நேற்று பருத்தி… இன்று கடுகு… நாளை?

கடந்த மாதம் ஜி.இ.ஏ.சி என அழைக்கப்படும் ‘மரபணு மாற்று பயிர்களுக்கான அனுமதியளிக்கும் குழு’, மரபணு மாற்று கடுகிற்கு அனுமதி வழங்கலாம் என மத்திய சுற்றுச்சூழல் துறைக்குப் பரிந்துரைத்துள்ளது.

இதையடுத்து எப்போது வேண்டுமானாலும் மரபணு மாற்றுக் கடுகுக்கு அனுமதியளிக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

விரைவில் மரபணு மாற்ற கடுகு விவசாயிகளின் விளைநிலங்களுக்கு வரலாம் என்ற நிலையும் உருவாகியுள்ளது. இது சம்பந்தப்பட்ட வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு அனுமதிக்கப்பட்டால் உணவுப்பொருள் உற்பத்தியில் அனுமதிக்கப்பட்ட முதல் மரபணு மாற்ற பயிராக கடுகு இருக்கும்.

ஆனால், கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது பி.டி கத்தரிக்காய்க்கு இக்குழு அனுமதி வழங்கி, மக்கள், விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பின் காரணமாக அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தடை விதித்ததும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல பி.டி பருத்திக்கு அனுமதி வழங்கப்பட்டு அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது. இதுபற்றி மரபணு மாற்று பயிர்களுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் விவசாய மற்றும் சமூக ஆர்வலர்களிடம் பேசினோம்.

பி.டி பருத்தி

பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர், அனந்து பேசும்போது, “அடிக்கடி கிளம்பும் பிரச்சனைதான் இம்முறையும் கிளம்பியிருக்கிறது. இம்முறை மரபணு மாற்றுக் கடுகைக் கொண்டு வருவதற்கான முழுமுயற்சியுடன் இறங்கியிருப்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஜி.இ.ஏ.சி தங்களது அறிக்கையைச் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் சமர்பித்து விட்டது. தற்போது முடிவெடுக்க வேண்டியது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்தான். சென்றமுறை பிடி கத்தரி தடைசெய்யப்பட்டதற்குச் சொல்லப்பட்ட காரணங்கள், விளக்கங்கள் மற்றும் பரிசோதனைகள் ஆகியவற்றுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. மரபணு மாற்றுக் கடுகு கொண்டுவர மத்திய அரசு மூன்று காரணங்களை முன் வைக்கிறது. இந்தியாவில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி அதிகம் இல்லை. அதனால் வெளிநாடுகளில் இருந்து அதிகமான எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. அது சரிதான், 60,000 கோடி ரூபாய் அளவுக்கு இறக்குமதி செய்கிறோம். ஆனால், அதில் 80% பாமாயில், சோயா கடுகு எல்லாம் சேர்த்து 10 சதவீதம்தான். கடுகு மட்டும் தனியாக எடுத்தால் 1.6 சதவீதம் மட்டும்தான் இறக்குமதி செய்கிறோம். வெறும் 1.6 % எண்ணெய்க்காக மரபணு மாற்றுக் கடுகைக் கொண்டு வருகிறோம் என்று சொல்வதெல்லாம் விஷயத்தை மூடிமறைப்பதற்கக்ச் சொல்லப்படும் பொய்.

அடுத்தது, மரபணு மாற்றுக் கடுகு மகசூலை அதிகபடுத்துகிறது என்று அனுமதியளிக்கும் குழு சொல்கிறது. ஆனால், இந்தியா முழுவதும் உள்ள வேளாண் பல்கலைக்கழகங்களில் உள்ள பண்ணையில் பாரம்பர்ய ரக கடுகுகளை ஆராய்ச்சி செய்தபோது, 58 சதவீதத்திலிருந்து 145 சதவீதம் வரை மகசூல் கிடைக்கிறது. அனந்து

அதிக மகசூல் கிடைப்பதற்காகச் சிறிய தொழில்நுட்ப முறைகளைக் கையாண்டார்கள். செம்மை நெல் சாகுபடி போன்றே செம்மை கடுகு சாகுபடி முறையில் பாரம்பர்ய கடுகினைச்  சாகுபடி செய்தால் மகசூல் அதிகமாகக் கிடைக்கிறது, இதற்கு ஆதாரங்களும் உள்ளன. ஆனால், மரபணு மாற்றுக் கடுகில் 25 சதவீதம்தான் மகசூல் கிடைக்கிறது. வெறும் 25 சதவீத மகசூலுக்காக இதுவரை 100 கோடி ரூபாய் செலவழித்திருக்கிறார்கள். பாரம்பர்ய விதைகளிலேயே அதிகமாக மகசூல் எடுக்கலாம் எனும்பொது, 25 சதவீதம் மகசூல் கொடுக்கக்கூடிய மரபணு மாற்றுக் கடுகு எதற்கு என்ற கேள்வி எழுகிறது. இங்கே களைக்கொல்லிகளை நிறுத்த வேண்டும் என அனைவரும் சொல்லிவரும் வேளையில் களைக்கொல்லிகளைத் தாங்கி வளரக்கூடிய பயிராக மரபணு மாற்றுக் கடுகு சொல்லப்படுகிறது. களைக்கொல்லி தாங்கி வளரும் என்பதால் விவசாயிகள் அதிகமாகக் களைக்கொல்லி உபயோகிக்க ஆரம்பிப்பர். அந்த களைக்கொல்லியை விற்பதும் விதைகளை விற்கும் அதே நிறுவனம்தான். இது சுற்றுச்சூழல் சமநிலையை நிச்சயமாக பாதிக்கும். இதனால் பிரச்னைகள் இரட்டிப்பாகிறது. இதே மரபணு மாற்றுப் பயிரை 2002-ம் ஆண்டு பேயர் நிறுவனம் அறிமுகப்படுத்தும்போது, ஜி.இ.ஏ.சி மேற்கண்ட அனைத்து காரணங்களையும் சொல்லி வேண்டாம் என்றது. ஆனால், இப்போது டெல்லி பல்கலைக்கழகத்தின் பெயரால் இந்தக் கடுகு கொண்டுவரப்படுகிறது. இதில் பயன்படுத்தப்படும் மரபணுக்களின் காப்புரிமை இன்னும் மாண்சான்டோ, பேயர் நிறுவனங்களிடம்தான் உள்ளன.

இப்போது வரும் மரபணு மாற்றுக் கடுகும் பேயரின் களைக்கொல்லியைத் தாங்கக் கூடியதாக இருக்கிறது. இதனால் அந்நிறுவனத்துக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கிறது. ஆனால், அரசாங்கமும், ஜி.இ.ஏ.சி-யும் இது பாரம்பர்ய கடுகிலிருந்துதான் எடுக்கப்படுகிறது எனச் சொல்கின்றன, ஆனால், டெல்லி பல்கலைக்கழகமா விற்பனை செய்யப் போகிறது. விதைகள் கார்ப்பரேட்டுகளின் கையில்தான் போகும். இதுதவிர, கடுகுக்குப் பின்னர் வரிசையாக மரபணு மாற்றப் பயிர்கள் இந்தியாவுக்குள் நுழையும். கிட்டத்தட்ட மாண்சாண்டோ 40 வகையான பயிர்களைத் தன் வசம் வைத்துள்ளது. ஒரு நீண்டகால ஆராய்ச்சி செய்யாமல் ஒரு பொருளை எப்படி வழங்க முடியும். இது எல்லாமே கார்ப்பரேட்டுகளின் வியாபார யுக்திதான்” என்றார்.

தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர், அறச்சலூர் செல்வம் பேசும்போது, ‘பன்னாட்டு விதை நிறுவனங்கள் டெல்லி பல்கலைக்கழகத்தை முன்னிறுத்தி தனது திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. மத்திய சுற்றுச்சூழல்துறைதான் அறச்சலூர் செல்வம்தற்போது முடிவெடுக்க வேண்டும். மரபணு மாற்று கடுகு ரகமானது, இயல்பிலேயே பல சிக்கல்களைத் தனக்குள் கொண்டுள்ளது. பிடி கத்தரிக்காயைத் தடை செய்தபோது சொன்ன காரணங்கள் எதுவும் இப்போது நிரூபிக்கப்படவில்லை. இந்த ஒரு பயிரை இந்தியாவுக்குள் ஊடுருவ விட்டாலே போதும். இதைக் காரணமாக வைத்து அனைத்து வகையான காய்கறிகளையும் இந்தியாவுக்குள் கொண்டு வந்துவிட முடியும். இதுதான் பன்னாட்டு நிறுவனங்களின் நோக்கமும்கூட. மரபணுமாற்றம் செய்யப்பட்ட கடுகில் பார்னேஸ், பார்ஸ்டார் மற்றும் பார் என்ற மரபணுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த மரபணுக்களுக்குப் பேயர் நிறுவனம் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் காப்புரிமை பெற்றுள்ளன. இந்த மரபணுக்களைப் பயன்படுத்துவதற்கு பன்னாட்டு நிறுவனங்கள் டெல்லி பல்கலைக்கழகத்துடன் செய்த ஒப்பந்தங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. மகசூல் அதிகமாகக் கொண்டு வருவதற்காகத்தான் மரபணுமாற்ற கடுகு என்பதெல்லாம் பொய். நம் நாட்டிலேயே அதிக மகசூல் கொடுக்கக்கூடிய பாரம்பர்ய ரகங்கள் ஏராளமாக இருக்கிறது. அத்துடன் மரபணு மாற்றுக் கடுகை 30 ஆண்டுகளுக்கு முன்னர் இருக்கும் ரகங்களோடு ஒப்பிட்டுள்ளனர். அவர்கள் ஒப்பீடு செய்யும் ரகங்களை விட அதிக மகசூலைக் கொடுக்கக் கூடிய ரகங்கள் ஏராளமாக உள்ளன. எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கத்தான் இந்த மரபணு மாற்றுக் கடுகு என ஜி.இ.ஏ.சி சொல்லும் காரணம் எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

பார்னேஸ் மரபணு செடிகளில் உள்ள ஆண் மலட்டுத்தன்மையை உருவாக்கும். அதனால், பார்னேஸ் மரபணுவை உலக வேளாண் அமைப்பு தடை செய்துள்ளது. இருந்தும், பார்னேஸ் மற்றும் பார் ஸ்டார் ஆகிய மரபணுக்களுக்கு மட்டும்தான் உயிரிப் பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டுள்ளது.

மரபணு மாற்றப்பட்ட கடுகு தமிழ்நாட்டுக்கு வருவதை தமிழக அரசு தடுக்க முயற்சி வேண்டும். இதுதவிர பாராளுமன்ற எம்.பிக்களை வைத்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாம். தமிழகத்தினுடைய நிலைப்பாட்டை மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும். இதுதவிர மரபணு மாற்றுக் கடுகை தமிழக கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்” என்றார்.

நன்றி: ஆனந்த விகடன்

மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் பற்றிய சர்ச்சைகளை புரிந்து கொள்ள இங்கே உள்ள பதிவுகளை படிக்கவும்.


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *