திருப்பூர் அருகே ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி ஒருவர், 9.18 ஏக்கரில் பனை விதை நட்டு பராமரித்து வருகிறார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் வசிப்பவர் டாக்டர் முகுந்தன். கரும்பு வளர்ச்சி கழகத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்ற பூச்சியியல் வல்லுனர். இவரது மனைவி சூரியகலா.இத்தம்பதியர், மாதப்பூரில் உள்ள தங்களது நிலத்தில், 9.18 ஏக்கர் பரப்பில், பனைமர தோப்பை உருவாக்க முன்வந்துள்ளனர். அவர்கள் கூறியதாவது:பனையில் இருந்து, நீரா, நுங்கு, வெல்லம், கைவினை பொருட்கள் என, 800 வகையான மதிப்பு கூட்டு பொருட்களை தயாரிக்க முடியும்.
தாய்ப்பாலுக்கு அடுத்ததாக, பனங்கிழங்கு பவுடர் நன்மை அளிக்கும். பனை பொருட்களுக்கு, மருத்துவ குணம் அதிகம்; வயிறு சம்பந்தமான பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும். பனை வெல்லம் ஆரோக்கியமானது.பனைமரம் வளர்த்தாலும், ஊடுபயிராக அத்திமரக்கன்று நடுகிறோம். அதனால், இதற்கு, அத்திக்காடு என்று தான் பெயரிட்டுள்ளோம்.
ஐந்து முதல், ஏழு ஆண்டுகளில் பயன் கொடுக்கும், மூன்று வகையான பனம் பழங்களை தேர்வு செய்தோம். பயன் கிடைக்கதாமதம் ஆனாலும், 80 ஆண்டுகள் வரை, அறுவடை செய்ய முடியும். அலையாத்தி காடுகளை போல், பேரிடர் நேரத்தில் நம்மை பாதுகாப்பதாகவும் இருக்கும். பனையின் சல்லி வேர், 100 அடி மண்ணுக்குள் சென்று, மழைநீரை நிலத்திற்குள் சேமிக்கும் சக்தி வாய்ந்தது.
சாத்துார் ஜமீனில் இருந்து வாங்கி வந்து, 5,500 பனம் பழங்கள் நடவு செய்துள்ளோம். மூன்று, ‘போர்வெல்’ அமைத்துள்ளோம்.ஒரு ஏக்கரில், 500 பனை மரம் வளர்த்தால், 15 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும். மொத்தமாக, ஒரு கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டவும் முடியும். மதிப்பு கூட்டிய பனை பொருட்களை, உள்ளூரிலேயே விற்று பணமாக்க முடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்