போதிய அளவு தென்மேற்கு, வடகிழக்குப் பருவ மழை பெய்தாலும், தமிழகத்தில் குறிப்பாக டெல்டாவில் நீர்ப் பற்றாக்குறையே நிலவுகிறது. இந்த வருடம் கர்நாடகம் மற்றும் தமிழக மேற்கு எல்லைப் பகுதிகளில் வரலாறு காணாத தென்மேற்குப் பருவமழை பெய்து, மேட்டூர் அணை நான்கு முறை நிரம்பியது. காவிரியில் இரண்டரை லட்சம் கன அடி தண்ணீர் போனாலும், காவிரியையொட்டியுள்ள மாவட்டங்களில் உள்ள பல நீர்நிலைகள் வறண்டு கிடக்கும் சூழல். அந்த மாவட்டங்களில், `கடைமடைக்கு இன்னும் தண்ணீர் வரவில்லை’ என்று விவசாயிகள் கண்ணைக் கசக்கி வருகிறார்கள்.
இதற்குக் காரணம், “அரசு தரப்பில் நீர் மேலாண்மை சம்பந்தமான திட்டங்கள் என்பது அரவே இல்லாததுதான். காமராஜர் காலத்தில்தான் அதிக அளவில் அணைகள் கட்டப்பட்டன. அதன்பிறகு, நீரைச் சேமிக்க எந்த அரசும் அணைகளைக் கட்டவில்லை. நீர்நிலைகளையும் செப்பனிடவில்லை” என்று புகார் வாசிக்கிறார்கள் விவசாய சங்கப் பிரதிநிதிகள். இந்நிலையில்,கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் வயலைச் சுற்றி அகழிகள் வெட்டியும், அரை ஏக்கரில் குளம் வெட்டியும் மழை நீரைத் தேக்கி வருகிறார். இதன்மூலம், அவரது வயல் வெள்ளாமைக்கு நீர் வழங்கும் கிணற்றில் எப்போதும் தண்ணீர் நிறைந்து இருப்பதாக மகிழ்ச்சியாகத் தெரிவிக்கிறார். நீர் மேலாண்மைக்கு எடுத்துக்காட்டாக அவரது முயற்சிகள் இருக்கின்றன.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் இருக்கிறது குள்ளமாபட்டி. இந்தக் குக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான முத்துசாமிதான் நீர் மேலாண்மையில் கலக்கும் மனிதர். 70 வயதாகும் இவருக்கு ஐந்து ஏக்கர் நிலம் உள்ளது. கரூர் மாவட்டத்திலேயே வறட்சி மிகுந்த பகுதி அரவக்குறிச்சி ஒன்றியத்தில் இருக்கும் இந்தப் பகுதிகள்தாம். வானம் பார்த்த பூமி இது. அதனால், இங்குள்ள விவசாயிகள் ஒன்று மழை நீர் இல்லை என்றால் கிணற்றுப் பாசனத்தை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். மழை பெய்தால்தான் மற்ற விவசாயிகளின் கிணறுகளில் தண்ணீர் தேங்கும். ஆனால், மழை பெய்யாத காலங்களிலும் இவரது கிணற்றில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. காரணம், இவர் மேற்கொள்ளும் மழை நீரைத் தேக்கும் நீர் மேலாண்மைதான். தனது வயலில் கிடந்த கடலைக் கொடி கட்டுகளை அப்புறப்படுத்திக்கொண்டிருந்த முத்துசாமியைச் சந்தித்துப் பேசினோம்.
“எங்களுக்கு பரம்பரையா விவசாயம்தான் தொழில் தம்பி. வானம் பார்த்த விவசாயம்தான். மழை பேய்ஞ்சா வெள்ளாமைங்கிற நிலைமை. கிணறும் மழைக்காலத்தில்தான் நிறையும். ஆனால், ஒரு வருஷத்துக்கு முன்பு அசலூர்ல வேலை பார்க்கிற என் மகன்தான் இப்படி நீர் மேலாண்மை பண்றதைப் பத்திச் சொன்னான். அதைச் செஞ்சேன். அதன்பிறகு, தண்ணீர்ப் பற்றாக்குறையே அதிகமா வரலை. எனக்கு மொத்தம் அஞ்சு ஏக்கர் நிலமிருக்கு. கடலை, கம்பு, வெங்காயம், உளுந்து, முருங்கைன்னு பயிரிடுவோம். அஞ்சு ஏக்கர் நிலத்திலும் சுத்தி அஞ்சு அடி ஆழம், அஞ்சு அடி அகலத்துக்கு அகழி மாதிரி வாய்க்கால் பறிச்சிருக்கோம். அதேபோல், அரை ஏக்கர்ல குளம் ஒன்றும் வெட்டினோம். மழை பெய்ஞ்சதும் இந்த அகழிகளும், குளமும் முழுக்க நிரம்பிட்டுது. இதனால், மழை பெய்யாத போதும் கிணற்றுல தண்ணீர் வத்தலை. அகழிகள்ல தண்ணீர் நின்றதால், வயல்ல போட்டிருந்த வெள்ளாமைக்கும் அதிக தண்ணீர் பாய்ச்ச வேண்டியதில்லை என்ற நிலைமை ஏற்பட்டது. இத்தனை வருஷமா தண்ணீர்ப் பற்றாக்குறையால் அரைகுறை விவசாயம்தான் பார்த்துகிட்டு இருந்தேன்.
இந்த மண் சுண்ணாம்பு மண். அதிகம் மழையை ஈர்க்காத மண். அதனால், இந்தப் பகுதியில் மழையே குறைவாகத்தான் பெய்யும். ஆனால், அப்படிப் பெய்யும் கொஞ்சநஞ்ச மழைநீரையும் நான் முறையா நீர்மேலாண்மை பண்ணி சேமித்ததால், கடந்த ஒரு வருஷமா தண்ணீர்ப் பிரச்னை இல்லாம நிம்மதியா விவசாயம் பண்றேன். இதுக்குக் காரணம் என் மகன்தான். நான் 10 வயசிலிருந்து விவசாயம் பண்றேன். ஆனால், மழை நீரைச் சேமிக்கிற கூறு எனக்குத் தெரியலை. ஆனால், என் மகன் நம்மாழ்வார் மேல உள்ள பற்றுல, என்னையும் மாத்தி, என் விவசாயத்தைச் செழிப்பாக்கிட்டான். எந்த வறட்சியிலும் என் தோட்டமும், வெள்ளாமையும் மட்டும் பச்சைப் பசேல்ன்னு செழிப்பா இருக்கு. நான் இப்படி நீர் மேலாண்மை பண்ணி விவசாயம் பண்றதைக் கேள்விப்பட்டு பல விவசாயிகளும் வந்து பார்த்துட்டுப் போறாங்க.
அதேபோல், நான் என்னோட வயல்ல போடுற உளுந்து, கடலை உள்ளிட்ட பொருள்களை நேரடியாக வியாபாரிகள்ட்ட விற்கமாட்டேன். அவற்றை மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றி, நேரடியாக மக்கள்ட்ட விற்கிறேன். இதனால், எனக்கும் கணிசமா லாபம் கிடைக்குது. மக்களுக்கும் தரமான உணவுப் பொருள்கள், எண்ணெய் கிடைக்குது. இந்த யோசனையையும் என் மகன் ரவிதான் எனக்குச் சொன்னான். கரூர் மாவட்டத்தில் பெரிய பெரிய ஏரிகளும், குளங்களும்,கண்மாய்களும் இருக்கு. அவை தண்ணீரின்றி வறண்டு கிடக்கு. அவற்றை முறையாப் பராமரிக்காம எல்லாம் தூர்ந்து போய் கிடக்கு. அவற்றை அரசாங்கம் முறையா தூர் வாரினா, மழைநீர் தேங்கி விவசாயிகள் சிறப்பா விவசாயம் பண்ண முடியும். ஆனால், அரசாங்கம் நீர் மேலாண்மை விசயத்தில் ஜீரோ அளவுக்குத்தான் ஆர்வமா இருக்காங்க” என்று நொந்துகொண்டார். அரசாங்கம் யோசிக்க வேண்டிய விஷயம்!
நன்றி: பசுமை விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்