பாரம்பர்ய நெல் காப்பாற்றி வரும் தனி ஒருத்தி!

பாரம்பர்ய நெல் பாதுகாப்பை  நிஜமாக்கும் தனி ஒருத்தி! - ஐ.டி ஜோடியின் இயற்கை ஆர்வம்

“என் கணவர் இறந்த மூணாவது நாள் தொடங்கி இன்னைக்கு வரைக்கும் பாரம்பர்ய அரிசி மற்றும் நெல் ரகங்களைப் பாதுகாத்துக்கிட்டு வர்றேன்” என்று உருக்கமாக ஆரம்பிக்கிறார், மேனகா.  ‘மண்வாசனை’ என்ற பெயரில் பாரம்பர்ய நெற்களைப் பரப்பும் பணிகளைச் செய்து கொண்டிருக்கும் மேனகாவைச் சந்தித்துப் பேசினோம்.

மேனகா - பாரம்பர்ய அரிசி

“முன்னால இந்தியாவுல 1 லட்சத்துக்கும் மேல பாரம்பரிய நெல் வகைகள் இருந்துச்சு. அதுல தமிழ்நாட்டுல மட்டும் 8 ஆயிரம் நெல் வகைகள் இருந்துச்சு. காலப்போக்குல தமிழ்நாட்டுல இப்ப 150 ரக நெல்லுக்கும் குறைவா இருக்கு. அதனாலத்தான் இது தொடர்பான விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகளை நடத்திக்கிட்டு வர்றேன். அதோட பாரம்பர்ய அரிசி வகைகளை மதிப்புக் கூட்டி பொருள் தயாரிச்சு விற்பனை செய்துகிட்டு வர்றேன்.

என்கிட்ட இப்போ சுமார் 100-க்கும் அதிகமான அரிசி வகைகள் இருக்கு. ரெண்டு வருஷத்துக்கு முன்னால ஆரம்பிச்ச இயற்கை அங்காடியை இப்போ வரைக்கும் வெற்றிகரமா நடத்திக்கிட்டு வர்றேன். இந்த வேலைகள் எல்லாம் இருக்குறதால மென்பொறியாளர் வேலையை விட்டுட்டேன். இதுக்கெல்லாம் என்னோட கணவர் திலகராஜன்தான்” என்றவர் முன்கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

“நானும், என் கணவரும் ஒரே மென்பொருள் கம்பெனியிலதான் வேலை பார்த்தோம். இரண்டு பேரும் காதலிச்சு கல்யாணம் செய்துக்கிட்டோம். எங்களுக்கு முதல் பையன் பிறந்தான். அப்போ அவனுக்கு ஆரோக்கியமான உணவு கொடுக்கணும்னு பாரம்பர்ய உணவு பத்தின தேடலைத் தொடங்கினார். நிறைய ஊருக்குப் போவார். அதிகமான விவசாய ஆட்களைச் சந்திப்பார்.  ஒருமுறை நம்மாழ்வாரைச் சந்திக்கிற வாய்ப்பு அவருக்கு கிடைச்சது. அவரைச் சந்திச்ச பின்னால அவருக்கு இயற்கை விவசாயம் மேல ஆசை வந்துடுச்சு. அதனால பார்த்த வேலையை விட்டுட்டு பாரம்பர்ய ரகங்களைத் தேடி ஒடிசா, மேற்கு வங்காளம் மாநிலங்கள் வரைக்கும் போனார். கை நிறைய சம்பளம் கொடுத்த ஐ.டி வேலையை விட்டுட்டு அவர் ஊர், ஊரா போனது பிடிக்கலை. என்னோட சம்பளத்துல மட்டும்தான் குடும்பம் ஓடிக்கிட்டிருந்தது. அப்புறமா, தியாகராய நகர்ல பாரம்பர்ய அரிசிக் கடையை ஆரம்பிச்சார். பத்து வருஷத்துக்கு முன்னால ஆரம்பிச்சதால அப்போ எல்லோரும் அதை மூலிகைக் கடைனு சொல்வாங்க.

நெல் ஜெயராமன் நடத்துன பாரம்பர்ய நெல் திருவிழா மூலமா பாரம்பர்ய நெல் ரகங்களை வாங்கி சேமிக்க ஆரம்பிச்சார். அதுக்கப்புறமா, நேரடியா நெல்லை வாங்கி விற்பனை செய்ய ஆரம்பிச்சார். அவரோட பாரம்பர்ய நெல் வகைகள் தேடலால எனக்கும் அதுமேல கவனம் திரும்பிச்சு. ஆனா, மக்கள் பாரம்பர்ய அரிசி வகைகள்மேல அவ்வளவா ஈடுபாடு காட்டலை. எப்படி மக்களுக்கு ஈஸியா கொண்டுபோய்ச் சேர்க்குறதுனு யோசிச்சோம்.

துணை உலக சாதனை பெறும் மேனகா

“பாரம்பர்ய அரிசியில இருந்து மதிப்புக் கூட்டி பொருட்களை தயாரிக்க ஆரம்பிச்சோம். அது மக்களுக்கு பிடிச்சுப்போனதானதால அதுல அதிகமா ஆர்வம் வந்துடுச்சு. அதனால விற்பனையும் அதிகரிச்சது, நல்ல பொருளை விற்கிற திருப்தியும் கிடைச்சது.

பொருட்கள் அதிகமா விற்பனையானதால என்னோட வேலையை ராஜினாமா செய்துட்டு கணவரோட கடைக்கு வந்துட்டேன். அவர்கூடவே பாரம்பர்ய நெல் ரகங்களைத் தேடி போனேன். வாழ்க்கை நல்லாத்தான் போயிட்டிருந்தது. போன வருஷம் என் கணவர் ஆக்ஸிடெண்ட்ல இறந்துட்டாரு. அது என்னோட வாழ்க்கையையே புரட்டிப் போட்டுடுச்சு. இனி குழந்தைகளுக்காகவாவது நாம வாழணும்னு முடிவு செஞ்சு கடையை மேம்படுத்துறதுல கவனத்தைத் திருப்பிட்டேன். கணவரோட பல காலம் உழைப்பு வீண்போகக்கூடாதுங்குற எண்ணமும், குழந்தைகளை வளரர்த்து ஆளாக்கணும் என்கிற கட்டாயமும் என்னை இன்னும் வேகமா வேலை செய்ய வைக்குது” என்றவர் தொடர்ந்தார்.

என்னோட கணவரின் பிறந்தநாளான நவம்பர் 25-ம் தேதி அவரின் ஆசைப்படி சென்னையில் பாரம்பர்ய உணவுத் திருவிழாவை நடத்தினேன். அதுல 100 பேர் சேர்ந்து 100 வகையான பாரம்பர்ய அரிசியில விதவிதமான பொங்கல் சமைச்சோம். அதுக்காக துணை உலகச்சாதனை (Assist World Records) விருது கிடைச்சது. அதோடு, என் கணவருக்குக் கிடைக்க இருந்த நம்மாழ்வார் விருதை அந்தத் திருவிழாவுல கொடுத்தாங்க. இப்போ பாரம்பர்ய அரிசி வகைகளைப் பயன்படுத்தி சத்துமாவு, பணியாரம், இடியாப்பம் ரெடி மிக்ஸ் வகைகளை தயாரிச்சு விற்பனை செய்துக்கிட்டு வர்றேன். இதுக்கு மக்கள் மத்தியில அதிகமான வரவேற்பு இருக்கு. இதுதவிர ‘மண்வாசனை’ங்குற பேர்ல கடை நடத்திக்கிட்டு வர்றேன். இன்னைக்கு நாம சாப்பிடுற வெள்ளை அரிசியில சத்துக்களே இல்லை. பட்டைத் தீட்டப்படாத பாரம்பர்ய அரிசியிலதான் சத்துக்கள் அதிகமா நிரம்பிக் கிடக்குது. பாரம்பர்ய அரிசியை உணவா எடுத்துக்கிட்டாலே மருத்துவ செலவுகள் குறையும்.

இன்னைக்கு நம்ம வாழ்க்கை சூழல் இயந்திரமா மறிடுச்சு. நாம சாப்பிடுற சாப்பாடுல விஷம் இருக்கானு முக்கியமா பார்க்கணும். இயற்கைப் பொருட்கள் பக்கம் மக்கள் அதிகமான ஈடுபாடு காட்டணும். சர்க்கரை நோயாளிகள் அரிசி உணவை எடுத்துக்க கூடாதுனு டாக்டர்கள் சொல்வாங்க. ஆனா பாரம்பர்ய ரகத்தை உணவா எடுத்துக்கிட்டா ஒண்ணும் ஆகாது. அரிசி வகைகள் தவிர, மசாலா பொடி, வடகம் என பல பொருள்னு மொத்தமா 52 பொருட்கள் தாயாரிச்சுட்டு வர்றேன்” என்றவர், நிறைவாக,

“பாரம்பரிய அரிசி வகைகள்ல அதிகமான மருத்துவ குணங்கள் இருக்கு. இதைப் பாதுகாப்பா அடுத்த தலைமுறைக்கு கொடுக்கணும். அப்போதான் அவங்க ஆரோக்கியமா இருப்பாங்க. இப்போ பாரம்பர்ய அரிசிகளோட விலை அதிகமா இருக்குறதுக்கு மக்கள் அதிகமா வாங்காம இருக்குறதுகு ஒரு காரணம். பாரம்பர்ய அரிசிகளை வாங்கி சாப்பிடுங்க. நலமோட இருங்க” என்றபடி விடைகொடுத்தார், ‘மண்வாசனை’ மேனகா.

“வாழ்க்கையில் என்னமாதிரியான சோதனைகள் வந்தாலும், அங்கேயே தேங்கிவிடக் கூடாது. அதனைத் தாண்டி அடுத்தகட்டத்திற்கு செல்வதற்கு தயாராக இருக்க வேண்டும். கடவுள் நமக்கென்று நிச்சயம் ஒரு திட்டம் வைத்திருப்பார் என்பதை நம்ப வேண்டும். யோசித்து நிதானமாகச் செயல்பட்டால் நிச்சயம் வெற்றியை வசப்படுத்தலாம்,” – மேனகா

நன்றி: பசுமை விகடன்

 

மன்வாசனை இணையத்தளம்: http://manvasanai.in/

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *