சொட்டுநீர் பாசன தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் ஒரு லட்சம் எக்டேர் நிலப்பரப்பில் சொட்டு நீர் பாசன முறையில் சாகுபடி நடக்கிறது. பாசன நீரை குழாய்கள் மூலம் எடுத்து சென்று, செடியின் வேர்ப்பாகங்களில் தேவையான அளவு தினமும் கொடுக்கப் படுகிறது.

இந்த நவீன முறை பழச்செடிகள், தென்னை, காய்கறிகள், மலை தோட்ட பயிர்களுக்கு மிகவும் ஏற்றது. இம்முறையில் மேற்பரப்பு பாசன முறையை விட ஏராளமான அனுகூலங்கள் உள்ளன. தண்ணீர் கணிசமான அளவில் சேகரிக்க முடியும். அதிக விளைச்சல். விளைபொருளின் உயர்ந்த தன்மை. நிலம் சமமாக இருக்க தேவைஇல்லை. களைகள் குறைவு மற்றும் உரம் இடுதலிலும் 30 சதவிகிதம் குறைவு.

இம்முறையை பயன்படுத்தினால் அனைத்து பயிர்களிலும் நீரில் 40 – 60 சதவிகிதம் மிச்சப்படுத்தி மகசூலில் 30 முதல் 100 சதவிகிதம் அதிகம் எடுக்க முடியும்.

தமிழ்நாட்டில் தற்பொழுது 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் எக்டேர் தென்னைக்கும் 50ஆயிரம் முதல் 60 ஆயிரம் எக்டேர் மற்ற பயிர்கட்கும் (திராட்சை, வாழை, கரும்பு) சொட்டு நீர் பாசனம் செயல்படுகின்றது. தற்பொழுது உள்ள நீர்ப்பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் அனைவரிடமும் சொட்டுநீர் பாசனத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

Courtesy: Dinamalar
Courtesy: Dinamalar

சொட்டுவான் தடைபடுதல்:

சொட்டு நீர் பாசனத்தில் தண்ணீர் குளம், ஆழ்கிணறு, கால்வாய், ஆற்றிலிருந்து எடுக்கப்படுகிறது. இவ்வகையான தண்ணீரின் தரம் அதன் உற்பத்தி இடத்தை பொறுத்து அமையும். சொட்டுவான்கள் சிறு பொருட்களால் மாசடைந்து தடைபடக்கூடும். விரிவடைதல், சுருங்கும் தன்மையால் ஏற்படுகிறது (இது குப்பைகள் வேகமாக சொட்டுவான்களில் புகும்போது ஏற்படுகிறது). பூச்சிகள், எலிகள் தொல்லைகள். பாசி மற்றும் பாக்டீரியா வளர்ந்து உள்ளே படிதல். ரசாயன பொருள் உள்ளே தங்குதல் ஆகியவற்றால் சொட்டுவான் தடைபடுக்கூடும்.

வாரம் தோறும் பராமரித்தல்:

பிரதான மற்றும் கிளை குழாய்களின் கடைசியில் உள்ள மூடியை வாரம் ஒருமுறை திறந்து விட வேண்டும். இதன் மூலம் பிரதான மற்றும் கிளை குழாய்களில் உள்ள துாசுகளை வெளியேற்றலாம். சொட்டுவானில் தண்ணீர் சொட்டுகிறதா என்றும் குறிப்பிட்ட அளவு நீர் வருகிறதா என்றும் பார்க்க வேண்டும். சொட்டுவான்கள் மற்றும் கிளை குழாய்கள் ஒடுக்கான இடத்தில் உள்ளனவா என்றும் பரிசோதிக்க வேண்டும். வடிகட்டியில் கசிவுகள் ஏதேனும் உள்ளதா என்றும் பரிசோதிக்க வேண்டும்.

சொட்டுநீர் பாசனத்தில் வடிகட்டி என்பது இருதயம் போன்றது. வடிகட்டி சரியில்லை என்றால் சொட்டுவான்கள் அனைத்திலும் துாசுகள் அடைத்து தண்ணீரின் வெளியேற்றம் குறைந்து விடும். வடிகட்டியின் இரு முனைகளில் உள்ள அழுத்தமானியை கொண்டு வடிகட்டியினை எப்பொழுது சுத்தம் செய்யப் பட்டது என்பதை அறிய முடியும்.

மணல் வடிகட்டியினை சுத்தம் செய்யும் முறை:

பேக் வாஸ்- தினமும் 5 நிமிடம் தண்ணீரை அதன் எதிர் திசையில் செலுத்தி அதிலுள்ள அடைப்புகளை நீக்குவதன் மூலம் அதிலுள்ள மண் துகள்கள் மற்றும் துாசுகளை அகற்ற முடியும். அழுத்தமானிகளில் வடிகட்டியின் முன் மற்றும் பின்புறம் உள்ள அளவுகளின் வித்தியாசம் 0.3 கிலோ செ.மீ., அளவை தாண்டக்கூடாது. இந்த வித்தியாசம் வரும்பொழுது கண்டிப்பாக பேக்வாஸ் செய்ய வேண்டும். பேக்வாஸ் செய்யும்பொழுது நன்றாக மணல் வடிகட்டியை கிளறி விட வேண்டும். இப்படி செய்யும் பொழுது வடிகட்டியினை அடியிலுள்ள சிறு துகளையும் சுத்தம் செய்ய முடியும்.

வலை வடிகட்டி, டிஸ்க் வடிகட்டி:

வாரத்திற்கு ஒருமுறை வலை வடிகட்டியினை வெளியில் எடுத்து நன்றாக தண்ணீரில் விட்டு கழுவ வேண்டும். அதிலுள்ள ரப்பர் சீலை உடைக்காமல் மெதுவாக சுத்தம் செய்ய வேண்டும். பேக்வாஸ் செய்யலாம். அழுத்தமானியின் வித்தியாசம் 0.2 கிலோ, செ.மீ., ஆக இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். பிரதான குழாய்கள் மற்றும் பக்கவாட்டு குழாய்கள் அடைப்பை அகற்றுதல்: சில நேரங்களில் மணல் மற்றும் வண்டல் மண் போன்ற சிறிய துகள்கள் வடிகட்டிகளில் சிக்காமல் பிரதான குழாய்களில் வந்து அடைத்து கொள்ளும். சில வகை பாசிகள் மற்றும் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளும் குழாய்களில் வந்து தங்கிவிடும். இவற்றை நீக்க வாரம் ஒருமுறை பிளஸ் வால்வை திறந்து விட வேண்டும். பக்கவாட்டு குழாய்களில் உள்ள அடைப்புகள் அதன் நுனியில் உள்ள வால்வை நீக்கி வாரம் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்.

– டி.யுவராஜ்
வேளாண் பொறியாளர்
உடுமலை.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *