மரங்களே தனது வாழ்க்கைத் துணை எனக் கருதி, கடந்த 13 ஆண்டுகளாக மரம் நடுதலை ஒரு அறமாக மட்டுமின்றி, தான் சார்ந்த கிராம மக்களையும் அதில் இணைத்து வெற்றிக் கண்டிருக்கிறார் பெருமுளை கிராமத்தின் அறிவழகன்.
அடிக்கடி இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்ளும் கடலூர் மாவட்டத்தின் மேற்குப் பகுதி வறண்ட பகுதி. மாவட்டத் தலைநகரிலிருந்து 90 கிமீ தொலைவில் இருக்கும் திட்டக்குடி பகுதிக்கு அரசு அதிகாரிகள் வந்து செல்வதென்பது, அத்தி பூத்தாற்போல நடைபெறும் ஒரு நிகழ்வு.
அரசு சார்ந்த நலத்திட்ட உதவிகளோ, கிராம வளர்ச்சிக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்வதிலோ புறக்கணிக்கப்பட்ட ஒரு பகுதியாகத்தான் இன்றைக்கும் விளங்குகிறது என்கிறார்கள் அப்பகுதி மக்கள். இங்கிருந்து 3 கிமீ தொலைவில் இருக்கிறது 5 ஆயிரம் மரங்கள் சூழ்ந்த பெருமுளை கிராமம்.
கிராமத்துக்கு நாம் சென்றபோது தலைப்பாகையுடன் சிங்கப்பூர் பெரியசாமியும், அறிவழகனும், சாலையோரம் நடப்பட்டிருந்த மரக்கன்றுகளை பராமரித்துக் கொண்டிருந்தனர்.
“பூமியில் மூன்றில் ஒரு பங்கு காடுகள் இருக்க வேண்டும் என்பது இயற்கையின் விதி. இவ்வாறு இருந்தால் நமக்கு கிடைக்கும் பயன் அதிகம். காடு கள் மழையைத் தருவதுடன் நிலச்சரிவையும் மண் அரிப்பையும் கட்டுப்படுத்துகிறது. வளிமண்டலத் தில் கரியமில வாயுவின் அளவை நிர்ணயம் செய்யும் தன்மை மரங்களுக்கு உள்ளது.
புவியின் தட்பவெப்பத் தன்மையை நிர்ணயிக்கும் காரணிகளாக காடுகள் உள்ளன என்பதை நான் அறிந்தாலும் பாமர மக்களாகிய எங்கள் கிராம மக்களுக் கும் அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று முயற்சி எடுத்து ‘பசுமைத் தூண்’ எனும் இயக்கத்தை உருவாக்கினோம். இந்த இயக்கத்தின் மூலம் இயற்கை ஆர்வலர்களை ஒருங்கிணைத்து எங்கள் கிராம மக்களையும் இணைத்து பசுமையாக்கி வருகிறோம்’’ என்று கூறினார் அறிவழகன்.
ஆடு மாடுகளுக்குத் தேவை யான தண்ணீர் வசதியும் அதற்குண்டான உணவுக்கு வழிவகையை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி, நீர் நிலைகளை தூர்வாரினோம். தூர் வாரிய கையோடு மரக்கன்றுகளை நட்டோம். சாலையோரம், அரசு அலுவலகங்கள், பள்ளிக் கூடங்கள், நீதிமன்ற வளாகம், ஏரிக் கரைகள், வாய்க்கால் கரைப்பகுதிகள் என அனைத்து இடங்களிலும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறோம்.
இடு காட்டையும் இயற்கைச் சூழலுக்கு மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளோம். இதில் என் பங்கு என்பதைக் காட்டிலும் கிராம இளைஞர்களின் ஈடுபாடுதான் அதிகம்.
துபாய் ரவி, சிங்கப்பூர் பெரியசாமி, கோழியூர் செல்வராஜ், பெருமுளை பெரியசாமி ஆகியோரின் களப்பணிகளால் எங்கள் கிராமம் சற்றே விழிப்புணர்வு பெற்றிருக் கிறது. தற்போது பெருமுளை ஏரியில் தண்ணீரும் நிரம்பியிருக்கிறது. நாங்கள் நட்ட மரங்களும் நிழல் தருகிறது. இதுதான் நாங்கள் அடுத்தத் தலைமுறையினருக்கு விட்டுச் செல்லும் சொத்து’’ என்கிறார்.
உடன் இருந்த பெரியசாமி, “பிறந்தநாள், கல்யாணம், காதுகுத்து, சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட எந்த விழா நடைபெற்றாலும் மறக்காமல் மரக்கன்று வழங்கி வருகிறோம். ஒரு மாணவன் பள்ளிக்கு இனிப்புக் கொண்டு செல்வதைக் காட்டிலும், அன்றைய தினம் அந்த மாணவன் பள்ளியிலோ அல்லது ஊரின் பொது இடத்திலோ மரக்கன்றுகளை நடுவதை அவசியம் என்று வலியுறுத்தி வருகிறோம்.
இலுப்பை, புங்கை, நாவல், மா போன்ற மரக் கன்றுகளை இலவசமாக வழங்கி வருகிறோம். இதில் எங்கள் கிராம பெண்களின் ஈடுபாட்டையும் சொல்லித்தான் ஆகவேண்டும். 100 நாள் வேலைக்கோ அல்லது வயல் வேலைக்கோ செல்லும் பெண்கள் அந்த வேலையை முடித்துக் கொண்டு, திரும்ப வரும்போது சாலையின் ஓரத்தில் நடப்பட்ட கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்கின்றனர்’’ என்கிறார்.
இப்படியாக ஊர் கூடி தேர் இழுத்து, கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு, அதில் ஏறக்குறைய 3 ஆயிரம் மரங்கள் தற்போது நிழல் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கின்றன. இனி பறவைகளுக் கும் இடம் கிடைக்கும்.
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்