பூவின் மணம் மகிழ்வளிப்பதால், மகிழம் என்று நயமாக அழைக்கப்பட்டாலும் இந்தத் தாவரம் `வகுளம்’ என்ற தமிழ்ப்பெயரின் மரூவுச் சொல்தான். சங்க இலக்கியத்தின் குறிஞ்சிப்பாட்டு (பாடல் 70), பரிபாடல் (12:79), திணைமாலை நூற்றைம்பது (24) ஆகிய மூன்றில் மட்டும் ஒவ்வொரு இடத்தில் வகுளம் சுட்டப்பட்டுள்ளது.
பரிபாடலின் திரட்டுப்பாடல் ஒன்றில் மகிழம் என்ற சொல் வருவதால், அந்தக் காலகட்டத்திலேயே வகுளம், மகிழமாக மருவிவிட்டது எனக் கொள்ளலாம். சங்க இலக்கிய உரையாசிரியர்களும் மகிழத்தை வகுளத்தின் பொருளாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தோ மலேசியத் தாவரம்
ஆனால், இடைக்கால, பிற்காலத் தமிழ் இலக்கியங்களில் மகிழம் பரவலாக இடம்பெற்றுள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலின் தலப் புராணத்தின்படி மகிழம் என்ற சொல் மங்கலம் (வளமை, புனிதம், முழுமை) என்ற பொருள்படும். மகிழத்தின் மற்றொரு தமிழ்ப்பெயர் இலஞ்சி (வகுளம் இலஞ்சி மகிழ்மரமென்ப – சேந்தன் திவாகரம்) ஆகும். இந்தச் சொல்லைத் திருவிளையாடல் புராணம் கையாண்டுள்ளது (தாதவிழ் மல்லிகை முல்லை இலஞ்சி தடங்கோங்கம்), கம்பரும் கையாண்டுள்ளார்.
இலஞ்சி என்ற தமிழ்ச்சொல் இந்தத் தாவரத்தின் தாவரவியல் பெயரான மிமுசாப்ஸ் இலஞ்சி (Mimusops elengi: Sapotacea – தாவரக் குடும்பம்) என்பதில் சிற்றினப் பெயராகச் சேர்க்கப்பட்டிருப்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. இந்தோ – மலேசியத் தாவரமான மகிழம், கிழக்கு மலைத்தொடரில் மிகவும் பரவலாகக் காணப்படுகிறது.
இலக்கியம் போற்றிய மலர்
கந்தமதானா காட்டிலும், இந்திரபிரஸ்தாவிலும் இது வளர்ந்து காணப்பட்டதாக மகாபாரதம் குறிப்பிடுகிறது. காளிதாசரின் காவியங்களிலும் மகிழம் சுட்டப்பட்டுள்ளது. மகிழம் குறிஞ்சி நிலத் தாவரம்; பால் (milky latex) கொண்ட பெரிய, பசுமையிலை மரத் தாவரமான இது குறிஞ்சி நிலத்தில் தினை விதைப்பதற்காக வெட்டப்பட்டதாகத் திணைமாலை நூற்றைம்பதில் (24:1) (நறுந்தண் தகரம் வகுளம் இவற்றை) கணிமேதையார் காட்டியுள்ளார். குறிஞ்சி மலைப்பகுதியில் இது வளர்வதைப் பரிபாடல் திரட்டு (1:7,9) சுட்டுகிறது (அணிமலர் வேங்கை மராஅம் மகிழம்… மணி நிறங் கொண்ட மாலை).
மார்ச் முதல் ஜூன்வரை பூக்கும் கோட்டு மலரான மகிழம்பூ சிறியது, அழகிய அமைப்புடையது, மங்கிய மஞ்சள் நிறம் கொண்டது, மிகுந்த மணமுடையது. இந்த மலரின் வடிவத்தைத் தேர்க்காலின் வடிவத்துக்கு ஒப்பிடுகிறார் திருத்தக்க தேவர் (கோடுதையாக் குழிசியோ டாரங் கௌக்குயிற்றிய ஓடு தேர்க்கால் மலர்ந்தன வகுளம் – சீவகசிந்தாமணி). மகரந்தச் சேர்க்கைக்குப் பின்பு இதன் மலர் காம்பிலிருந்து கழன்று, ஒரு சிறு சிலந்திப் பூச்சி கீழே விழுவதைப் போன்று வீழ்கிறது என்றும் சீவக சிந்தாமணி (2108) கூறுகிறது (மதுகலந்தூழ்ந்துச் சிலம்பி வீழ்வன போல மலர் சொரிவன வகுளம்).
ராமன் உருவை அனுமன் வாயிலாகக் கம்பர் விவரிக்கும்போது அவனுடைய கொப்பூழை இந்தப் பூவுக்கு ஒப்பிடுகிறார் (பூவொடு நிலஞ்சுழித்தெழுமணி உந்திநேர்; இனி இலஞ்சியம் போலும் வேறுவமை யாண்டாரோ).
மலரில் அதிகத் தேன் காணப்படும். இந்தப் பூ சுழன்று வீழ்ந்து செவ்வந்தியோடு சேர்ந்து காய்ந்து கிடக்கும்போதுகூட இதன் தேனுக்காக வண்டுகள் மொய்த்தன என்று திருத்தக்கதேவர் கூறுகிறார் (மலர்ந்த செவ்வந்திப்போதும் வகுளமும் முதிர்ந்து வாடி உலர்ந்து மொய்த்தனித்தேன் நக்கிக்கிடப்பன – சீவகசிந்தாமணி). ஆசாராங்கா சூத்ரம் என்ற வடமொழி நூலில் நாள்பட்ட தேன் / சாராயம் ஊற்றினால் வகுளம் பூக்கும் என்று குறிப்பிட்டிருப்பதை இங்குக் குறிப்பிட வேண்டும். சுரபாலரும் தன்னுடைய விருக்ஷாயுர்வேத நூலின் 147-வது பாடலில் இதைப் பற்றி சுட்டிக்காட்டியுள்ளார். மகிழத்தின் கனி முற்றிலும் பழுத்த நிலையில் சிவப்பு நிறங்கொண்டது.
மகிழம், ஆன்மிக முக்கியத்துவம் கொண்ட ஒரு மரம். இந்து, புத்த, சமண மத மக்களுக்கு இது புனித மரம். இந்து மத வழக்கத்தின்படி சிவபெருமானுக்கு உரிய மரம். எனவே, சிவத்தலங்களில் இது பரவலாக வளர்க்கப்படுகிறது (பெரும்பாலும் தலமரமாக); அதன் காரணமாக இதன் பூ `சிவமல்லி’ என்றும் அழைக்கப்படுகிறது. `வகுளா’, `பகுளா’ என்பவை சிவபெருமானின் வேறு பெயர்கள். மகிழ மரம் முருகன், திருமாலுடனும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.
ஆன்மிக முக்கியத்துவம்
திருப்புனவாசல், திருஇராமனதீச்சரம், திருவண்ணாமலை, திருக்கண்ணன்குடி, திருக்கண்ணமங்கை, திருநீடூர், திருநறையூர், திருவொற்றியூர், திருவெஃகா ஆகிய கோயில்களில் மகிழ மரம் தல மரமாகக் காணப்படுகிறது. திருக்கண்ணன்குடியில் காலை, மாலை பூஜைகளிலும், திருக்கண்ணமங்கையில் மார்கழி மாத உற்சவத்துக்குப் பின்பு பத்து நாட்களுக்கு மாலை பூஜைகளிலும் மகிழம் பூ முக்கியத்துவம் பெறுகிறது. கேரளத்தின் சில சிவன் கோயில்களில் (வடக்கும்நாத க்ஷேத்திரத்தில்) பூரம் திருவிழா இந்த மரத்தின் அடியில் நடைபெறுகிறது. சந்திரமுகன் என்ற யக்ஷன் இந்த மரத்தில் உறைந்து காணப்படுவதாகக் கருதப்படுகிறது. மகிழம் பூ நம்மாழ்வாருக்கு உரிய சிறிய பூ என்பதை அவரே “… வன்குரு கூரான் நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்” (திருவாய்: 4: 10, 11) என்று பாடியுள்ளார்.
புத்தரோடு தொடர்புடைய ஏழு புனித மரங்களில் மகிழமும் ஒன்று. சாஞ்சி, அமராவதித் தூண்களில் பூக்களுடன் கூடிய மகிழ மரங்கள் காட்டப்பட்டுள்ளன என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. சமணர்களுக்கும் மகிழம் ஒரு புனித மரமே. சமணத் தீர்த்தங்கரர்களில் ஒருவரான நேமிநாதரின் முத்திரையாக மகிழம் திகழ்கிறது. அவர் இந்த மரத்தடியில்தான் ஞானம் பெற்றதாகக் கருதப்படுகிறது.
மகிழ மரத்தின் பயன்கள்
மகிழம் மிகவும் பயன் தரும் ஒரு மரம். மகிழ மரத்தின் வெவ்வேறு உறுப்புகள் பயன் நல்குகின்றன.
மகிழம் பூவின் போதையூட்டும் மணம் (பல உயர்ரகச் சாராய வகைகளைப் போன்று) ஆண், பெண் இருவரிடமும் வயாக்ரா போலக் காம உணர்வைத் தூண்டுவது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
மதுர ரசத்தில் கோரைக்கிழங்கு, முள்முருக்கு பூக்கள், நந்தியாவட்டை பூக்கள் அல்லது இலை சாற்றைக் கலந்து, அதில் மகிழ மரப் பூக்களை இட்டுப் பின்பு கொழுப்பு, பால், கோஷ்டம் ஆகியவற்றைக் கலந்தால் மகிழம்பூவின் இயல்பு மணம் மேலும் பெருகும் என்று விருக்ஷாயுர்வேதம் நூலில் சுரபாலர் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி: ஹிந்து
மகிழம் பற்றி மேலே தெரிந்து கொள்ள –
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
One thought on “மகிழ்விக்கும் மகிழம்!”