புடலங்காய் சாகுபடி

தமிழகத்தில் எளிதாக பயிராகும் காய் வகைகளில், கொடி வகைத் தாவரமான புடலங்காய் சாகுபடி செய்தால் ஒரு ஹெக்டேருக்கு 20 முதல் 25 டன் வரை மகசூல் பெறலாம் என தோட்டக்கலைத் துறையினர் கூறியுள்ளனர்.
இது வேகமாக வளரக் கூடியதும், அதிக மகசூல் தரும் பயிராகும்.

Courtesy: Dinamani
Courtesy: Dinamani

 

 

 

 

 

 

 

 
 மண், தட்ப வெட்ப நிலை:

புடலங்காய் ஒரு வெப்ப மண்டலப் பயிராகும். இதன் சாகுபடிக்கு 25 முதல் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தேவைப்படும். இருமண் பாங்கான மண் வகைகள் சாகுபடிக்கு ஏற்றவை. மேலும் மித வெப்ப மண்டலப் பகுதிகளிலும் சாகுபடி செய்யலாம்.
பருவம்: ஜூன்- ஜூலை மாதங்களும், டிசம்பர் -ஜனவரி மாதங்களும் சாகுபடி செய்ய ஏற்ற பருவமாகும்.
 நிலம் தயாரித்தல்:

நிலத்தை நன்றாக 3 அல்லது 4 முறை உழவு செய்ய வேண்டும்.கடைசி உழவின்போது 20 டன் மக்கிய தொழு உரத்தை இட்டு 2 மீட்டர் இடைவெளியில் 60 செ.மீட்டர் அகலத்தில் வாய்க்கால் எடுத்து நிலம் தயாரிக்க வேண்டும். அந்த வாய்க்காலில் 1.5 மீட்டர் இடைவெளியில் 45 செ.மீட்டர் நீளம், ஆழம், அகலம் கொண்ட குழிகளை எடுத்து மேல் மண் கலந்து நிரப்பி வைக்க வேண்டும்.
 விதையளவு:

ஒரு ஹெக்டேருக்கு 1.5 முதல் 2 கிலோ விதையளவு தேவைப்படும். விதையை 2 கிராம் பெவிஸ்டின் என்ற பூஞ்சாண மருந்துடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஒரு குழிக்கு 5 விதைகள் வீதம் ஊன்ற வேண்டும். விதை நட்ட 8 முதல் 10 நாள்களில் முளைக்கத் தொடங்கிவிடும். ஒரு குழியில் நன்கு வளர்ந்த 3 நாற்றுகளை மட்டும் விட்டு மற்ற நாற்றுகளை பிடுங்கி விட வேண்டும்.
 உரமிடுதல்:

ஒரு ஹெக்டேருக்கு அடியுரமாக 20 முதல் 30 கிலோ தழைச்சத்து, 30 முதல் 50 கிலோ மணிச்சத்து, 30 முதல் 40 கிலோ சாம்பல் சத்தை இட வேண்டும். மேலுரமாக 20 முதல் 30 கிலோ தழைச்சத்தை பூ பூக்கும் பருவத்தில் இட வேண்டும்.
 நீர் பாய்ச்சுதல்:

விதை ஊன்றியவுடன் குடம் அல்லது பூவாளி வைத்து தண்ணீர் ஊற்ற வேண்டும். நன்கு வளர்ந்தவுடன் வாரம் ஒரு முறை வாய்க்கால் மூலமாக தண்ணீரைப் பாய்ச்ச வேண்டும்.
 பின்செய் நேர்த்தி:

புடலைக் கொடி வளர்ந்து படருவதற்கு இரும்புக் கம்பிகளை வைத்து பந்தல் போடுவது அவசியமாகும். விதை முளைத்து கொடி வரும்போது, கொடியை மூங்கில் குச்சியோ அல்லது மற்ற குச்சிகளை வைத்தோ ஊன்று கொடுத்து பந்தலில் படர விட வேண்டும்.
இரண்டு இலைப் பருவத்தில் எத்ரல் 250 பிபிஎம் என்ற வளர்ச்சி ஊக்கியை தெளித்தால் பெண் பூக்கள் அதிகளவில் உற்பத்தியாகும். இதே வளர்ச்சி ஊக்கியை ஒரு வாரத்துக்கு 3 முறை தெளிக்க வேண்டும்.
 பயிர் பாதுகாப்பு:

புடவையில் பூசணி வண்டின் தாக்குதல் அதிகளவில் காணப்படும். இதைக் கட்டுப்படுத்த 2 கிராம் செவின் அல்லது கார்பரில் மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். பழ ஈயின் தாக்குதலைக் கட்டுப்படுத்த மாலத்தியான் 1 சதவீதம் தெளிக்க வேண்டும்.
அறுவடை:

விதை ஊன்றிய 80 நாள்கள் கழித்து முதல் அறுவடை தொடங்கும். பின்னர் ஒரு வார இடை வெளியில் 6 முதல் 8 அறுவடை கிடைக்கும். மேற்கண்ட வழிமுறைகளில் பயிரிட்டால் ஒரு ஹெக்டேருக்கு 20 முதல் 25 டன் வரை புடலங்காய் மகசூலைப் பெறமுடியும் என தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “புடலங்காய் சாகுபடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *