து இருப்பதால் உடல் வளர்ச்சிக்கும், அறிவு வளர்ச்சிக்கும் அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்றன. பயறு வகைச் சாகுபடியில் சராசரியாக ஒரு ஏக்கருக்கு 544 கிலோ மகசூல் பெற முடியும். ஒரு ஏக்கரில் 800 கிலோ மகசூல் எடுக்கப் பல்வேறு திட்டங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கோபி வட்டாரத்தில் ஒரு ஏக்கரில் 730 கிலோ மகசூல் எடுத்து ஒரு விவசாயி சாதனை படைத்துள்ளார். குறுகிய காலத்தில் நல்ல மகசூல் கொடுக்கும் பயறு வகைச் சாகுபடி குறித்து கோபி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி சில ஆலோசனைகளைத் தெரிவித்தார். அவர் கூறியவற்றில் முக்கிய அம்சங்கள்:
பயறு வகையின் சிறப்பம்சங்கள்
துவரை, கொள்ளு, உளுந்து, பாசிப்பயறு, தட்டை, சோயாமொச்சை போன்றவை பயறு வகைப் பயிர்களாகும். பயறு வகைப் பயிர்களில் வேர்முடிச்சுகள் மூலமாக ஆகாயத்தில் உள்ள தழைச்சத்து கிரகிக்கப்பட்டு நிலத்தில் சேர்க்கப்படுவதால் நிலவளம் மேம்படுகிறது.
பயறு வகைப் பயிர்களின் இலைகள் நிலத்தில் உதிர்வதால் மண்ணில் அங்ககப் பொருள் அதிகரிக்கிறது. குறைந்த நாளில், குறைந்த செலவில் அதிக வருவாய் கிடைக்கிறது. இப்பயிர் கால்நடைகளுக்குப் புரதம் நிறைந்த தீவனமாகவும் வயலுக்குப் பசுந்தாள் உரமாகவும் பயன்படுகிறது.
மகசூல் குறைவுக்கான காரணங்கள்
வளமற்ற நிலத்தில் சாகுபடி செய்தல், பெரும்பாலும் மானாவாரியில் சாகுபடி செய்வது, குறைந்த உற்பத்தித் திறன் கொண்ட ரகங்களைப் பயிர் செய்தல், தரம் குறைந்த விதைகளைக் கொண்டு சாகுபடி செய்தல், சீரிய சாகுபடித் தொழில்நுட்பங்களை முழுமையாகக் கடைப்பிடிக்காமை ஆகிய காரணங்களால் பயறு வகைப் பயிர் சாகுபடியில் மகசூல் குறைகிறது.
உற்பத்தி பெருக்கத்துக்கான வழிமுறைகள்
1. பருவத்துக்கேற்ற உயர் விளைச்சல் தரும் ரகங்களைத் தேர்வு செய்து சாகுபடி செய்ய வேண்டும்.
2. உயிர் உர விதை நேர்த்தி – ரைசோபிய நுண்ணுயிர்க் கலவையைக் கலந்து விதைப்பது பயிருக்கும் மண்ணுக்கும் நல்லது தருவது மட்டுமின்றி விளைச்சலையும் 30 சதவீதம்வரை அதிகரிக்கச் செய்யும். குறைந்த செலவில் அதிக மகசூல் பெறுவதற்கு இது ஒரு நல்ல வழியாகும்.
3. பரிந்துரைக்கப்பட்ட பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும். இவ்வாறு பயிர் செய்யும்போது செடிகளுக்கிடையே இடம், சூரிய ஒளி, நீர், உரம் ஆகியவற்றிக்காக நெருக்கடி இல்லாமல் நன்றாக வளர்ந்து, நிறைந்த மகசூல் உண்டாகும்.
4. உரிய காலத்தில் களை நிர்வாகம் மேற்கொள்ளுதல் மிகவும் அவசியம்.
5. முறையான நீர் நிர்வாகம் மேற்கொள்ளுதல் அவசியம். விதைத்தவுடனும் மூன்றாம் நாளும் நீர் பாய்ச்ச வேண்டும், தேவைக்கேற்ப 10-15 நாட்களுக்கு ஒரு முறையும், பூக்கும் பருவத்திலும் காய்ப்பிடிக்கும் பருவத்திலும் பாசனம் அவசியம் தேவை. நீர்த் தேங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
6. பூக்கள் உதிர்வதைத் தடுக்க ‘பிளோனோபிக்ஸ்’ வளர்ச்சி ஊக்கியைப் பூக்கள் தெரிய ஆரம்பித்தவுடன் ஒரு முறையும் 15 நாட்கள் கழித்து மறுமுறையும் தெளிக்க வேண்டும்.
விதை நேர்த்தி
ஒரு கிலோ பயறு வகை விதைக்கு 4 கிராம் ‘ட்ரைகோடெர்மா விரிடி’ உயிர் பூஞ்சாணம் கலந்து 24 மணி நேரம் வைத்திருக்க வேண்டும். இதனால் விதை மூலம் பரவும் நோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
உயிர் உர நேர்த்தி
ஒரு ஏக்கருக்குத் தேவையான 8 கிலோ விதையுடன், 1 பொட்டலம் (200 கிராம்) ரைசோபியம், 1 பொட்டலம் பாஸ்போபேக்டீரியா ஆகியவற்றை 500 மி.லி. ஆறிய கஞ்சியில் கலந்து நிழலில் உலர வைத்து விதைக்க வேண்டும்.
நுண்ணூட்டமிடுதல்
ஒரு ஏக்கருக்கு 60 கிலோ ஜிப்சத்தை அடியுரமாக இட வேண்டும். இதனால் மகசூல் அதிகரிக்கிறது. 2-கிலோ பயறுவகை நுண்ணூட்டத்தை விதை விதைத்த பின் மணலுடன் கலந்து சீராகத் தூவ வேண்டும்.
ஒரு ஏக்கரில் ‘புளுகுளோரலின்” 200 மி.லி. களைக்கொல்லியை 250 லிட்டர் தண்ணீரில் கலந்து விதைத்த 3-ம் நாள் தெளிக்க வேண்டும். இதன் மூலம் களையைக் கட்டுப்படுத்த முடியும்.
இறவைப் பயிருக்கு 4 அல்லது 5 முறை பாசனம் தர வேண்டும். வளர்ச்சிப் பருவம், பூக்கும் நிலை, காய்பிடிக்கும் நிலையில் கண்டிப்பாக நீர் பாய்ச்ச வேண்டும். இந்தக் காலத்தில் வறட்சி ஏற்பட்டால் மகசூல் பெரிதும் பாதிக்கும்.
பயறு வகைச் சாகுபடியில் டி.ஏ.பி. தெளித்தல் ஒரு முக்கியப் பணி. இதனால் பூ உதிர்வது பெரிதும் கட்டுப்படுத்தப்படுகிறது. விதைத்த 30 மற்றும் 45-வது நாளில் ஒரு ஏக்கருக்கு 2 கிலோ டி.ஏ.பி. உரத்தை 100 லிட்டர் நீரில் கலந்து ஒரு நாள் ஊற வைத்துக் காலையில் தெளிந்த நீரை மட்டும் வடிகட்டி கைத்தெளிப்பான் மூலம் இலைகளில் நன்கு படுமாறு, மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.
நன்றி:ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்