மானாவாரியில் பயிர் செய்யப்படும் கம்பு, சோளம், மக்காச்சோளம், உளுந்து, பச்சைப்பயிறு, எள், பருத்தி, சூரியகாந்தி போன்றவற்றில் வேரழுகல் நோயும், தக்காளி, கத்தரி, மிளகாயில் நாற்றழுகல் நோயும் தோன்றுகிறது.
இதனால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. நோய் வந்தபின் அதை கட்டுப்படுத்துவது சிரமம், பூஞ்சாணக் கொல்லிக்காக ஆகும் செலவும் அதிகமாகிறது. இந்த நோயை தடுக்க விதை நேர்த்தி அவசியம்.
இதற்கு ‘டிரைக்கோடெர்மா விரிடி’ எனும் பூஞ்சாணம் பயன்படுகிறது. இது உயிரினங்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. இதை மற்ற உயிர் உரங்களான ‘அசோஸ்பைரில்லம்’ மற்றும் ‘ரைகோபியத்துடன்’ கலந்து விதைக்கலாம். ஆனால் மற்ற ரசாயன பூச்சிக் கொல்லிகளுடன் கலந்து விதைக்கக் கூடாது.
உயிர் பூஞ்சாணம் இது நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிர்களை விட மிக வேகமாக வளரக்கூடியது.
இதனை விதையுடன் கலந்து விதைக்கும் போது விதையின் வேர்ப்பாகத்தை சுற்றி வளர்ந்து கவசம் போல் மூடிக் கொள்கிறது.
இதன் மூலம் நோய் உண்டாக்கக்கூடய பூஞ்சாணங்கள் வேரைத்தாக்காதவாறு பாதுகாக்கிறது. டிரைக்கோடெர்மா விரிடியானது உயிர் பூஞ்சாணமாக இருப்பதால் பல மடங்கு பெருகி செல்லுலோஸ், கைட்டினேஸ் எனும் நொதிகளை சுரந்து பயிருக்கு நோய் ஏற்படுத்தும் பூஞ்சாணம் மற்றும் பாக்டீரியா செல்களை அழித்து நோய் வராமல் பாதுகாக்கிறது.
கட்டுப்படுத்தும் முறை
தானியப் பயிர்கள் பயறு வகைப் பயிர்கள், எண்ணெய் வித்து பயிர்கள் பருத்தி, மஞ்சள், வாழை, பழவகைகள், காய்கறி பயிர்கள் ஆகியவற்றில் வேர் அழுகல், வாடல், நாற்று அழுகல், கிழங்கு அழுகல் நோய்கள் தாக்காதவாறு சிறப்பாக பாதுகாக்கிறது.
ஒரு கிலோ விதைக்கு 4-5 கிராம் அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு 3 கிலோ என்றளவில்
50 கிலோ மக்கிய தொழு எரு அல்லது மண்புழு எருவுடன் கலந்து நிலத்தில் ஈரப்பதம் இருக்கும்போது இட வேண்டும்.
ரசாயன உரங்களுடன் கலந்து இடக்கூடாது. டிரைக்கோ டெர்மா விரிடியானது சுற்றுப்புறத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாது. உற்பத்தி செலவு குறைவு. எளிமையான முறையில் பயன்படுத்தலாம்.
மண்ணில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது.
உயிர் உரங்களுடன் கலந்து விதைக்கலாம். மண்ணில் மென் மேலும் உற்பத்தியாகி மீண்டும் பயிர்களை பூச்சி மற்றும் பூஞ்சாண வேர் நோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்கிறது. பயிரின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது.
தொடர்புக்கு 9443990964
– த. விவேகானந்தன்
துணை இயக்குனர்
நீர் மேலாண்மை பயிற்சி நிலையம்
மதுரை.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
follow me thanks