இஸ்ரேலிடமிருந்து இந்தியா கற்றுக்கொள்ள விஷயம்!

செய்தி அறையிலிருந்து நண்பர் பாஸ்கரன் ஒரு செய்தி அறிக்கையை நீட்டினார். “இமாச்சலப் பிரதேசத்தின் அழகிய பகுதிகளில் ஒன்றான மண்டிக்குப் பிரதமர் மோடி போயிருக்கிறார். இரு நீர்மின் திட்டங்களைத் தொடங்கிவைத்திருக்கிறார். விழாவில் அவர் இஸ்ரேலைப் பற்றி பேசியிருக்கிறார்” என்று சொன்னார் பாஸ்கரன்.

ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஒருவழியாகத் தண்ணீர் பிரச்சினை மோடியின் கண்களில் பட்டுவிட்டதோ என்று நினைத்தேன். செய்தி அறிக்கையை விரிவாகப் படித்தபோது, ஏமாற்றமே மிஞ்சியது. மோடி ஒரு நாளும், தேர்தல் காய்ச்சலிலிருந்து விடுபடப்போவதில்லை என்பதையே அவருடைய மண்டி பேச்சும் சொன்னது. பாகிஸ்தான் மீது சமீபத்தில் இந்திய ராணுவம் நடத்திய துல்லியத் தாக்குதலைக் குறிப்பிட்ட மோடி, அது சார்ந்தே இந்தியாவை இஸ்ரேலுடன் ஒப்பிட்டுப் பேசியிருந்தார்.

இந்தியாவின் தலையாய பிரச்சினைகளில் ஒன்றான, தண்ணீர் பிரச்சினையில் அரசு விரைந்து ஒரு தீவிரமான முடிவை எடுக்க வேண்டிய எச்சரிக்கையை இந்த ஆண்டின் கோடைகாலம் நமக்கு உணர்த்தியது. இந்த ஏப்ரலில் பெரும் வறட்சியை நாடு எதிர்கொண்டது. நாட்டின் பெரிய 91 நீர்த்தேக்கங்களில் மூன்றில் ஒரு பகுதி நீரே இருப்பில் இருந்தது. கடந்த ஆண்டு நிலைமையும் மோசம் என்றாலும், அதைக் காட்டிலும் மேலும் 23% குறைவு இது. தென்னிந்தியாவின் 31 பெரிய நீர்த்தேக்கங்களில் வெறும் 808 கோடி கன மீட்டர் அளவுக்கே தண்ணீர் இருந்தது. அவற்றில் மொத்தக் கொள்ளளவான 5,159 கோடி கன மீட்டருடன் ஒப்பிடுகையில், வெறும் 16% . கடந்த 10 ஆண்டு சராசரியைக் காட்டிலும் பல மடங்கு குறைவு.

உத்தரப் பிரதேசத்தில் 50/75, மத்திய பிரதேசத்தில் 46/51, கர்நாடகத்தில் 27/30, ஜார்கண்டில் 22/24, மகாராஷ்டிரத்தில் 21/36 என்று நாட்டில் மொத்தமுள்ள 650 மாவட்டங்களில் 254 மாவட்டங்கள் வறட்சியில் சிக்கின. 2.55 லட்சம் கிராமங்களில் குடிநீருக்காக மக்கள் குடங்களைத் தூக்கிக்கொண்டு அலையும் நிலை ஏற்பட்டது. 33 கோடிப் பேர் நேரடியாக வறட்சி பாதிப்புக்குள்ளாயினர்.

நாட்டிலேயே மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிரத்தின் மரத்வாடா பிராந்தியத்தில் 1,000 அடி ஆழ்குழாய்க் கிணறுகளில்கூடத் தண்ணீர் வறண்டது. லாத்தூரில் எல்லா நீராதாரங்களும் முற்றிலும் செயலிழந்துபோக, அன்றாடம் 70 டேங்கர்களில் 50 லட்சம் லிட்டர் தண்ணீரை அந்த ஊருக்கு அனுப்பியது மகாராஷ்டிர அரசு. லாத்தூருக்குத் தண்ணீர் கொண்டுசெல்வதற்காகவே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இப்படிக் கொண்டு செல்லப்பட்ட தண்ணீரைப் பெற மக்களிடம் ஏற்பட்ட அடிதடியைச் சமாளிக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Courtesy: Hindu
Courtesy: Hindu

கோதாவரி ஆற்றங்கரையில், பீட் மயானக் கரைக்கு இறந்தவர்களை எரிக்கச் சென்றவர்கள், பிணத்தோடு சவ ஊர்வலத்தில் ஒரு லாரி தண்ணீரையும் விலைக்கு வாங்கிச் சென்றனர். ஏறத்தாழ 2,500 கி.மீ. நீளும், 13 கோடி மக்கள் வாழும் கங்கைச் சமவெளியும் தப்பவில்லை. இதுவரை வரலாற்றிலேயே இல்லாத வகையில், தேசியப் புனல் மின் நிறுவனம், தன்னுடைய மின் உற்பத்தியை 10 நாட்களுக்கு நிறுத்திவைக்க வேண்டியிருந்தது. யோசித்துப் பார்த்தால், இயற்கையால் இதைவிடவும் கடுமையான முன்னெச்சரிக்கையை எப்படி வழங்க முடியும் என்றே தோன்றுகிறது.

பல பத்தாண்டுகளாகவே இந்தியாவின் தண்ணீர்ப் பிரச்சினை தொடர்பாக அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கைகள் வெளியான வண்ணம் இருக்கின்றன. 2000 தொடக்கத்தில், ஒரு நபருக்கு ஆண்டுக்கு 2,000 கன மீட்டர் தண்ணீரைக் கொடுத்தது அரசு. 2016-ல் அது 1,500 கன மீட்டராகக் குறைந்துவிட்டது. ஓராண்டில் ஒரு நபருக்கு 1,500 கன மீட்டர் தண்ணீர் என்பது சீனாவில் நெருக்கடிக் கால ஒதுக்கீட்டு அளவு. இந்தியாவில் இன்று அதுவே நமக்கு நடைமுறை ஆகிவிட்டது. அடுத்த 15 ஆண்டுகளுக்குள் இந்த அளவு 1,000 கன மீட்டராகக் குறையும் என்கின்றன ஆய்வுகள். இதை இன்னும் தீவிரமான வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், ஒரு நாளைக்குக் குடிக்க, சமைக்க, குளிக்க என எல்லாவற்றையும் 40 லிட்டர் தண்ணீருக்குள் முடித்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திலேயே இன்றைய பெரும்பான்மை கிராமப்புற இந்தியா இருக்கிறது.

சமீபத்தில் ஈரோடு மாவட்டம், பர்கூருக்குச் சென்றிருந்தேன். அங்குள்ள மலைக் கிராமங்களுக்குச் சென்றபோது, அங்கிருந்த சூழல் அதிரவைத்தது. பழங்குடியின மக்கள் பெரும்பாலும் வாரத்துக்கு ஓரிரு முறையே குளிப்பதாகக் கூறினர். தண்ணீர்த் தட்டுப்பாடே காரணம். ஒருபுறம் இப்படித் தண்ணீர் கிடைப்பதே சிக்கலாகிவருகிறது என்றால், மறுபுறம் கிடைக்கும் தண்ணீரின் தரம் நடுங்கவைக்கிறது. நாட்டின் 84,292 கிராமங்களில் கிடைக்கும் தண்ணீர் ஒன்றுக்கும் மேற்பட்ட ரசாயனக் கலப்பால் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியா எதிர்கொள்ளும் தண்ணீர்ப் பிரச் சினையின் தீவிரத்தை உணர லாத்தூர் சுற்றுவட் டாரத்தை ஆய்வுக்குட்படுத்தினாலே போதுமானது. அரசு வரையறையின்படி, 4,000 ஆழ்துளைக் கிணறுகளுக்கு மேல் இருக்கக் கூடாத இடத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஆழ்துளைக் கிணறுகள் இருக்கின்றன என்கிறார்கள். எல்லாம் 1,000 அடி ஆழத்தைத் தொடும் கிணறுகள். இந்தியா முழுக்க 2.3 கோடி ஆழ்துளைக் கிணறு கள் இருக்கின்றன. நிலத்தடி நீரை ராட்சச வேகத்தில் உறிஞ்சித் தள்ளுகின்றன. பாரம்பரிய நீர்நிலைகள் அவற்றுக்கே உரிய வகையில் புறக்கணிக்கப்பட்டுக் கொல்லப்படுகின்றன. தண்ணீர்த் தேவையைக் குறைக்கும் உத்திகளுக்கு மாற்றாக, எல்லாத் தொழில்களிலும் நீர்த் தேவையை அதிகரிக்கும் தொழில்நுட்பத்தையும் வாய்ப்புகளையுமே நாம் வாரி அணைக்கிறோம். நாட்டின் மொத்த விவசாயப் பரப்பில், 2.5% பரப்புக்கு பயிரிடப்படும் கரும்பு, 15% விவசாயத் தண்ணீரைக் குடிப்பது ஒரு உதாரணம்.

இந்த ஆண்டு எதிர்கொண்ட வறட்சியானது தேசிய அளவில் ஒரு புதிய நீர்க்கொள்கையை உருவாக்குவதற்கும், நதி நீர் தேசியமயமாக்கத்தில் தொடங்கி அந்தந்த மண்ணுக்கேற்ற மாற்றுப் பயிர்கள், சிக்கன நீர்ப்பாசன முறை வரை சிந்திக்கும் தொலைநோக்கிலான திட்டங்களை வகுப்பதற்குமான நிர்ப்பந்தம்.

உலகின் ஆதிக்க அச்சுறுத்தல் சக்திகளில் ஒன்றாகப் பார்க்கப்படும் இஸ்ரேல் ராணுவத்தின் செயல்பாட்டுடன் மோடி இந்திய ராணுவத்தின் செயல்பாட்டை ஒப்பிட்டதைப் பெருமையாகக் கருத முடியவில்லை. இஸ்ரேலிடம் உலகம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. முக்கியமாக, இந்தியா அவசியம் கற்றுக்கொள்ள ஒன்று உண்டு. 1948-ல் இஸ்ரேல் ஒரு நாடாக உருவெடுத்த இந்த 70 ஆண்டுகளில் இன்று உலகிலேயே நீர் மேலாண்மையிலும் விவசாயத்திலும் உன்னதமான இடத்தில் இருக்கிறது.

இஸ்ரேலின் நிலப்பரப்பில் பாதிக்கும் மேல் பாலைவனம். இஸ்ரேலின் பருவநிலையும் நீராதாரங்களும் விவசாயத்துக்குச் சாதகமானவை அல்ல. நாட்டின் சிறு பகுதி மட்டுமே மழையைப் பெறுகிறது. நீராதாரம் மிக முக்கியமானது என்பதால், நீராதாரக் கட்டமைப்புகள் அனைத்தையுமே தேசிய தண்ணீர் வலையமைப்பில் சேர்த்திருக்கிறார்கள். ஏராளமான நிலத்தடி நீர்த்தேக்கங்களைக் கட்டியிருக்கிறார்கள். தண்ணீரைப் பூமிக்கடியில் பதிக்கப்பட்ட குழாய்கள் மூலம் கொண்டுசெல்கிறார்கள். பாலைவனத்தின் மேற்பரப்பில் தண்ணீர் கொண்டுசெல்லப்பட்டால் ஆவியாகிவிடும் என்பதால், பல இடங்களில் நிலத்தடி வாய்க்கால்களை அமைத்திருக்கிறார்கள். கடல் நீரில் இருக்கும் உப்பை நீக்கிவிட்டு பயன்பாட்டுக்குக் கொண்டுவருகிறார்கள். வீடுகளிலும் அலுவலகங்களிலும் பொது இடங்களிலும் பயன்படுத்தப்படும் தண்ணீரைத் துளியும் வீணாக்காமல், மீண்டும் சுத்தமாக்கி மறுசுழற்சியில் பயன்படுத்துகிறார்கள்.

இஸ்ரேலின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதி நிலப்பரப்பே விவசாயத்தை யோசிக்கும் நிலையில் இருந்தது. பெரும்பாலான நிலப்பரப்பு புல்கூட முளைக்காத கட்டாந்தரை. இஸ்ரேல் தேசிய இயக்கத்தின் ஒரு பகுதியாகவே விவசாயத்தை வளர்த்தெடுத்தார்கள். கடும் பாறையாக இருந்த இடங்களைக் கொத்திச் சமப்படுத்தினார்கள். படி வரிசைபோல அடுக்கடுக்காகப் பாத்திகளை உருவாக்கினார்கள். உப்பான களர் நிலங்களை நீர் பாய்ச்சி உப்பின் அடர்த்தியைக் குறைத்தார்கள். மரங்களே இல்லாத பொட்டல் நிலங்களில் மரக்கன்றுகளை ஏராளமாக நட்டார்கள். மண் அரிப்பைத் தடுத்தார்கள். புதிய நூற்றாண்டில் முன்பிருந்ததைக் காட்டிலும் அதிகமான மரங்களோடு நுழைந்த ஒரே நாடு இஸ்ரேல்.

இஸ்ரேலில் கிபுட்ஸ், மோஷாவ் என்ற இரு வேளாண் பண்ணை முறைகளைக் கையாள்கிறார்கள். கிபுட்ஸ் என்ற கூட்டுப்பண்ணை விவசாயத்தில் உற்பத்திக்கான ஆதாரங்கள் சமூகத்துக்குச் சொந்தம். ஒவ்வொருவரின் உழைப்பும் சமூகத்துக்குப் பயன்படுகிறது. மோஷாவ் என்பது வேளாண் கிராமத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒவ்வொரு குடும்பமும் தனக்கென்று சொந்தமாக நிலங்களை வைத்துக்கொண்டு அதில் பாடுபடுகிறது. சமூக சமத்துவம், கூட்டுறவு, பரஸ்பர உதவி என்கிற அடிப்படையில்தான் கிபுட்ஸ், மோஷாவ் இரு முறைகளுமே செயல்படுகின்றன.

வேளாண் ஆராய்ச்சியிலும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளிலும் இஸ்ரேல் தொடர்ந்து முன்னணியில் இருக்கிறது. சிக்கனமாக நீரைப் பயன்படுத்தி மகசூலை அதிகரிக்கத் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்கிறார்கள் இஸ்ரேலியர்கள். சொட்டுநீர்ப் பாசனம், தேளிப்புநீர்ப் பாசனத்தில் உலகின் முன்னோடி இஸ்ரேல். புத்தாயிரமாண்டுக்குப் பின்னர் மட்டுமே தாம் ஏற்கெனவே பயன்படுத்திய தண்ணீரில் 12%-ஐக் குறைத்து விளைச்சலை 26% பெருக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு பருவத்திலும் எவ்வளவு சாகுபடி செய்யப்பட வேண்டும், எவ்வளவு தண்ணீர் ஒவ்வொரு பயிருக்கும் அளிக்கப்பட வேண்டும் என்று அரசு இலக்கு நிர்ணயித்து அமல்படுத்துகிறது. வேளாண்மைக்கான கொள்முதலும் வேளாண் பொருள் விற்பனையும் கூட்டுறவு அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.

1948-ல் இஸ்ரேலின் சாகுபடிப் பரப்பு 4,00,000 ஏக்கர். இன்று 11,00,000 ஏக்கரைத் தொட்டிருக்கிறது. கடந்த 70 ஆண்டுகளில் வேளாண் பொருட்களின் உற்பத்தியை 1,600% உயர்த்தியிருக்கிறார்கள். அந்நாட்டின் மக்கள்தொகைப் பெருக்கத்தைவிட மூன்று மடங்கு அதிகம் இது! உலகிலேயே அதிகமான அளவு காய்கறிகளை எடுத்துக்கொள்வதில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்கள் இஸ்ரேலியர்கள். ஒரு இஸ்ரேலியர் ஆண்டுக்கு எடுத்துக்கொள்ளும் சராசரி காய்கறியின் அளவு 197.6 கிலோ.

மோடியின் இந்த ஆண்டு பயணத் திட்டத்தில் இஸ்ரேல் இருக்கிறது. இஸ்ரேலின் வயல்வெளிகளை அவர் பார்த்து வர வேண்டும். கூடவே, தமிழக அரசின் சார்பிலும் ஒருவர் சென்று பார்த்து வரலாம்!

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *