நன்மை தரும் பூச்சிகளை உற்பத்தி செய்து பயிர்களை காக்கும் விவசாயி

விவசாயத்தில் நோய் பாதிப்பு, பூச்சி தாக்குதல் ஆகியவற்றை கட்டுப்படுத்த ரசாயன உரம், பூச்சிமருந்து பயன்படுத்துகின்றனர். ஆனால் பூச்சி மருந்து பயன்படுத்திய சில நாட்களிலேயே மருந்து வீரியம் குறைந்து நோய் பரப்பும் பூச்சிகள் அதிகரித்துவிடுகிறது. பயிர்களை பாதுகாக்க முடியவில்லை என விவசாயிகள் புலம்பும் நிலை உள்ளது.

குறிப்பாக பயிர்களில் தண்டுபுழு நோய் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் 40 சதவீத மகசூல் குறையும். இப் பாதிப்பில் இருந்து பயிர்களை காக்க இயற்கை வேளாண் முறையில், நோய் ஏற்படுத்தும் பூச்சிகளை அழித்து, நன்மைதரும் பூச்சிகளை உருவாக்கி விற்பனையிலும், விவசாயத்திலும் சாதித்து வருகிறார் தேனி அன்னஞ்சியை சேர்ந்த பட்டதாரி விவசாயி மோகன்குமார்.

இவர் 2011 ல், 4 ஏக்கரில் ஒருபரு கருனைமுறை தொழில் நுட்பத்தில் கரும்பு நாற்று செய்தார். முதல் வெட்டில் ஏக்கருக்கு 60 டன், 2வது வெட்டில் 75டன் மகசூல் எடுத்து சாதனை படைத்துள்ளார். கரும்பில் பாதிப்பு ஏற்படுத்தி தண்டுபூச்சிகளை அழிக்கும் இயற்கை முறையில் “டிரைகோகிராம்மா ஜாப்னிக்” எனும் பூச்சிகள் மூலம் நோய் பாதிப்பை தடுத்து உற்பத்தியில் சாதனை படைத்தார். இவர் பெற்ற பலனை மற்றவர்களுக்கும் சென்றடையும் வகையில், தண்டுபுழுவை கட்டுப்படுத்தும் பூச்சிகளை உற்பத்தி செய்கிறார்.

விவசாயி மோகன்குமார் கூறியதாவது:

  • அதிக முட்டையிடும் “கார்சீரா’ எனும் பூச்சிகள் மூலம் “டிரைகோகிரம்மா ஜாப்பனிக்’ என்ற முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. இதிலிருந்து வரும் சிறிய பூச்சிகளை கூண்டு வலைகளில் பராமரித்து அதிலிருந்து மிக நுண்ணிய முட்டைகளை பெறலாம். முட்டைகளை மஞ்சள்நிற அட்டையில் ஒரு கியூபிக் மீட்டர் அளவில் சிறிய அட்டையில் 15 ஆயிரம் முட்டைகள் ஒட்டுகின்றனர். இந்த அட்டைகளை ஐந்து நாட்களுக்குள் தண்டு புழு பாதித்த பயிரில் கட்டவேண்டும். அட்டையில் ஒட்டிய முட்டைகள் சூரிய வெப்பத்தில் 2 மணிநேரத்தில் பூச்சியாக மாறிவிடும். இப் பூச்சிகள் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் தண்டு புழுக்களை உணவாக எடுத்து, அழித்து, பயிர்களுக்கு நன்மை தரும் முட்டைகளை செடியில் வைத்துவிடும்.
  • கரும்பில் தண்டு பூச்சி பாதிப்பு இருந்தால் நடவு செய்த 4 வது மாதத்தில் 15 நாள் இடைவெளியில் 3 முறை மஞ்சள் நிற அட்டை கட்டினால் நோய் பாதிப்பு இருக்காது.
  • இதுபோன்ற நன்மை செய்யும் பூச்சிகள், கரும்பு, காய்கறி சாகுபடி, காப்பி, ஏலம் பயிர்களில் தண்டுபுழு பாதிப்பை போக்க பெரிதும் உதவுகிறது.
  • பண்ணையில் நாள்ஒன்றுக்கு 120 சிசி பூச்சிகள் உற்பத்தி செய்கிறேன். இதை சர்க்கரை ஆலைகள் அதிகம் கொள்முதல் செய்கிறது. ஒரு அட்டை ரூ.35 விலைக்கு விற்கப்படுகிறது. பயிரை தாக்கும் மற்ற நோயான மாவு பூச்சி, கத்தாளை பூச்சி ஆகியவற்றை ஒழிக்க இயற்கை பூச்சிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன் என்றார்.

மேலும் விபரங்களுக்கு…09944865516.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *