மதுரை மாவட்டம் சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம் தாடையம்பட்டி ஊராட்சியில் ஒரே நாள் மழையில் 52 பண்ணை குட்டைகள் நிரம்பியது விவசாயிகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை மூலம் மகாத்மாகாந்தி தேசிய நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பண்ணை குட்டைகள் அமைக்கப்படுகின்றன. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் மழை நீர் தேங்குமிடங்களில் விவசாயிகளின் ஒத்துழைப்புடன் 1290 பண்ணை குட்டைகள் வரை அமைக்க திட்டமிடப்பட்டது.
இதில் சேடப்பட்டி ஒன்றியத்தில் தாடையம்பட்டி ஊராட்சியில் ஒரே இடத்தில் விவசாயிகள் ஒதுக்கிய கொடுத்த நிலங்களில் 52 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணி கடந்த மாதம் துவங்கின. இதில் 23 குட்டைகள் தோண்டப்பட்டு பணிகள் முடிந்தன. மற்ற குட்டைகளை தோண்டும் பணி நடந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை அப்பகுதியில் நல்ல மழை பெய்தது. இந்த மழையில் 52 பண்ணை குட்டைகளும் நிரம்பின. இதனால் விவசாயிகள் உற்சாகமடைந்துள்ளனர்.
ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ரோகிணி கூறியதாவது: ஒரே இடத்தில் 52 குட்டைகள் அடுத்தடுத்து அமைக்கப்பட்டன. தற்போது மழையில் அவற்றில் தண்ணீர் தேங்கியுள்ளதால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். தேங்கிய நீரை கொண்டு விவசாயம் செய்ய வாய்ப்புள்ளது. கால்நடைகளுக்கும் இந்த நீர் பயன்படும்.
மாவட்டத்தின் மற்ற ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலும் பண்ணை குட்டைகள் அமைக்கப்படும். விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பண்ணை குட்டைகள் அமைக்க முன்வர வேண்டும், என்றார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்